ஞானமடா நீயெனக்கு 9

என்னவோ வளர்கிறாயடா நீ
ஏன் நான் கண்டிக்கிறேன் என்று கூட
புரிய மறுக்கிறாய்
உன் நிராகரிப்பில் நான்
எத்தனை உடைகிறேன் என்பதை
நீ புரிந்துகொள்ளும் காலம் வரை
காத்திருப்பது -
ஏதோ என் தவறிற்கான
இறைவனின் தண்டனை என்று
நினைத்துக் கொள்கிறேன்!!
குழந்தைகளில்
மிகச் சிறந்தவன் நீ
என்று நினைப்பேன்
உண்மை தான்
மிகச் சிறந்தவன் நீ,
அதனால் தான்
என்னை உனக்கு
பிடிப்பதில்லை போல்!
உனக்கு காய்ச்சலென்று
முடியாமல் மடி மீது
படுத்திருக்கிறாய்,
உன் வலி தாளாத
முகம் பார்க்க பார்க்க
என் ஏழேழு பிறப்பினையும்
சபிக்கிறது மனசு!
நீ முடியாமல்
ம்.. ம்.. என்று
உம் கொட்டி படுத்திருக்கிறாய்
உன் -
ஒவ்வொரு ம்.. சப்தமும்
எனைக் கொன்று கொன்றே
பிறப்பிக்கிறதென -
உன் காய்ச்சலுக்குத் தெரிவதேயில்லை!
மருத்துவமனைக்குப்
போகிறோம்
ஊசி போடவேண்டுமென்கிறார்
மருத்துவர்,
நீ என்னவென்று தெரியாமல்
சிரித்துக் கொண்டு
அமர்ந்திருக்கிறாய்
அவரும் சிரித்துக் கொண்டே
உன் புட்டத்தில் ஊசி வைத்து குத்தியெடுக்க
வீல்!!!!!!!!!!!!! என கத்துகிறாய்...
சரிப்பா.. சரியாகும் சரியாகும்
என்கிறேன்
நீ என் மார்பினைக் கட்டி இறுக்கி
வலியை தாளாமல்
கண்ணையிறுக்கி
அழுத்தியதில்
உன் கண்ணீ­ர் முழுதும் நானாக
கரைந்தே போனேனடா..

எழுதியவர் : (19-Jan-14, 8:41 am)
பார்வை : 36

மேலே