ஆர்பரிக்கும் குழந்தை

அழுது ஆர்பாட்டம் செய்யும்
குழந்தைகளை
எப்படியாவது அடக்கிவிட
ஏதேனும் ஒன்று இருக்கிறது

பெரும்பான்மை அம்மாக்களின்
ஆயுதமாகும்
பூச்சிக்காரன்
கொஞ்சம் பேருக்கு
பூனையாய் இருக்கலாம்
இன்னும் சிலருக்கு
நாய்களின் உதவி


பூனையையும் நாயையையும்
துணை கொள்பவர்கள்
தாங்களே அவைகளாய்
குரல் எழுப்பி
அதுவாகிறார்கள்

இவையில்லாமல்
வெகுசிலருக்கு யானை
வேறு சிலரோ
குரங்கினைக் காட்டுகிறார்கள்

பேருந்து பயணத்தில்
ஆர்பாட்டப் பிள்ளைகட்கு
இதோபார் அந்த
சொல்லி முடிக்குமுன்பே
முண்டியடித்து
கண்கள் உருட்டி
மீசை முறுக்கி
நாக்குகடித்து
கர்ஜிக்கிறார்கள்
தங்கள் குழந்தைகளிடம்
தோற்றுப்போனதை மறந்து

ஏதேதோ செய்கிறார்கள்
கடைசியில்
ஆர்பரித்த குழந்தை
தானாய் அடங்குகிறது
அவர்களின் எதுவும்
பிடிக்காது...

எழுதியவர் : க.இராமஜெயம் (17-Jan-14, 9:43 pm)
பார்வை : 60

மேலே