பனியில் கரைந்த செந்தூரம்

குலத் தொழில் துறந்து முயற்சித்துப் படித்தவர்கள் சமுதாயத்தின் மேல் மட்டத்தில் தன் சாதிய அடையாளங்களை விரும்பித் தொலைத்தவர்களாய் அக்ரஹார வீடுகளை பிற சாதிக்காரர்களுக்கு வாடகைக்கு விட்டு விட்டு வெளியூர்களில் குடியேறிவிட்டனர். ஆனால் புரோகிதம் செய்து வரும் பிராமணர்கள் மட்டும் வறுமைக்கு வாழ்க்கைப்பட்டவர்களாய் தங்களுக்குக் கிடைத்து வந்த மரியாதையை இழந்து சம்பிரதாயத்துக்காக சடங்குகள் நடத்தும் வகுப்பினரை நம்பி வயிறு கழுவிக் கொண்டிருந்தாரகள். அப்படிப் பட்டது தான் அவள் குடும்பம்.
அவள் பெயர் நீலாம்பிகை. அவளது அண்ணன்மார்கள் எனது பால்ய வயது பரிச்சயம். இடையில் எதிர்பாராவிதமாக அவள் குடும்பத்திற்கு ஒரு உதவி செய்யவேண்டியதாகிப் போனதில் பழைய பரிச்சயம் உறவாகப் புதுப்பிக்கப் பட்டது.
அடிக்கடி போனில் என்னோடு பேசுவாள்.
அவளுக்காக என் செல்போனில் “ஐயங்கார் வீட்டு அழகே” என்ற அன்னியன் படப் பாடல் ரிங் டோனாக அழகு சேர்த்தது.
“ஏங்க போன் அடிக்குது” அரைத் தூக்கத்தில் இருந்த என் மனைவி ஞாபகப்படுத்தினாள்.
“அது கம்பெனி போன்” பொய் சொன்னேன்.
“வர்ர அமாவாசைக்கு ரெட்டை லிங்கம் கோவிலுக்குப் போவீங்களா ?” செல்போனில்கேட்டாள்.
ரெண்டு மாசமாப் போக முடியல. இந்த மாசம் கண்டிப்பா போகனும்.”
“சார் ! எனக்கும் அந்த கோவிலப் பார்கனும்னு ஆசை. நானும் வர்ரனே “
“ஹலோ. மலை ஏறனும் ரொம்பக் கஷ்டம்”
“அதான் நீங்க இருக்கீங்களே”
“சரி உன் விருப்பம்.” வெளியில் போய் குசுகுசுவென பேசி முடித்தேன்.
மறு நாள் அலுவலகத்திலும் அதே பாட்டை என் போன் படித்தது.
ஹலோ !
ஹலோ சார் !
சொல்லு நீலா
ஒன்னுமில்லே .பேசனும் போல தோனித்து.
“பேசு நான் ஃப்ரீயாத் தான் இருக்கேன்”
………………………………………………….
கோவிலுக்குக் கூட்டிப் போவீங்களா ?
“ஆமா நீ பெருமாள் பக்தையாச்சே !சிவன் மேல என்ன திடீர் பக்தி “
“பெருமாள் கொடுத்த பலனைப் பார்த்தீங்களோன்ன”
……………………………………………………………….அவள் .பெருமூச்சு தெளிவாகக் கேட்டது
சரி நாளைக்கு காலையில 5 மணிக்கு ஒரு பஸ் கிளம்பும். அதில வந்துடு.”
“நீங்க என் கூட வரலியா”
“நீ அங்க வந்து இறங்கும் போது நான் அங்க இருப்பேன்.சரியா”
“நானும் உங்க கூடவே வந்துடரேனே “
“இல்ல கொஞ்சம் வேலை இருக்கு. நீ தைரியமா வா,நான் உனக்கு முன்னாடியே அங்க வந்து காத்திருப்பேன்.”
அமாவாசைக்குக் கூட்டம் அதிகமாகவே இருந்தது. மலையேறத் தொடங்கினோம்.
பாவம் அவள் மிகவும் சிரமப்பட்டு ஏறினாள். நான் என் வேகத்தைக் குறைத்துக் கொண்டேன். நிறையப் பேச முயற்சித்தாள். ஆனால் மூச்சு வாங்கியதால் அவளால் பேச முடியவில்லை.
