காவு ஒருக் கேடா…

‘அடிவாங்கப் போற... ஒழுங்கா கிளம்புடி..... சீக்கிரம்...!!’

‘மா..... நான் வரல மா.... தயவு செஞ்சி என்ன விட்டுடு மா.... உன்ன கெஞ்சிக் கேக்கறேன்...’
‘இந்தப் பேச்சேல்லாம் இங்க எடுப்படாது! ஒழுங்காப் போய் கிளம்பு…போடி !’

தலைக் கிழாய் நின்றாலும் இந்த அம்மா என்னை விடுவதாய் இல்லை. வேறு என்னத்தான் பண்ணுவது. நான் பிள்ளை; அவர் அம்மா.அவர் சொல் மட்டுமே எடுப்படும்.

சலித்துக் கொண்டே நீல வர்ண பஞ்சாபி ஆடை ஒன்றை எடுத்து போட்டுக் கொண்டு அம்மாவுடன் காட்டு காளி கோவிலுக்கு கிளம்பினாள் லிஸ்வா.
இவர்களுக்கு முன்பே இவளுடைய அப்பாவும், அண்ணன்களும் காட்டுக் காளி கோவிலுக்கு சென்றிருந்தனர்.

காட்டுக் காளி கோவிலில் அப்போதுதான் கூட்டம் சேர ஆரம்பித்திருந்தது. சிலைகள் என்று சொல்லும் அளவிற்கு அங்கு ஒன்றும் பெரிதாய் இல்லை. ஐந்து தலை கொண்ட நாகச் சிலை மற்றும் சூலம் ஒன்று மட்டுமே இருந்தன. மற்றவை எல்லாம் வெறும் கற்கள்தான். தமிழன் ஒருவனே கல்லிலும் தெய்வத்தை கண்டவன் என்பது பொய்யா என்ன...இங்கேயும் அப்படித்தான். கற்கள் அனைத்திலும் மஞ்சள் குங்குமம் தடவப்பட்டு அதில் பட்டு துணிகளும் கட்டப்பட்டு இருந்தன.

அவைகளுக்கு முன் நறுமணத்தை ஊதித் தள்ளும் அகர்பத்திகளும் கமகம சாம்பிராணிகளும் தூரத்திலிருந்து பார்போருக்கு புகை மண்டல காட்சியாகவும் ஏன், காடு தான் பற்றி கொண்டது என்பதாய் கூட என்னலாம் அப்படி இருந்தது புகை. பக்தி அளவோடு இருத்தல் நல்லது. அளவுக்கு அதிகமாகிப் போய் ஏன் நாமே நம்மை மற்றவர்கள் தவறாக என்னும் படி நினைக்கத் தூண்ட வேண்டும். ஏன் சாம்பிராணிகளையும் அகர்பத்திகளையும் அளவில்லாமல் அள்ளி அள்ளி ஏற்ற வேண்டும் ?

ஏன் இரண்டு மூன்று அகர்பக்தியும் சாம்பிராணியும் ஏற்றினால் தெய்வம் அருள் தராதா ? கோபித்துக் கொள்ளுமா ? அல்லது முகத்தை தான் திருப்பிக் கொண்டு சண்டைப் போடுமா ? தெய்வம் இப்படியெல்லாம் நடந்துக் கொள்ள அது என்ன சுயநலம் மிகுந்த மானிடப் பிறவியா ? இப்படி எல்லைக் கடந்து ஓடிக் கொண்டிருந்த அவளது கேள்விக் கணைகளைத் துலைத்தது அந்த ஆட்டுக் குட்டிகளின் குரல்.

அலறித் துடித்தன அந்த இரண்டு ஆட்டுக் குட்டிகளும். ஒருகணம் ஸ்தம்பித்துப் போய் நின்ற லிஸ்வாவின் கண்கள் குளமாகின. என்னடா மானிடப் பிறவிகள் இவர்கள்.. கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி சுகந்திரமாக சுற்றித் திரிந்து ஓடி ஆடிய ஆட்டுக் குட்டிகளைக் கழுத்தறுக்க எப்படி இவர்களுக்கு மனது வந்தது.

சற்றுமுன் தான் அவை இரண்டும் ஒன்றோடு ஒன்று விளையாடிக் கொண்டு இலை தழைகளை உண்டுக் கொண்டிருந்தது. அதற்குள் அவைகளை உண்ணும் நேரம் இப்போது வந்து விட்டது என எண்ணி மிகவும் வேதனையுடன் காருக்குள் சென்று அமர்ந்துக் கொண்டாள் லிஸ்வா.

