இன்னும் உண்டு

யாரைப் பிரதிபலிக்கிறோம்
என்பதை உணரவியலாத
கண்ணாடிக்கே தெரியும்
நான் யாரென ..
அதுவே என் வெளிப்பாடு !

முட்களை நேசிக்கவே
பூக்குமோ ரோஜாக்கள் ?
அவற்றிற்கான பந்தம்
காற்றுக்கும் தெரியப்போவதில்லை
எனது மீள்பார்வைக்கும் ....

எப்போதோ வேரூன்றிய
எண்ணத்தை
எதனொன்றால் காணமுடியுமோ
அதுவானது மீண்டும்
புதுப்பிக்கப்படுவதில்லை...

எங்கேனும் கடக்கும்
மேகங்களின் எல்லைமீறல்கள்
எப்படி நியாயமாகும்
மழையன்றிப் போனால் ?!
இயற்கை....

என் காலடிகளைப்
பின்தொடர்வது யாதோ
அதுவே முன்னோக்கியும்
வழிநடத்தக்கூடும்
இரண்டடிகளில் திருப்பம் ....

முறிக்கப்படும் சோம்பலும்
வீழ்ந்துவிடுமா ?
வீழ்வது நானாகவே
மீண்டும் ஒரு சோம்பலில் ...
பிடிவாதம் இதுவாகுமோ ?!

ஊர்க்குருவிகள் அறியாத
ரகசியங்களா ,
இந்த உள்ளம் அறியும் ?!
யார் பெரியவர் இங்கே
முட்டிமோதும் உலகில் ...?!

கனவுகளை இயக்குவது
காரணமா ?நானா ?
சில விதிகளில் விதிவிலக்கு ஏது?!
செழுமையாய் வாழ்கிறேன்
மனவெளி வீதியில் ....

எழுதியவர் : புலமி (3-Jan-14, 11:48 pm)
பார்வை : 175

மேலே