பசுமை வெறும் கனவே

கிளியின்
கீச்சல்கள்
தேன் மணம் கமழும் மலர்கள்
மணத்தில் மயங்கும் வண்டுகள்
காணும் இடமெல்லாம்
பசுமை படர்ந்திருந்தது
அமைதி காதை பிளந்தது
சாதி மதம் யாவும் மறைந்தது
முகபுத்தகம் கிழிந்தது
மனித இனம் மீண்டும் சிரித்து பேசியது
ட்விட்டர் பறவை இறந்தது
காதுகளால் ரகசியங்கள் பரவப்பட்டன மீண்டும்
தொழிற்சாலைகள்
சிலந்தியின் வீடாகிவிட்டன
கரி வாயுவை கக்கியவை
யாவும் இப்போது கரிப்பட்டன
பூமி மீண்டும் பூத்தது
இயற்கையின் ஒளி எங்கும் ஒளிர்ந்தது
உலகில் சூழ்ந்த இருட்டு கரைந்தது
புது உலகம் பிறந்தது
வருத்தம் பெயர் தெரியாத முகவரியானது
நீதி நேர்மை நிலைத்தது
ஆற்று நீரும்
அமுதமாயிருந்தது
நீர் நிலையங்கள்
யாவும் நிறைந்திருந்தது
குதித்தேன் அதனுள்
ஆசையுடன்
விழுந்தேன் படுக்கையிலிருந்து
விழித்தேன் கனவிலிருந்து இருமலுடன்
மெய்யில் பொய்யானவை யாவும்
கனவிலாவது மெய்யானது..
-ஹரிகரன்