வெட்டிய ஆட்டுத் தலைகள் அங்கேயே மண் தோன்றி புதைக்கப்பட்டது. வெட்டிய ஆட்டுக் குட்டிகள் சமையலுக்கு தயாராயின.ஒருவழியாய் இறைச்சிக் கரி தூள் கொஞ்சமும் பாதகமில்லாமல் கொஞ்சம் தூக்கலாய் போட்டு, துண்டு போடப்பட்ட ஆட்டிரைச்சிகள் அடுப்பின் நெருப்பில் நன்றாய் வெந்துக் கொண்டிருந்தன.

அதே வேளையில், பூஜைக்கான சில ஏற்பாடுகளும் அங்கே நடந்தேறிய வண்ணம் இருந்தது. பெருமாள் தாத்தாவும் வந்தாயிற்று. அப்பா,அம்மா என்று அந்த சுற்று வட்டாரத்தில் அனைவருக்கும் மிகவும் பிரபலமானவர் அவர். அவரை பெருமாள் தாத்தா என்பதை விட 'தேங்காய்' தாத்தா என்று குட்டி வாண்டுகள் எல்லாம் அழைப்பதுதான் இன்னும் விஷேசம்.

காரணம் அவருக்கு ஆத்திரம் வந்துவிட்டால் யார் எவர் என்றுப் பார்க்காமல் ஏன் இடம் எங்கே என்றுக் கூட பார்க்காமல் அந்த இடத்திலேயே தேங்கா தேங்கா என்பார். அதனால் தான், இந்த தோட்ட வாண்டுகள் எல்லாம் சேர்ந்து அவருக்கு 'தேங்கா தாத்தா' என்று பெயர் வைத்துள்ளனர்.

தேங்காய் தாத்தாவின் பிரபலத்தின் காரணம் அவரின் அருள் வாக்கு. இந்த ஊரிலேயே எந்த சாமியாக இருந்தாலும் அது தேங்காய் தாத்தா மீது வந்திறங்கி அருள் தந்தால் சொன்னது சொன்னபடி நடக்கும். அதனால் தேங்காய் தாத்தாவைத் தான் பலர் இது போன்ற காரியங்களுக்கு அழைப்பர்.
குழம்பு சமைத்து சாதமும் ரெடியாகி விட்ட பட்சத்தில் நல்ல பெரிய வாழை இலை ஒன்றில் சமைத்த அத்தனை உணவு வகைகளும் பரிமாறப்பட்டது. உணவுகள் தாங்கிய அந்த இலை அங்கிருக்கும் முதன்மை கடவுளான காட்டுக் காளிக்கு படையலாய் படைக்கப்பட்டது.

காட்டுக் காளிக்கு கூட அங்கு எந்தவொரு சிலையும் இல்லை. பெரிய கருங்கல் ஒன்றுக்குத்தான் ரத்த சிகப்பு பட்டு துணி ஒன்று கட்டப்பட்டு இருந்தது. அதிகமான மஞ்சள் குங்குமமும் அதில் தடவப் பட்டு பார்க்க கருங்கல்லும் கொஞ்சம் ஆங்காரமாய் தெரிந்தது. அங்கு படையல் படைக்கப்பட்ட பிறகு அதனைத் தொடர்ந்து மற்ற தெய்வங்களுக்கும் படையல் படைக்கப்பட்டது. ஐந்து பத்து நிமிடங்களில் படையல் பரிமாறும் வேலை முடிந்து அனைவரும் ஒரு சேர கல்லாக இருந்த காட்டுக் காளியின் முன் வந்து நின்றனர்.

லிஸ்வாவை அழைத்தார் அவளது தாயார். அவளும் வந்து ஒப்புக்கு நின்றாள் அந்த கூட்டத்தில் ஒருத்தியாய். மந்திரங்கள் சில சொல்லப்பட்டு பூஜை ஆரம்பிக்கப்பட்டது. தேங்காய் தாத்தாவிற்கு காட்டு காளியின் அருள் வந்து விட்டது. அவரின் சைகையிலிருந்தே இவைகளைத் தெரிந்துக் கொள்ளலாம்.

