இந்திய முஸ்லீம் ஆட்சியாளர்கள் தொடர்ச்சி 4

1790 - ம் ஆண்டில் திப்பு தமிழகத்தின் பகுதிகள் மீது படையெடுத்தார். அப்போது, காஞ்சிபுரத்தில் உள்ள கோயில் ஒன்றைக்கட்டி முடிப்பதற்கு 10,000 பொன் வழங்கி இருக்கிறார். (ப்ராக்ஸி ஃபெர்னாண்டஸ், பக்கம் 243).

கோயில்களைக் கட்டுவதற்கு மட்டுமின்றி, பழங்கோயில்கள்களையும் குளங்களையும் புதுப்பிக்கவும் திப்பு பெரிதும் உதவியுள்ளார்.

மைசூர் மாவட்டத்தின் தொன்னூரில் இருந்த நரசிம்மர் கோயிலின் இராமானுஜர் குளத்தைப் புதுப்பிக்க திப்பு உதவினார். (மைசூர்ஆர்க்கியலாஜிகல் அறிக்கை. 1939, பக்கம் 28).

இதுமட்டுமன்று, இந்து சமுதாயப் பிரிவினரிடையே ஏற்பட்ட பூசல்களைத் தீர்த்து வைக்கும் நடு நிலையாளராகவும் திப்பு இருந்துள்ளார். மேல்கோட்டை நாராயண ஸ்வாமி கோயிலில் வடகலை, தென்கலை என்ற தகராறு ஒருமுறை வலுத்துவிட்டது. திப்பு தலையிட்டு, வைணவர்களின் இரு கலைகளின் வழிபாடுகளும் எந்த வித தடையுமின்றி நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டார். (பரகால மட ஆவணம், மைசூர் ஆர்க்கியலாஜிகல் அறிக்கை, 1938, பக்கம்123 - 124).

கடப்பை மாவட்டத்தில் புல்வெண்ட்லா என்ற ஊரிலிருந்த கிறிஸ்தவ தேவாலயத்தைப் புதுப்பிக்கவும் திப்பு உதவி செய்தார்.

மற்ற மதத்தவரிடம் இவ்வளவு அன்பு காட்டிய திப்பு, தமது மார்க்கத்தையும் விட்டுவிட வில்லை. முஸ்லீம்கள் குடியிருக்கும் ஒவ்வொரு ஊரிலும் ஒரு பள்ளிவாசலைக் கட்டி, முறைப்படி தொழுகை நடைபெற ஏற்பாடுகள் செய்தார்.

மக்கள் விகிதாரத்துக்கு ஏற்ப, அந்தந்த சமயங்களின் அற நிலையங்களுக்கு திப்புவின் அரசு உதவிகள் செய்தது. திப்புவின் ஆட்சியில் இந்துக்கள் 90 சதவிகிதம் இருந்தனர். திவான் பூர்ணய்யாவின் தகவலின்படி, திப்புவின் அரசு தந்த மானியங்களும் அதே விகிதத்திலேயே இருந்தன. ஒரு புள்ளி விவரம்:

இந்து தேவஸ்தானங்கள்,
அக்ரஹாரங்கள் 1,93,959

பிராமண மடங்கள் 20,000

இஸ்லாமிய ஸ்தாபனங்கள் 20,000



மொத்த வராகன்கள் 2,33,959

எழுதியவர் : டாக்டர் நாகூர் ரூமி (22-Dec-13, 8:12 pm)
பார்வை : 113

மேலே