முன்னை முதலொலியே

முன்னையே முதலொலியே!
முதல்ச்சொல் அம்மாவே!
பின்னை வந்த மொழிகளுக்கும்
அன்னையாய் ஆனவளே!

இலக்கணக் கட்டாலே
எழில் நிறை பெற்றவளே!
இசைத் தமிழ் நாடகமே!
இயல்பிலே இனிப்பவளே!

இலக்கியக் களஞ்சியமே
கலைகளின் தலை மகளே!
வளம் பெருத்த வள்ளலே!
வற்றாத சுரபி நீயே!

படர்ந்து வரும் உன் புகழே
தொடர்ந்து பெறும் உன் வளமே!
வளர்ந்து வரும் தமிழே நீ
வயது முத்தா இளம் எழிலே!.

சாபக்கேடாய் மேலைமொழி
சனியாக நுழைந்தாலும்
மேவியே மேலும் நீயே
மெருகேறி ஆளுகிறாய்.

விறு விறுப்பாய் வளர்கின்றாய்.
வேக நடை விரைகின்றாய்.
முதன்மை மொழி தமிழாக
முன்னேறிச் செல்லுகின்றாய்.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
என்னும் நிலை நிறைகின்றாய்
தமிழ் வழிக் கல்விகளில்
தரணியெங்கும்.அருள்கின்றாய்.

தன் மானம் என்னாளும்
தமிழ் மானம் ஒன்றேதான்
என்ற நிலை தமிழனுக்கு
இன்று நீ உணர்த்திவிட்டாய்.

தமிழே நீ ஆள வேண்டும்
தரணியெலாம் நீ கொண்டும்.
அமுதே ஆதியே அன்னையே!
ஆக்கம் நீயே முன்னையே!

வாழ்க தாயே வாழ்கவே!
வையம் புகழ வாழ்கவே!
செம்மொழித் தமிழாக
எம்மொழி வாழ்கவே!

கொ.பெ.பி.அய்யா,

எழுதியவர் : கொ.பெ .பி.அய்யா. (28-Dec-13, 9:21 am)
பார்வை : 189

மேலே