உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை

இந்த உலகில் நம்மை சட்டென்று கவர்பவர்கள் யார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? ஐஸ்வர்யா ராய், சினேகா போன்ற பிரபலங்களை சற்றே தள்ளி வைத்துவிட்டு பார்த்தால், நம்மை சட்டென்று கவர்ந்து இழுப்பவர்கள், நிச்சயமாக, சிரித்த முகத்துடன் இருப்பவர்கள் தான். புன்னகை அவ்வளவு சக்தி வாய்ந்தது. அதனால் தானோ என்னவோ, நம் முன்னோர் 'புன்னகை இருக்க, பொன் நகை எதற்கு?' என்று பழமொழியை கூறியுள்ளனர். புன்னகை மூலம், எதிரிகளைக் கூட நண்பராக்கிக் கொள்ளலாம். ஒருவரின் தோற்றத்தை, செலவே இல்லாமல் வசீகரமாக மாற்றக் கூடியது அவரது புன்னகையே. நமக்குப் பிடித்த நபர்களைப் பார்த்தவுடன், நம்மையும் அறியாமல் நாம் புன்புறுவல் பூக்கிறோம் அல்லவா?

அந்த சிரிப்பு, வெறும் உதடுகளின் அசைவு மட்டும் இல்லை. அது உறவின் வெளிப்பாடு. சிரித்த முகத்தை பார்க்கும் போது, எத்தனையோ பிரச்சினைகளை மீறி, ஒரு நம்பிக்கை விதை மனதில் விழுகிறது. உங்கள் சிரிப்பு, 'பெர்சனாலிட்டி'யை உயர்த்துவதோடு, உங்களை வசீகரமாகவும் காட்டும். எனவே, சிரித்த முகத்துடன் இருக்க பழகுங்கள். அழும் குழந்தையை விட, சிரிக்கும் குழந்தையை தானே நாம் அனைவரும் விரும்புகிறோம். சிடுமூஞ்சி பெண்ணை விட, சிரித்த முகம் கொண்ட பெண் தானே விளம்பரங்களுக்கு ஏற்றவள். ஆக, சிரித்த முகமே கூடுதல் வசீகரம். பிறரை வசீகரப்படுத்தவும், எப்படிப்பட்ட நபரையும் 'ஹேண்டில்' செய்வதற்கும், அவசியமான ஒன்று உங்கள் புன்னகை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, வீடாக இருந்தாலும் சரி, பணியாற்றும் இடமாக இருந்தாலும் சரி, புன்னகை பூத்திடுங்கள். பணியிடத்தில் புன்னகையையும், ஆதரவான பார்வையையும் தவழ விடுங்கள். இது செயற்கையான விஷயமாகத் தோன்றலாம். ஆனால், கடுமையான அலுவலகச் சூழலை சரி செய்யும் கருவியாக, உங்கள் புன்னகை செயல்படும். உங்கள் முசுடு உயரதிகாரியையோ அல்லது 'மூடி'யான கணவனையோ பார்த்து உங்களுக்கு புன்னகை வரவில்லை என்றாலும், செயற்கையாக நீங்களாகவே புன்னகையை வரவழையுங்கள். உடனடியாக இல்லாவிட்டாலும், காலப் போக்கில் உங்கள் புன்னகை அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்கள் உங்களை நடத்தும் விதம் மாறலாம்.

உங்களின் இந்த புன்னகை, நீங்கள் மற்றவருடன் கொள்ளும் உறவை, வலுப்படுத்துவதற்கான மிகச் சிறந்த ஆயுதம் என்றாலும், உங்கள் புன்னகையை தேவையற்ற இடங்களிலோ அல்லது தேவையற்ற நபரிடமோ காட்டினால், நீங்கள் தேவையில்லாத பிரச்சினையை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குறிப்பாக, ஜொள்ளடிக்கும் சக ஊழியர்களிடமோ, பெண்களிடம் தவறாக நடக்கும் சீப்பான ஆசாமிகளிடமோ புன்னகையை நீங்கள் தொடர்வீர்களானால், விளைவு வேறு மாதிரியாக இருக்கும் என்பதை சற்றும் மறக்காதீர்கள். அப்படி மறந்தால், அனாவசிய வம்பில் மாட்டிக் கொள்ள நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேவையான இடங்களில், உங்கள் புன்னகையை தவழவிட்டு, வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.

எழுதியவர் : கணேஷ் கா (13-Jan-14, 8:45 pm)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 233

மேலே