சங்கிலிப் பாறையில் கல் தடுக்கி கால் இடறி கீழே விழப்போனாள். நான் பிடித்துக் கொண்டேன். அவளிடம் எனது முதல் தொடுதல், முதல் ஸ்பரிசம். இருவர் கண்களும் அருகருகே சந்தித்துக் கொண்டன. அவள் மூச்சுக் காற்று நாசி பட்டது. நெய் வாசம்.
“தாங்க்ஸ் சொல்ல மாட்டியா ?”
தாங்கஸ் சொல்லி முடிச்சுடமுடியுமா ?
“ வீட்டுல எப்படி ஒத்துக்கிட்டாங்களா ?”
“ரெட்டை லிங்கம் கோவில் போரதா சொன்னேன். ஆனால் லிங்கம் கூடத்தான் போறேன்னு சொல்லலியே “
உதடு விரியாமல் சிரித்துக் கொண்டேன்.
மிகவும் கலைத்து விட்டாள். ஓரிடத்தில் ஒரு பாறை மேல் நான் உட்கார்ந்தேன். அவளும் என்னருகே வந்து உட்கார்ந்தாள். அவளது இடது கை என் வலது கை மீது தீக்குச்சி போல் உரசியதை நான் நன்றாகவே உணர்ந்தேன். நான் அவளைக் கவனித்தேன். ஏதோ வரைந்து கொண்டிருந்தாள். அது ஒரு உருவமற்ற பிம்பம். நினைவுகளில் மூழ்கியிருந்தாள்.
“என்ன யோசனை ?”
“நான் முதன் முதலா உங்க கிட்ட உதவி கேட்டு வந்த அந்த நாள நினைச்சேன்.”
அவளது காதோரமும் கழுத்தும் வியர்த்திருந்தது.தாமரை இலைத் தண்ணீரை உவமை சொல்லலாம்.பக்தர்கள் குறைந்த இடை வெளியில் எங்களைக் கடந்துகொண்டிருந்தார்கள்.யாரும் பார்த்துவிடக் கூடாது என்ற பயம் என்னுள் உயிர்த்திருந்தது. சேலத்தில் என்னோடு வேலை செய்த சிவக்குமார் என்னைப் பார்த்துவிட்டார். நான் திரைக்கதை எழுதுமுன்னே என்னருகில் வந்து நலம் விசாரீக்க ஆரம்பித்து விட்டார்.
“வழக்கமா மாசமாசம் வந்திருவீங்களோ ?”
ஆமா சார் ரெண்டு மாசமா வரமுடியலே.வேலைப் பளு. நீங்க எப்படி எங்க இருக்கீங்க”
“பழைய இடம் தான் “என்றவர் நீலாவைப் பார்த்து புன்னகைத்தவாறே “மேடம் நீங்களும் ரெகுலரா வர்ரீங்களோ ?”
நான் குறுக்கிட்டு ”இதுதான் முதல் முறை” என்றேன்.
“சரி நடங்க. உட்கார்ந்தா பாடி கோல்டாகிடும். அப்புறம் நடக்க சிரமமா இருக்கும்”
“சார் நீங்க முன்னாடி போங்க. நாங்க வற்றோம்” என்றேன். அப்பாடா கண்டம் தாண்டிய நிம்மதி.
நடுக்கம் சீராகி கவனித்த போது அவள் என் தோள் மீது சாய்ந்திருந்தாள். வெண்மையான அவள் கண்களில் நீர் கோர்த்திருந்தது.
“சரி மெதுவா நடப்போம்”
ம்ம்ம்ம்……………………………………………..
பாதி வழியில ஒரு அம்மன் கோவில். இருவரும் சென்று தீபாராதனை எடுத்துக் கொண்டோம். பூஜாரி குங்குமம் கொடுத்தார். அவள் கை நடுங்கியது.
“மலைக்குப் புதுசா” இரண்டு விரல்களில் குங்குமத்தைப் பிடித்தவாறு பூஜாரி கேட்டார்.
தலையாட்டினாள்.
“அதுதான்” என்று கையிலே குங்குமத்தைப் போட்டு விட்டு அம்மனைப் பார்த்து நகர்ந்தார்.
