ஞானமடா நீயெனக்கு 7
நீ வயிற்றிலிருக்கும்
ஐந்தாறு மாதத்தில்
உன்னம்மா வயிறு தொட்டு தொட்டுப்
பார்ப்பாள்,
அசையத் துவங்கிவிட்டாய்
என்பாள்,
எங்களின் அத்தனை வருடக்
காத்திருப்பும் பறக்க ரெக்கையை
விரித்துக் கொண்ட கணமது,
நானும் எங்கே பார்கிறேனெனத்
தொட்டுப் பார்ப்பேன்,
உன் அசைவுகளை என் வாழ்வின்
அர்த்தமாய் அறிந்துக் கொண்ட
பொழுதுகளது.
இன்று -
இதோ எதிரே நிற்கிறாய்
கை கொட்டிச் சிரிக்கிறாய்
முத்தமிடுகிறாய்..
வாழ்க்கை அர்த்தம் பெற்றதாகவும்
ஒரு புதிய ஞானம் நீ கற்பித்ததாகவும்
வாழ்வின் நெடுந்தூரத்திற்கான -
கனவுகளை உன் முகம் பார்த்து.. முகம் பார்த்து
பூரித்துக் கழிக்கிறேன்..
ஒரு கைத்தடி ஊன்றிய
கிழவர் எதிரே வருகிறார்.
நானும் இப்படித் தான் பிதற்றினேன் - இதோ
என் கதி பார்த்தாயா என்றார்.
நான் சிரித்துக் கொண்டேன்.
என் தனிமைக்கோ தோல்விக்கோ
நீ துணை நிற்க வேண்டுமெனும்
எதிர்பார்ப்பில்லா என் அன்பை
அந்த வயதான கிழவருக்கு
நான் திணிக்கவோ
புரியவைக்கவோ விரும்பவில்லை!!
இதோ.., இதை
உனக்காய் பதிகிறேன்
உனக்கு கைகால் போல் -
உலகின் நீள அகலம் தொடும்
எண்ண சிறகு முளைத்த பின் - சற்று
வெளியே சென்று பார் -
உலகம் சுற்றிலும் பார் -
என்னை போல்
இன்னும் நிறைய அப்பாக்கள் -
ஆங்காங்கே இருக்கலாம்,
உன்னை போல் மகன் கிடைப்பானா?