வினைமுற்றிய தலைமகள் நெஞ்சொடு சொல்லியது - கார் நாற்பது 24
இன்னிசை வெண்பா
எல்லா வினையும் கிடப்ப வெழுநெஞ்சே!
கல்லோங்கு கானம் களிற்றின் மதம்நாறும்;
பல்இருங் கூந்தல் பனிநோனாள்; கார்வானம்
எல்லியும் தோன்றும், பெயல்! 24
- கார் நாற்பது
பொருளுரை:
மலைகள் உயர்ந்த காடுகள் யானையின் மதம் நாறாநிற்கும்; கரிய வானத்தின்கண் மழை மென்மையாகத் தோன்றாநிற்கும்; (ஆதலால்) பலவாகிய கரிய கூந்தலையுடையவள் ஆற்றியிருத்தற்கு நான் கூறிய சொல்லை இனிப் பொறுக்கமாட்டாள்; மனமே! எல்லாத் தொழில்களும் ஒழிந்து நிற்க நீ போதற்கு ஒருப்படு!
கிடப்ப : வியங்கோள்; வினையெச்சமாகக் கொண்டு கிடக்கும் வகை எனப் பொருளுரைத்தலுமாம். களிற்றின் மதம் நாறும் என்றது கார்காலத்தில் பிடியுடன் இயைந்தாடுதலான் என்க. பணி - பணித்த சொல். எல்லியும் என்று பாடமாயின் இரவிலும் எனப் பொருள் கொள்க!
1. எல்லியும் என்றும் பாடம் 2.செயல் என்றும் பாடம்.