ஒரு பாறை இடுக்கில் யாரும் வராததை உறுதி செய்து கொண்ட பின் கறுப்பு ஸ்டிக்கர் பொட்டை எடுத்துவிட்டு குங்குமம் வைத்துக் கொண்டாள். நான் கண்டும் காணாதது போல் நகர்ந்தேன்.
மூன்றாவது முறையாக ஓரிடத்தில் ஓய்வெடுத்தோம்.
முழங்கால்களை கைகளால் கட்டியபடி நீலா உட்கார்ந்திருந்தாள்.
“என்ன மலை எப்படியிருக்கு. கோவிலுக்குப் போயிடலாமா ?”
“இப்படியே எத்தனை நாள் எவ்வளவு தூரம்னாலும் நான் நடக்க சம்மதம்”
“ரொம்ப வைராக்கிய காரி தான். அதுசரி உன் நாத்தனார் கார் பங்களானு வசதியா இருக்காளே. உன்னையும் அங்க வச்சு பாத்துக்கப்படாதா ?”
“போய் தொலஞ்சா சரினு நெனைக்கறா. அங்க நான் இருந்தா அவா ஆத்து வேலக்காரியாத்தான் இருக்கனும்.”
“சொத்து பிரிச்சாச்சா ?
“சொந்த வீட்டுலேயே வாடகை கொடுத்துதான் இருந்தொம். ஆஸ்பத்ரி செலவ நாத்தனார் ஏத்துண்டா. அதுக்குப் பரிகாரமா வீட்ட எழுதி வாங்கிண்டா
……………………………………….
அவாளுக்கு சுய சம்பாத்யம். என் ஆத்துகாரர் ஊதாரி. பொறப்புல தான் பிரானாள். ஆனா ஆளு உங்க சாதிக்காரர் மாதிரி தான்.” ஆத்துக்காரர அடுத்த ஆம்படயான் கிட்ட கொறச்சு பேசப்புடாது. அது பாவம்.அவளே தன்னைக் கடிந்து கொண்டு தொடர்ந்தாள்.………………………………………….வேண்டாமே………………….. ஞாபகம் வச்சுக்கரா மாதிரி…………………. ஒன்னும் இல்ல”அதற்குள்ளாக ஒரு காட்டுப் பூவை நூறு துண்டுகளாக்கியிருந்தாள்
“சரி சரி விடு “
நடக்க தொடங்கினோம். கரடு முரடான ஏற்றம்.
“ஏன்னா………………உங்க கையைப் பிடிச்ச்சுகவா ?”
நான் திரும்பிப் பார்த்தேன். அது என்னா “ஏன்னா” ஓ அண்ணானு கூப்பிடறியா ?
“இல்ல ஐயோ சாரி………….. நான் அப்புறமா சொல்றேனே”
என் பின்னால் வந்தவளுக்கு என் கையை கொடுத்து ”அது சரி அப்போ எங்கிட்ட கேட்டுத் தான் தோல்ல சாஞ்சியாக்கும்”என்றேன்
அவளது வலது கை வெட்கத்தின் சிரிப்பை மறைத்திருக்க இடது கை என் வலது கையை இறுகப் பற்றியிருந்தது.
முன்னோடி கருப்பசாமி கோவில் வந்தது. அங்கே தெளிந்த நீரோடை ஜில்லென்று மூலிகை மணம் கமழ ஓடிக்கொண்டிருந்தது. நான் எப்பவுமே அங்கே தான் குளிப்பேன். அந்த ஆற்றின் அழகைப் பார்த்ததுமே அவளுக்குக் குளிக்க வேண்டுமென்ற ஆசை வந்து விட்டது.
“விஸ்வாவையும் கூட்டி வந்திருக்கலாமே. இதெல்லாம் அவனுக்குப் பிடிக்கும் இல்லியா ?” அவளுக்கு ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கிறான். படு சுட்டி.
“நீங்க தான் தூக்கிச் சுமந்திருக்கனும்.”
கொஞ்சம் மேலே சென்று கழுத்தளவுப் பள்ளத்தில் இருவரும் இறங்கிக் குளிக்கலானோம்.
