தை மகளே வாவா
தை மகளே வாவா
****************************
தைமகள் வருவதை
ஞாலத்தைக் காக்கும் ஏர்உழவரின்
சாலச் சிறந்ததோர் திறத்தை,
கோலப் புத்தாடைத் தோற்றத்தை,
பொங்கும் பொங்கல் தித்திப்பதை,
மங்கல மஞ்சளின் குணத்தை,
செங்கரும்பின் இன்சுவைத் தரத்தை,
எங்கும் பரவும் பூமணத்தை,
திங்கள் போலக் குளிந்து
நினைத்தால்--நெஞ்சுக்குள்
தைதை எனக்குதியாய்க்
குதிக்குது கவிதை---
அதைஇதைச் சொல்ல
உள்ளம் துடிக்குது---
எதைஎதைச் சொல்ல?
உள்ளம் விழிக்குது---
முந்தை முத்தமிழ் மேதைகள் மொழிந்ததை,
விந்தை மனிதர் தந்தை பெரியார்
சிந்தை தெளிந்து தந்ததைக் கந்தையென
நிந்தை செய்தோம்; பந்தடி பட்டோம்---
பித்தைத் தெளிவிக்க
வித்தை பலகாட்டிக்
கத்தை கத்தையாய்க்
கருத்தைக் கொடுத்தாலும்,
முத்தைக் கொடுத்தாலும்,
சொத்தை என்றோம்---
கொல்வதை, குடிப்பதை,
சொல்வதை செய்வதை,
பொய்கள் சொல்வதை,
தொய்வதை, தளர்வதை,
அயர்வதை, அழுவதை,
துயர்வந்து நுழைவதை,
தேய்வதை, உழைக்காது
ஓய்வதை, ஒழிக்கும்தீ
ஒழுக்கத்தை, அறம்சாராப்
பழக்கத்தை, வழக்கத்தை,
கெடுப்பதை, கடுஞ்சொல்
தொடுப்பதை, நல்லதை
வெறுப்பதை, பேசிப்பேசிa
அறுப்பதை நிறுத்து---
இப்படி வந்தடையும்
தைகள் அனைத்தையும்
அப்படியே விட்டுவிடு--
மனிதத்தை மதித்துவாழ்---
அமிழ்தை, அருந்தழ் அறத்தை,
புகழொடு வழிவழி வந்ததை,
caa இமிழ்கடல் உலகம் உவந்ததை,
உகந்ததை, உயர்ந்ததைக் கொள்க---
வள்ளுவத்தை, அதுநன்கு
விதைத்ததை--அதன்வழி
வாழ்வதை, வளர்வதை,
உயர்வதை உள்ளுக---