ஞானமடா நீயெனக்கு 6

எப்படியோ -
வேண்டாமென்று நினைத்து நினைத்தே
எதையேனும் உனக்கு
வாங்கி வரும் பழக்கத்தை
உனக்கும் எனக்கும் பழக்கிவிட்டேன்.
வேறென்ன செய்ய -
அப்பா என்று நீ ஓடிவந்து
என் கையை விரித்துப் பார்க்கையில்
ஒன்றுமில்லாது - ஏமாந்து போவாயோ
என மனசு உடையும் வலி -
வாங்கி அரும் அப்பாக்களுக்கே
புரியும்!
உனை -
சற்று வளர்ந்ததும்
கடைக்கு அழைத்துச் சென்றேன்,
நீ குழந்தை பொம்மை
எடுத்தாய்
வீடெடுத்தாய்
வண்டிகள் எடுத்தாய்
நாய் கரடி பொம்மைகள் எடுத்தாய்,
மிதிவண்டி சொப்புகளென - என்னென்னவோ
எடுத்தாய்,
எல்லாவற்றையும் பார்த்து
துள்ளி குதித்தாய் -
சரி வைத்துவிட்டு வா போகலாமென்றால்
முடியாதென்று
அழுதாய் -
அவைகளை எல்லாம் பிடுங்கி
கடையிலேயே வைத்துவிட்ட
என் ஏழ்மை -
உனக்கு அவைகளை எல்லாம்
காட்டிவிட்டு மட்டும் வந்து
வீட்டில் அமர்ந்து அழுதது!
நான் யாரை பார்த்தாலும்
என் பிள்ளை இப்படி
என் பிள்ளை அப்படி என்று
என்னென்னவோ சொல்கிறேன்
நீ நாளை வளர்ந்த பிறகு
உன்னப்பா -
இப்படி இப்படி என்றெல்லாம்
உனக்கு நினைவிலிருக்குமா!!
--
நடு இரவில்
எழுந்து அழுவாய் கதறுவாய்
கனவு கண்டிருப்பாயோ
என்றெஎண்ணி சாமியறை சென்று
திருநீரெடுத்து - எதையோ எண்ணி
உன் நெற்றியில் வைப்பேன்,
உனக்கு அழுகை நின்றதோ
இல்லையோ -
எனக்கு என்னம்மா அப்பா இட்டதெல்லாம்
நினைவுக்கு வரும்!
சிலநேரம் அம்மா அம்மா
என்றழுவாய்..
அம்மாவிடம் தந்தாலும்
அப்பா அப்பா
என்றழுவாய்.,
நானும் எனக்காக
அழுகிறாயோ என்றெண்ணி
தூக்கி மார்மேல் போட்டு
தட்டுவேன்
நீ இன்னும் கதறி
அழுவாய்..,
ஒன்றும் புரியாமல்
மீண்டும் -
அம்மாவிடமே தருவேன்..
என்ன செய்வதென்று புரியாமல்
எப்படியாவது உன் அழுகையை
நிறுத்தும் எண்ணத்தில் -
அவள் உருக உனை அனைத்துக் கொள்வாள்
நீ மெல்ல அழுவதை நிறுத்திக்
கொள்வாய் -
உன் தேவை அப்பா அல்லது
அம்மா எனும் வார்த்தையோ
கூப்பாடோ அல்ல,
"தாய்மை" என்று -
பின் புரிந்ததெனக்கு!
நீ முதன் முதலில்
வெளிச்சத்திற்கு வந்து
சூரியனை பார்த்து
கண் கூசுகிறதென -
கண்களை மூடிக் கொண்டு
திறக்க இயலாமல் தவிப்பும் சிரிப்புமாய் நிற்க,
நானும் அம்மாவும்
உனை ஹே...எனக்.. கிண்டலடிக்க,
நீ கண்களையும் திறக்க முடியாமல்
முடியவில்லையே எனும்
இயலாமையையும் மறைக்க முயன்று
சிரித்து மழுப்பிய அழகை
எந்த புகைப்படத்தில் பதிந்து வைப்பேன்?
பதிய இயலாமையில் -
கவிதையாவது செய்தேன்!

எழுதியவர் : (19-Jan-14, 8:37 am)
பார்வை : 44

மேலே