மீன்கள் கடிக்கவே அவள் துள்ளிக் குதித்து என் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். எனக்கு வெட்கமாக இருந்தாலும் விருப்பமாகவே இருந்தது.கோவில் ஸ்தலம் .யாராவது பார்த்தால் என்ன நினைக்கக்கூடும் என்று எண்ணினேன்..அப்படியொன்றும் ஆபாசமில்லையே. எத்தனை பேர் குடும்பத்துடன் குளிக்கறாங்க. என்று நானே சமாதானமும் ஆகிக் கொண்டேன்.அவள் கைகள் என் கழுத்தைப் பிணைத்ததில் அவள் மார்பு என் முதுகில் அழுந்திக் கிடந்தது. மீன்கள் கூட்டம் அதிகமானது .அவள் துள்ளலும் அதிகமானது. அவள் சிரிப்பில் சந்தோசத்தில் எந்த பாசாங்கையும் நான் காணவில்லை. எத்தனை நாள் சேமித்த ஏக்கமோ ?அவளது சுதந்திரத்தில் நான் சிறைப்பட்டேன்.எனக்கு நான் விதித்துக் கொண்ட எல்லைக் கோட்டின் விளிம்புகளில் நான் நின்றிருந்தேன். அது கோவில் ஸ்தலம் என்பது மட்டும் என் ஞாபகத்தில் இருந்து அகலவே இல்லை.
“போதும் கிளம்பலாம்”
“ப்ளீஸ். இன்னும் கொஞ்ச நேரம் “
ஏதோ பெரிய மீன் கடித்திருக்க வேண்டும். கழுத்தளவு தண்ணீரிலிருந்து திடீரீன எழுந்தாள். அவள் சேலை உடலோடு உடலாக ஒட்டியிருந்தது. இடுப்புப் பகுதி துணி விலக கடற்கரை மணல் போல் பளிச்சென்று இருந்தது.
நான் பார்த்ததை அவளும் பார்த்தாள். நான் திருப்பிக் கொண்டேன்.
“ஏன்னா முதுகு தேய்க்கவா ?”
“என் முதுகுல அழுக்கில்ல”
“முதுகப் பார்த்த முதல் மனுஷன் நீங்களாத்தான் இருக்கனும். திரும்புங்கோ”
பஞ்சு கொண்டு தேய்த்தது போல் இருந்தது.
“போதும் நீலா”
“சும்மா இருங்கோ. எவ்ளோ அழுக்கிருக்கே”
அப்போதுதான் அழுக்கு பற்றி சிந்திக்கத் தொடங்கினேன்.
“சரி போதும் கிளம்பு. உச்சிக்கால பூசைக்கு நேரமாச்சு”
“ஆமா, சாரி எங்கே மாத்தறது ?
அங்கே ஒரு பாறை இடுக்கில் அவளை சேலை மாற்றச் சொல்லி விட்டு நான் காவலுக்கு நின்றுகொண்டேன்.“என்ன ஆயிடுச்சா” என்று திரும்பிப் பார்த்தேன். வெண் மெழுகும் சந்தனமும் குழைத்து வடித்த சிலை போல், பாவாடை கட்டிவிட்டு ப்ளவுஸில் கையை நுழைத்துக் கொண்டிருந்தாள். எனக்குள்ளே பெரு மூச்சு அணல் கக்கிப் பிரிந்தது.நான் பார்த்ததைப் பார்த்தவள் ,கைகளை ஒடுக்கிக் கொண்டு குத்தவச்சு உட்கார்ந்து கவிழ்ந்த தலையை லேசாக மேலேற்றி ஒரு பார்வை பார்த்தாள்.அந்தப் பார்வையை இதற்கு முன்பாக நான் யாரிடமும் பார்த்ததில்லை.அவள் முகத்தில் வெப்பச் சலனம்.அப்போது ஒரு பக்தன் சிறுநீர் கழிக்க பாறைப் பக்கமாய் திரும்பினான்.
“ஹலோ சார் லேடீஸ் ட்ரெஸ் மாத்தறாங்க”
அவன் என்னைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே“நீங்க என்ன பன்றீங்க” என்று நக்கலாக சிரித்துக் கொண்டே கேட்டபடி நகர்ந்தான்.
எல்லாம் முடிந்து வெளியில் வந்த நீலா உண்மையிலேயே பாலில் குளித்து வந்த நிலாவைப் போலிருந்தாள். அவள் முகத்தில் திருப்தியும் பெருமிதமும் காணக் கிடைத்தது.
