தவறின் மறுபெயர் மனிதன்

விண்ணைத் தாண்டும் விஞ்ஞா னத்தால்
==வியக்க வைத்துப் பார்க்கிறான்
மண்ணை ஆளும் அரசை போன்று
==மக்களை மாக்கள் ஆக்குகிறான்
கண்ணை கவரும் அபிநயத் தாலே
==கருத்தில் நிலைக்கத் துடிக்கிறான்
பண்ணை நிற்கும் கால்நடை போலே
==பகுத்தறி வின்றி வாழ்கிறான்

யுத்தம் பூண்டு ரத்தம் சிந்த
==யுகயுக மாக தவிக்கிறான்
சித்தம் எங்கும் பேதமை வளர்த்து
==செல்வம் தேடிக் களிக்கிறான்
கத்தும் மழலை பசியைக் கண்டும்
==கண்ணை மூடிக் கொள்கிறான்
புத்தன் போலே யாவும் முடிந்து
==போதனை வேறு செய்கிறான்

நாளைக் கென்றே இன்றில் சேர்த்து
==நடுநிஷி யாவும் விழிக்கிறான்
தேளைப் போலே விஷத்தை வைத்து
==தினமும் கொட்டிப் பார்க்கிறான்
தோளைத் தாங்கும் தோழமை தனையும்
==துரோகத் தாலே புதைக்கிறான்
ஆளைக் கொள்ளும் அநியாயத் தாலே
==அகிலம் ஆட்டிப் படைக்கிறான்

தன்னை மிஞ்சிட முடியா தென்னும்
==தலைக்கனத் தாலே மிதக்கிறான்
அன்னை தந்தை உறவைக் கூட
==அலட்சிய மாகப் பார்க்கிறான்
தென்னை போல வளர்ந்தி ருந்தும்
==திமிரை அடக்க மறுக்கிறான்
மின்னல் போலே ஆகும் வாழ்வில்
==மென்மை வளர்க்க மறுக்கிறான்

கையில் கொஞ்சம் காசை வைத்து
==கனவான் போலே மிதக்கிறான்
பொய்யில் புரட்டில் உழன்று நாளும்
==புகழில் மயங்கிக் கிடக்கிறான்
செய்யும் தொழிலில் நேர்மை தன்னை
==சேர்த்துக் கொள்ள மறக்கிறான்
மெய்யில் உள்ளக் காற்றுப் போனால்
==மீதம் என்ன மறுக்கிறான்.

மருத்துவம் கல்வி இரண்டிலும் காசை
==மட்டும் எண்ணப் பார்க்கிறான்
தெருத்தெரு வாகப் பிச்சை எடுக்கும்
==தொழிலிலும் கோடி சேர்க்கிறான்
கருத்தினில் நாளும் காசினை வைத்தே
==கனவுகள் நூறு காண்கிறான்
திருத்திட முடியா திருடன் இவனே
==தெய்வம் தனையும் படைக்கிறான்

சத்தியம் தன்னை சாக்கடை யாக்கி
==சந்தோ சங்கள் காண்கிறான்
நித்திய தொழிலாய் பிறரின் வாழ்வின்
==நிம்மதி கெடுத்துப் பார்க்கிறான்
கத்திகள் இன்றி ரத்தம் சிந்தும்
==கௌரவ சண்டை புரிகிறான்
வித்தகன் இவனோ விலங்கிலும் கீழாய்
==வேட்டை யாடிப் பிழைக்கிறான்

இயற்கை வழங்கிய கொடைகள் தன்னை
==இயந்திரத் தாலே அழிக்கிறான்
இயற்கை கொஞ்சம் சீற்றம் கொள்ள
==எழுந்து வணங்கிக் கொள்கிறான்
தயக்கம் இன்றே எதையும் செய்து
==தன்னலம் காக்கத் துடிக்கிறான்
மயக்கம் தெளியும் வகைகள் இருந்தும்
==மயக்கம் போலே நடிக்கிறான்

எல்லாம் தெரிந்த ஞானியைப் போலே
==எதிலும் முன்னில் நிற்கிறான்
பொல்லாப் பெதுவும் நிகழும் என்றால்
==பொதுவாய் நழுவிக் கொள்கிறான்
இல்லா தோரை கண்டால் போதும்
==ஏளன மாகப் பார்க்கிறான்
கல்லா திருந்தும் நடிப்பில் பெரிதாய்
==கற்றவன் போலே ஜொலிக்கிறான்

மனிதன் என்னும் பெயரில் உலவும்
==மிருகம் என்றால் முறைக்கிறான்
புனிதன் என்னும் போர்வை போர்த்தி
==புதுமை ராகம் இசைக்கிறான்
இனிக்கும் விதத்தில் கசப்பை கொடுக்க
==இதயம் மூடி வைக்கிறான்
தனித்து நின்று சிந்தனை செய்தால்
==தவறின் மறுபெயர் மனிதனாம் !

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (6-Dec-13, 3:00 am)
பார்வை : 153

மேலே