மாத்தி யோசி----அஹமது அலி----

உலோகங்களோடும்
உலகை சுருக்கிய கணினியோடும்
உருகி உழைத்து உழைத்து
உயிர் துரு பிடித்துப் போகும்
இயந்திரப் பொறியாளர்களே!
*)))
பொய்கள் நிறைந்து விட்ட
போலி உலகின் முன்
மெய்கள் நிலைக்க
பொய்களை காட்டிக் கொடுக்க
மெய்யாய் ஒரு இயந்திரம்
தருவீரா......?
*)))
சமநீதி சட்டங்களை
சரிநிகர் சமானமாக தந்து
சாமானியருக்கும் ஒரே நீதி சொல்ல
இயந்திர நீதி மன்றங்கள்
தருவீரா...?
*)))
ஏவல் துறைகளாக இயங்கும்
காவல் துறைகள் காவலில்
பாரபட்சமின்றி சகலருக்கும்
காவலர்களாக இருக்க
இயந்திர காவலர்களை
தருவீரா....?
*)))
கையூட்டால் கறை படிந்த
அரசு எந்திரங்களான
பணப் பேய்களுக்கு பாடம் புகட்ட
கையூட்டு வாங்கும் நொடியில்
கைவெட்டும் இயந்திரமொன்றை
அவர் தம் கையில் பொருத்த
தருவீரா.....?
*)))
போலி வழக்குகளில்
பொய்யில் சோடித்த குற்றங்களில்
நிரபராதிகளை நிச்சயமாக
உள்ளே அனுமதிக்காத
சிறைச்சாலைகளை
தருவீரா...?
*)))
பொய்களை புரட்டுகளை
புழுகுகளை அச்சேற்றியே
சமுதாய சீரழிவை உருவாக்கும்
ஊடக விபச்சாரம் புரியும்
ஊடகங்களுக்கு சாவு மணியடிக்க
பொய்களை அச்சேற்றா
அச்சு இயந்திரங்களை
தருவீரா...?
*)))
காற்றில் நச்சு பரப்பாத
சுற்றுச் சூழல் மாசு படாத
தொழில்முறை இயந்திரங்களை
விரைவினில் தந்து
உலகை நீண்ட நாட்கள்
உயிர் வாழ விடுவீரா....?