“காலி பயல். பொம்ம நாட்டிக ட்ரெஸ் பண்ரச்சே யாரு பக்கத்துல இரூப்பான்றது அவனுக்குத் தெரியாதோ ?”
ஈரத்தலை உலர்த்தி கூந்தல் நுனியில் ஒரு முடிச்சு போட்டுக் கொண்டு நடையை கட்டினோம்.
அடிவாரத்தில் பூஜை சாமான்கள் விற்கும் கடை பெருகியிருந்தது.
“ஒரு தட்டு எவ்ளோ”
“வேண்டாம் நீலா. கொடுத்திடு”
“வெறும் கையோடையா போய் தரிசனம் செய்வா ?”
படிகள் செங்குத்தாக இருந்தன.” இதோ பாரு எந்த சாமியும் எனக்கு இத வாங்கிட்டு வா அத வாங்கிட்டு வான்னு சொல்றதில்ல. அப்படி சொன்னா அது சாமியும் இல்ல தெரியுதா ?” சன்னதி சென்றடைந்தோம்.
தரிசனம் முடிந்தது. கோவிலின் முன்பாக இருவரும் அமர்ந்திருந்தோம். அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். கண்கள் பனித்திருந்தன.
“என்ன நீலா என்னாச்சு”
“என்னமோ தெரியலீங்க. உங்களோட இந்தக் கோவிலுக்கு வந்தது மனசுக்கு நிறைவா இருக்குங்க.” கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
“சரி நாம இப்போ இறங்க ஆரம்பிச்சாதான் நீ பஸ் பிடிச்சு இருட்டரதுக்குள்ள வீடு போய் சேரமுடியும்.”
“நான் உங்களோட டூ வீலர்லே குறிஞ்சிபட்டி வரைக்கும் வர்ரேனே”அது கோவிலுக்கும் எங்கள் ஊருக்கும் இடைப்பட்ட கிராமம்.
“போச்சுடா அந்த ஊர்ல எனக்குச் சொந்தக் காரங்க நிறைய .யாருனு கேட்டா என்ன சொல்றது. அதில்லாம வீட்டுல போட்டுக் கொடுத்துட்டா அவ்ளோ தான்”
அவள் முகம் அடுப்பிலிட்ட பாலித்தீன் போல சுருங்கிவிட்ட்து.
“அந்த ஸ்டாப்புக்கு முன்னாடியே என்ன இறக்கி விட்டிடுங்க”
“சரி வா. ரொம்பவே ஆசைப்படுறே”
அவள் வெட்கமும் சந்தோசமும் அவளை மேலும் அழகுபடுத்தியது. ப்ரேக் பிடிக்கவில்லை. வேகத் தடை ஏதுமில்லை. ஆனாலும் அவள் என் முதுகில் உரசிக் கொண்டே வந்தாள். அது எனக்கும் பிடித்தது.
“லைஃப்ல இது தான் முதல் முறை டூ வீலர்ல”……………..
என்னையும் அறியாமல் குறிஞ்சிப்பட்டிக்கே வந்து விட்டேன். என்ன தைரியம். என் பயத்தை எது போக்கியது.
அவளுக்கான பஸ் வந்தது.அதற்குள்ளே fm ரேடியோவில் ஜானகியும் எஸ்.பி.பி யும்
“இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்” என்று பாடிக்கொண்டிருந்தார்கள்
இருவரும் பார்த்துக் கொண்டோம். அவள் முகம் கலக்கமடைந்திருந்தது அவள் பார்வையின் கேள்விகள் புரிந்தும் பதிலின்றித் தவித்தேன். என்னிடமிருந்த அவளது பையை வாங்கிக் கொள்ளூம் சாக்கில் நெருங்குகிறாள்.
பஸ்ஸில் விசில் அடிக்கப்பட்டு விட்டது,
உலக மக்களின் ஒட்டு மொத்தக் கண்ணீரும் உருண்டோடுவதுபோல் இருந்தது பின்புறமாக நான் பார்த்த அந்தப் பேருந்து.

எழுதியவர் : ராசைக் கவிபாலா (18-Jan-14, 4:38 pm)
பார்வை : 214

மேலே