என்னை முத்தமிட்டவள் - குமரி பையன்

சிவந்த கதிர் மலையுச்சி முத்தமிட
முத்தமிட்ட கதிரொன்று என்முகத்தில்
என்முகத்தில் சுள்ளென்று தொட்டுவிட
தொட்டுவிட்ட காலைக்குளிர் தென்றலது
தென்றலது வீசியதும் கண்விழித்தேன்
கண்விழித்து தேடுகிறேன் என்னவளை..!

என்னவளின் பாதசுரம் சலசலக்க (கொலுசு)
சலசலக்க ஓடிவந்தாள் புதுமலராய்
புதுமலராய் தேனோடு தாவிவந்தாள்
வந்தவளின் மதிமுகமோ பாதிமுகம்
பாதிமுகம் தான்மறைத்து ஓர்விழியாள்
ஒர்விழியால் உள்ளே இழுத்துவிட்டாள்..!

இழுத்ததும் நெத்தியிலே முத்தமிட்டாள்
முத்தமிட்டு ரத்தத்தில் சுற்றிவிட்டாள்
சுற்றிவிட்டு மொத்தத்தில் சத்தமிட்டாள்
சத்தமிட்டு உடலோடு ஒட்டிவிட்டாள்
ஒட்டிவிட்டு தட்டிவிட்டு கட்டிவிட்டாள்
கட்டிவிட்டு சுட்டுவிட்டு தட்டிவிட்டாள்..!

தட்டிவிட்டாள் தடுமாறி தலைநிமிர்ந்தேன்
தலைநிமிர்ந்து விரகத்தால் நான்தவித்தேன்
தவிக்கின்ற இதயத்தில் தாளமில்லை
தாளமில்லா இசையிலே சுரமுமில்லை
சுரமில்லா பாட்டினிலே சுகமுமில்லை
சுகமில்லா வாழ்க்கையிலே அமைதியில்லை..!

அமைதியை தேடியநான் மலைக்குவந்தேன்
மலைவந்து மனதினிலே அமைதி கொண்டேன்
அமைதியிலே மதிமயங்கி உறங்கிபோனேன்
உறக்கத்தில் உவகையுடன் கனா கண்டேன்
கனாகண்ட காட்சியைதான் வரியில் சொன்னேன்
சொன்னது கவிதையென்றால் என்னசொல்வேன்.!

எழுதியவர் : குமரி பையன் (26-Dec-13, 1:10 am)
பார்வை : 346

மேலே