ஆம், அருள் வந்தப் பிறகு பொதுவாக தேங்காய்த் தாத்தா யாரிடமும் எதுவும் பேச மாட்டார். சைகை பாஷையையே அதிகம் பயன்படுத்துவார். அப்படியே பேச வேண்டிய கட்டாயம் என்றால் அவரது குரல் மிகவும் கரகரப்பாக தொண்டைக் கட்டியவர் போல் இருக்கும். அவரது வார்த்தைகளும் சுத்தமாய் நமக்கு புரியாது.அதை மொழிபெயர்க்க அங்கே தேங்காய்த் தாத்தாவின் மகன் இருப்பார். அவர் தான், தெய்வத்திற்கும் மனிதனுக்கும் நடுவில் இருக்கும் பாலம். இருவர் பேசுவதையும் நன்றாகவே மொழி பெயர்ப்பார்.

பூஜை ஆரம்பித்த பிறகு குழந்தைகள் பசி தாங்க மாட்டார்கள் என்றப் பெயரில் சமைத்த கொழுத்த ஆட்டிறைச்சி உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது. உணவை ருசித்துக் கொண்டிருந்த லிஸ்வாவின் தாயார் அவளைப் பார்த்து கொஞ்சம் சாப்பிடேன் என்றப் போது வந்ததே லிஸ்வாவுக்கு கோபம் பேசாமல் அவள் அம்மாவைப் பார்த்து முறைத்து விட்டு காட்டுக் காளியாய் அவதாரம் எடுத்திருக்கும் ‘தேங்காய்’ தாத்தாவின் முன் சென்று வாக்கு கேட்பவர்களின் வரிசையில் அமர்ந்தாள்.

வந்தவர்கள் பலர் என்னன்னவோ வாக்கு கேட்டு வாங்கிக் கொண்டு சென்றனர். லிஸ்வாவின் நேரமும் வந்தது. நேராய் ‘தேங்காய்’ தாத்தாவின் முன் சென்றவள் வழக்கம் போல் விழுந்து வணங்கிக் கேட்டாள் அவரிடம்
‘காட்டுக் காளி ஏன் இந்த ஆடுக் கிடா உனக்கு? நீ சாமி தானே பின்ன ஏன் இதுப் போல ஆரஜகமான காவுகளுக்கு நீயும் உடந்தையா இருக்க.. ?’

இந்தக் கேள்வியை கேட்ட அவளைப் பார்த்து காட்டுக் காளியாய் இருக்கும் தேங்காய் தாத்தா சிரித்தார். லிஸ்வாவின் அம்மாவோ கொதித்துப் போனார். தன்னை பார்த்து சிரித்த காட்டுக் காளி ‘தேங்காய்’ தாத்தாவை பார்த்து மீண்டும் கேட்டாள்.

‘எந்த சாமி ஆடு அடிச்சி கொழம்பு வெச்சி படையல் போடா சொல்லி கேட்டுச்சி ? எங்க சொல்லு பார்ப்போம் ? யாரு கேட்டா ? சொல்லு யாரு கேட்டா ? எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம இருக்கற ஒரே ஜீவராசி சாமி மட்டும் தான்! இப்போ அதுக்கும் சாப்பாடை ஆக்கி போட்டு லஞ்சம் தந்தரிங்க... ! சாமி கேட்டுச்சா எனக்கு ஆடு வேணும், கோழி வேணும்னு, அது கேட்கலை.... நம்பலே ஆக்கி நம்பலே சாப்பிடறத்துக்கு கிடா ஒருக் கேடா…?! அதுக்கு என்னத்துக்கு சாமி பேருனுத்தான் தெரியலை... !’

‘கோவிலுக்கு போன அர்ச்சனை சீட்டு வாங்கி சாமிக்கு அர்ச்சனை பண்ணனும். கேட்டா பூசாரிக்கு சம்பளம் தரனும். சம்பளத்துக்கு வேலை செய்றவன் ஏன் தெய்வ சேவை செய்ய வரணும் ? ஊர் உலகத்துல தெய்வ காரியத்த எதிர்பார்ப்பே இல்லாமல் செய்றதுக்கு உண்மையான தமிழ் பக்திமானே இல்லையா ? அப்படியே காசுக்கு செய்றவன இருந்தா அவன் எப்படி உண்மையா அர்ச்சனைப் பண்ணுவான், மந்தரத்தை சரியாச் சொல்லுவான் ?’

