அந்த காலம் தான் சிறந்தது
அந்தக் காலம்தான்
நன்றாக இருந்தது.
பேருந்துக்குள் கொணர்ந்து
மாலைமுரசு விற்பார்கள்.
எந்த நிறுத்தத்தில் ஏறினாலும்
அமர இடங்கிடைக்கும்.
மிதிவண்டி வைத்திருந்தோம்.
நான் பஞ்சர் ஒட்டப் பழகியிருந்தேன்.
எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தார்.
கலைஞரின் அறிக்கைகளைத் தேடிப் படித்தார்கள்.
எல்லா வீடுகளிலும்
முதல் மரியாதை - சிந்து பைரவி பாடல் ஒலித்தது.
வானொலி நாடகங்களை
ரசித்துக் கேட்டோம்.
சாவி இதயம் பேசுகிறது
பத்திரிகைகள் வந்தன.
எல்லாருமே
அரசுப் பள்ளிகளில் படித்தோம்.
பத்தாம் வகுப்பு தேர்வினை பதட்டமின்றி எதிர்கொண்டோம்.
சாலையில்
எப்போதாவது ஒரு வண்டி போகும்.
மழை
நின்று நிதானமாகப் பொழியும்.
சாராயக் கடைகள் இருந்தன
இன்றைய கூட்டம் அக்கடைகளில் இருந்ததேயில்லை.
தமிழாசிரியர்கள்
தந்நிகரற்று விளங்கினார்கள்.
நல்ல நூல்களுக்கு
அன்னம் பதிப்பகம்தான்.
வேலைக்குப் போகாதவன்
எந்தக் குடும்பத்திற்கும் பாரமாயில்லை.
எளிதில்
மணப்பெண் கிடைத்தாள்.
வெஸ்ட் இண்டீசை
வெல்லவே முடியாது.
டிரா ஆகும் என தெரிந்தும் இந்தோ - பாக் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை தூர்தர்சனில் ரசித்து பார்த்தோம்
சந்தைக்குப் போக பத்து ரூபாய் போதும்.
முடிவெட்ட இரண்டு ரூபாய்தான்.
நகரத்தின் எல்லாக் கடைகளிலும்
மிரட்சியின்றி நுழைய முடியும்.
யுவதிகள் பாவாடை தாவணி உடுத்தினர்.
சிலிண்டர் மூடுதுணிபோல்
யாரும் நைட்டி அணியவில்லை.
ராமராஜனை
விரும்பி ரசித்தோம்.
அதிகாலைகள்
பறவைக் கீச்சுகளால் நிரம்பியிருந்தன.
புதுத்துணிகளை விஷேசங்களுக்கு என்று
உடுத்தாமல் வைத்திருந்தோம்.
ஊசல் சுவர்க்கடிகாரத்திற்கு
சாவி கொடுத்தோம்.
ஒளியும் ஒலியும் பார்ப்பதற்காக வெள்ளிகிழமைகளுக்கு காத்திருந்தோம்.
தானாய்த் துயில்களைந்து எழுந்தோம்.
இருள்கட்டியவுடன் உறங்கச் சென்றோம்.
ஆம்
அந்தக் காலம் நன்றாக இருந்தது !