புத்தி சிகாமணியின் புதிய சிந்தனை
அரசியல் சட்டங்கள் திருத்தப் படவேண்டும். நம் நாட்டில் அரசியல் கட்சிகள் பற்பல. தேசிய கட்சிகள் சில. மாநில கட்சிகள் பல. அரசியல் கட்சிகள் பெரும் வாக்குகளை வைத்து ஒரு கட்சி மாநில கட்சியா அல்லது தேசியக் கட்சியா என்பதை நிர்ணயிக்கும் பொறுப்பு தேர்வாணையத்திடம் உள்ளது.
மாநில, மத்திய அரசு தேர்தல்கள் வந்துவிட்டால் போதும், பல அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை தொகுதி வாரியாக அறிவித்து விடுகின்றனர். இவர்களைத் தவிர, பலர் சுயேச்சைகளாக நின்று போட்டியிடுகின்றனர்.
பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் தேசிய கட்சிகள் குறைந்த பட்சம் 300 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட வேண்டும். மாநிலக் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடத் தகுதியற்றவர்களாகச் செய்தல் வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மாநிலக் கட்சி, முப்பது அல்லது 40 தொகுதிகளில் வெற்றி பெறுவதன் மூலம் மத்தியில் அவர்களால் எப்படியும் ஆட்சி அமைக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. மாநிலத் தேர்தல்களில் தேசியக் கட்சிகள் பங்கு கொள்வதில் தவறில்லை. மாநிலத் தேர்தகளில் போட்டியும் ஒவ்வொரு கட்சிகளும் குறைந்த பட்சம் மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று சட்டம் இயற்றப்படவேண்டும். சுயேச்சைகளுக்கு மாநிலத் தேர்தல்களிலும் போட்டியிடும் உரிமை தரலாகாது.
மாநகராட்சி, முனிசிபாலிட்டி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களில் மட்டுமே போட்டியிடும் தகுதி தேசிய, மாநில கட்சிகளுடன், சுயேட்சைகளும் பங்குபெறலாம் என்று சட்டம் வரவேண்டும்.