‘எவன் தட்டுல எவ்வளவு போடுவான் இப்படித் தானே அவனோட சிந்தனை ஒரு நிலையா இல்லாமல் அலை பாஞ்சிகிட்டு இருக்கும்... அவன் நல்லா இருக்கறதா பத்தி யோசிக்கறவன் எப்படி நம்ப நல்லா இருக்கணும்னு யோசிப்பான் ?’
‘காசு கொடுத்து சாமி கும்படற ஒரே இனம் நம் இனம்தான் ! அல்லாவை தெழுகைப் பண்ண மசூதியில எந்த முஸ்லிமும் கட்டணம் செலுத்தலையே! அதே மாதிரி கிறிஸ்துவர்களும் தேவாலயுத்துல பணம் தந்து ஏசுவை கூம்படலையே ! ஏன் ?? ‘

‘அங்கையும் தெய்வம் இங்கையும் தெய்வம் தானே ?? ஏன் நம்ப தெய்வத்தை மட்டும் காசு தந்து கும்பிட வேண்டிய ஒரு அவல நிலை ? ஏன் இப்படி பணத்தோட ஆதிகத்தை கோவில் வரை கொண்டு போகணும் ? இப்படி ஒரு நிலை உருவாக யார் காரணம்? ஒரு வேளை நம்ப தெய்வம் பணக்கார தெய்வாமோ... பணம் கொடுத்து மட்டும் கும்பிட....’

‘இந்த மாதிரி நடுக் காட்டுல சாமி கேட்டுச்சா எனக்கு பூஜை போடு, எனக்கு பீரு வாங்கி வை, சுருட்டு வாங்கி வை, ஆட்டையும் கோழியையும் காவக் குடுன்னு... சாமி கேக்கல நம்பள நாமேத்தான் இந்த மாதிரி மூட நம்பிக்கைகளை வளர்த்துகிட்டு அதுலயே ஊறிப் போய் மாட்டிகிட்டு இன்னும் மீண்டு வராமா இருக்கிறோம்...!’

‘அந்தக் காலத்துல இந்த மாதிரி காவக் கொடுத்ததற்கு ஒரு அர்த்தம் இருந்துச்சி. அப்போ வசதி படைச்சவங்க ரொம்ப குறைவு. நல்ல சாப்பாடு சாப்படனும்னு தவியா தவிச்சி தவம் கிடந்தவங்க எத்தனையோ பேறு... அவங்களாம் ஒரு வேளை சாப்பாட்டையாவது நல்ல ருசியா சாப்படனும்னு ஆசப் பட்ட நல்ல மனசுக்காரவுங்க சாமி பெயரே சொல்லி இந்த மாதிரி மாசத்துக்கு ரெண்டு மூனு தடவை கிடா வெட்டானாங்க.என்னிக்காவது ஒரு நாள் சாப்படரவுங்களும் வயிறு நிரம்ப நல்லப் படியா சாப்பிட்டு சாமி நல்லா இருக்கணும்னு சொன்னாங்க…!’

‘அவ்ளோதான் ! அது முன்னே பரவால.... சாப்பாட்டுக்கு பஞ்சம். இப்போ எதுக்கு பஞ்சம் ? ஆடு கோழி வாங்கி சமைக்க யார்கிட்டையும் பணமில்லையா ? பணமில்லன்னு சொன்னிங்க அப்பறம் எனக்கு கேட்ட கோவம் வந்துரும் ! தீபாவளியப்போ பாக்கணுமே..... பரக்கறது, ஓடறது, தாவரது,நீந்தறது இப்படி எல்லார் வீட்டு அடுப்புளையும் எல்லாமுமே இருக்கு ! அப்பறம் எதுக்கு இப்படி தேவையில்லாம கிடா வெட்டனும்... ?! யாருக்காக....?!’

தனது மகளின் ஒவ்வொரு ஈட்டி முனை வார்த்தைகளும் லிஸ்வாவின் அப்பாவை வெகுவாகப் பாதித்தது.தம் மகள் தனது கண்களுக்கு இன்னும் நடைப் பழகும் சின்னக் குழந்தையாக தெரிந்தவள் இப்படி அழுத்தமாகவும் மூட நம்பிக்கைகளின் உண்மைகளையும் வெளிச்சமாக நெஞ்சில் கொஞ்சமும் பயமின்றி இப்படி வெட்ட வெளிச்சமாக பகிங்கிரப் படுத்தியது, தம் மகளும் வளர்ந்து விட்டாள் சமுதாய சிந்தனைகளைப் பற்றிக் கூட பேசுகிறாளே என்று வியக்க வைத்தது.

