என்னவனே என் காதலை அறிவாயடா - நாகூர் கவி

என்னவனே... !
உன்னையே நினைந்து
உன் பின்னாலேயே சுற்றும்
உனது பூமி நான்... !

உனக்கு வாழ்வில்
நிழலாய் இருக்க
என் இதயம்
காதல்
துப்பட்டாவை விரித்து
வானமாய் காத்திருக்கிறது... !

உன் அழகில்
மயங்கிய நிலவு
நான்... !

என்னை உதாசீனப்படுத்தி
நீ விலகும்போது
இரவாய் ஆகிறேன்...!

மறுநாள் பொழுது
உனைக் கண்டதும்
பகலாய் மாறிவிடுகிறேன்... !

எனது காலத்தைக் காட்டும்
காதல் கடிகாரம்
நீதானே என்னவனே...!

நீ என்னை
உற்று நோக்கும்போது
உன் ஒரு நொடிப் பார்வையினில்
தென்றலைக் காண்கிறேன்... !

மறுநொடி நீ
முறைத்துச் செல்ல
புயலின் தாக்கத்தை உணருகிறேன்... !

என்ன நான்
தவறு செய்துவிட்டேன்
எனை நீ
இப்படி வதைக்கிறாய்...?

அப்படியும் காதலை
உன்னிடம் எனது
விழிகளால் விதைக்கிறேன்... !

சில நேரங்களில்
நீ அனலாய் வார்த்தைகளை
எரிமலையாய் கக்குவாய்
என்னிடம்...!

நீ பேசிய
வார்த்தைகளை நான்
நினைப்பதை விட
நீ என்னிடம் பேசினாயே
அதைத்தான் அதிகமதிகம்
நினைத்துப் பார்க்கிறேன்... !

பொழுதுகள்
புரண்டோடுது
என்னுள் இந்த
காதலோ புரையோடுது... !

என் இரத்த
நாளமெல்லாம்
காதல் தான்... !

அது போடும்
தாளமெல்லாம்
உன் பெயர் தான்... !

என்ன வேண்டுமானாலும் சொல்
நான் வேண்டுமென்று
நீ சொல்லும் அந்த
ஒரு வார்த்தைக்கு இந்த
ஆயுள் முழுவதும்
காத்திருப்பேன்... !

உன் வாழ்க்கையை
இப்படியே
தொலைத்து விடாதே
என்கிறாய்... !

அதனால் தான்
அதை தொலைத்த
உன்னிடம்
மீட்க வந்திருக்கிறேன்... !

எது சொன்னாலும் நீ
திருந்தப் போவதில்லை
என்கிறாய்... !

உன்னிடம்
காதலைப் பெறாமல்
நான் திரும்பிப் போவதில்லை
என்கிறேன்... !

நீ சொல்லும்
அறிவுரைகளை
என் காதல்
செவியோ கேட்காது... !

அந்தச் செவி
காது கொடுத்து கேட்டால்
காதல் என்றொரு
வார்த்தையை மட்டும்தான்
செவியேற்கும்... !

அதுவரை
அது
செவிடுதான்... !

நீ சொன்ன
மறுகணம்
இந்த பூலோகம்
தவிடுதான்... !

எழுதியவர் : நாகூர் கவி (5-Jan-14, 1:08 am)
பார்வை : 549

மேலே