தேவதை அகராதி

தேவதை அகராதி
=================
இயல்புகள் தடுமாறி மிதக்கின்றேன்
யாரோ என்னை தூக்கிச் செல்வதாக ம்ம்ம்
ஏணி முளைத்திருக்கின்றது என் கால்களில்
காதலின்றி உறையும்
மொட்டை மாடி நிலமொன்று
அடம் பிடிக்கிறது
அம்மாவாசைகள் தோறும்
அங்கே வா என்று உன்னிடம்
கண்களால்
பார்க்கத்தான் செய்கிறாய் என்றேன்
தவறென்றது வேதியல்
அவைகள் பேசியதால்
இலக்கணம் களைந்து
நிர்வாணமாகின என் கவிதைகள்
பதித்த முத்தங்களில்
பனி எது பரிதி எது என்றாய்
நீ பனித்த பொழுதினில்
அவ்விரண்டையும்
விடையின்றி திரும்பத் தந்தேன்
தெரிந்திருக்கவில்லை முன்பெல்லாம்
சொற்களும் வேவு பார்க்கிறதென்று
எல்லோரிடத்திலும்
காண்பிக்கின்ற உன் இயல்பு
என்னிடத்தில் மட்டும்
இல்லாமல் நழுவியதைக் கண்டு
காணாமலேயே போகிறதாம்
என் கவிதைகள்,,,
எழுதிய நொடிதனில்
அவை உன்னிடம் பெயர்ந்திட்டதால்
அழுகின்றன
எழுத எழுத வெறுமை யுறும்
வெற்றுத்தாள்கள் இதைச் சொல்லி
வார்த்தை ஊனங்களை சரிசெய்துவிடவா
இந்த அறிமுகம் உண்டாக்கினாய்
இன்று என் வார்த்தைகளெல்லாம்
றெக்கை கட்டி பார்க்கிறதே
வர்ணனைகளாக
முயங்கித்தீர்ந்த மழைத்துளிமீதங்களை
மரக்கிளைகள் சிந்துகிறதைப் போல
தூறிக்கொண்டே இருக்கின்றன
உன்சிறு முத்தங்கள்
என் குட்டி குட்டி கனவுகளில் எல்லாம்
அனுசரன்