ஞானமடா நீயெனக்கு 8
தின்பண்டங்களை வீடெல்லாம்
இறைத்தாய்,
அம்மா சொன்னாள் 'அப்பாவிடம் சொல்லிவிடுவேன்'
அமைதியானாய்
ஓயாமல் மேலும் கீழுமாய்
எகுறி குதித்தாய்
ஏக சேட்டைகள் செய்தாய்
அம்மா சொன்னாள் 'அப்பாவிடம் சொல்லிவிடுவேன்'
அமைதியானாய்
அம்மாவின் முடி பிடித்து இழுத்தாய்
தலையிலேறி அமர்ந்தாய்
அம்மா சொன்னாள் 'அப்பாவிடம் சொல்லிவிடுவேன்'
அமைதியானாய்
எல்லாவற்றிலுமே அம்மா என்
பெயரைச் சொன்னதும் பயந்து அமைதியானாய்
மதிக்கிறாய் என்று நினைத்தேன்
இரவில் விளக்கணைத்து
படுக்கச் சென்றதும்
எனை தாண்டி அவளுக்கருகில் சென்று
படுத்தாய்
வா என்றழைத்ததற்கு
ஓவென கத்தி அழுதாய்
வரமாட்டேன் போ..' என்றாய்,
நீ அடிக்காமலே -
வலித்ததெனக்கு!
நீ எனை அம்மா
என்பாய் -
அம்மாவை அப்பா என்பாய்,
யாரை எப்படி
அழைக்கிறாய் என்பதில்
ஒன்றுமேயில்லை;
இருவரையுமே அழைக்கிறாய் என்பதில்
நிறைவானோம்
இரண்டு பேருமே!!
நான் உன் அம்மாவிடம் பேச
தொலைபேசியில்
அவளை அழைத்தேன்
நீ தொலைபேசியை
அவளிடமிருந்து பிடுங்கி
அப்பா அப்பா என்று
கத்தினாய்
முதல் முறையாக
கிரஹாம்பெல்லினை
மனதார பாராட்டினேன்!!