லிஸ்வா பேசியதை கேட்டவர்கள் அத்தனை பேறும் அமைதிக் காத்து நின்றனர். தேங்காய் தாத்தாவையும் சேர்த்து. சில நிமிடங்களில் தேங்காய் தாத்தாவிற்கு உடலெல்லாம் குலுங்க ஆரம்பித்து.

‘ஆத்தா..... மலை ஏறுறா.... ! ‘

இப்படி சிலர் கூறி அவரின் பக்கத்தில் சென்று திருநீறையும் குங்குமத்தையும் மாறி மாறி அவர் முகத்தில் அடித்தனர். லிஸ்வாவின் அம்மாவின் கண்களிலோ கோபக் கனல் கொப்பளித்தது.
‘என்னக் காரியம் பண்ணிட்டடி பாவி ! ஆத்தாக்கு கோபம் வந்து நம்ப குடும்பத்தையே கண்டந்துண்டமாக்கப் போகுதுப் பாரு.... எல்லாம் உனக்கு வாய் கொழுப்புடி....! தேவையில்லாம இப்படி ஆத்தாவுக்கு கோபம் வர மாதிரி பேசிட்டியேடி பாதகி.... விளங்குமா நம்பக் குடும்பம் இதுக்கு அப்பறம்.....!’

அம்மாவின் புலம்பலுக்கு மத்தியில் ஒட்டு பாட வந்து சேர்ந்தது இன்னும் சில கூட்டம்.
‘என்னாப் புள்ள வளர்ததிருக்கற.... ?! ஆத்தாவையே கேள்வி கேக்குது.... ஏதோ நல்ல நேரம் அதான் ஆத்தா உன் மகளை ஒன்னும் பண்ணாம மலை ஏறிட்டா.... இல்ல சாட்டையடி விழுந்துருக்கும் உன் மவளுக்கு....!’

‘கொஞ்சம் மரியாதையா பேசக் கத்துக் குடுடி உன் மவளுக்கு... எங்க எப்படி பேசறதுன்னு ஒரு வரம்பு வேண்டாம்..... வாய்க்கு வந்ததெல்லாம் பேச இது பட்டணம் இல்லடி.... கிராமம்.... நமக்கு தெரிஞ்ஜதெல்லாம் சாமி ஒன்னு மட்டுந்தான்.... நல்லதோ கெட்டதோ சாமித் தான்.... உன் மவளோட பஞ்சங்கத்தெல்லாம் டவுனோடே வெச்சிக்க சொல்லு.....!’

இப்படி பேசிய இருவரையும் ஓட ஓட கல்லால் அடிக்க வேண்டும் போல் இருந்தது லிஸ்வாவிற்கு. மூட நம்பிக்கையிலேயே தினம் வாழ்க்கையை நகர்த்தும் இவர்களுக்கு அதன் பின் விளைவுகளைப் பற்றி எடுத்துச் சொல்லி எந்த பிரோஜனும் இல்லை என்பது அவர்களது பேச்சிலிருந்தே தெள்ளத் தெளிவாக தெரிந்துக் கொண்டாள் லிஸ்வா.

திடிரென்று ஒரு அலறல் சத்தம். அனைவரது கவனத்தையும் திருப்பியது. ஆம், லிஸ்வாவின் அப்பாவிற்கு அருள் வந்து விட்டது. அவருக்கு இதுப் போல் சாமி வரும் ஆனால், அது மிகவும் குறைவு எப்போதாவது ஒரு சில வேளைகளில் மட்டுமே. இவருக்கு இப்படி வந்து சின்ன வயதில் லிஸ்வா பயந்து விட்ட பிறகு அதோடு இப்போதுதான் வருகிறது என்பது அவளுக்கு ஞாபகம்.
‘வந்திருப்பது ஐயா டா.... ! யாரக் கேட்டு டா இங்க கிடா வெட்டனீங்க ? ‘

‘ஐயா காட்டுக் காளி தா…. கிடா வெட்டச் சொல்லி நம்ப சுப்பன் கனவுல வந்து சொல்லிருக்கா…..’
‘எர்ர்ர்ர்ர்........ இனி காட்டுக் காளியா இருந்தாலும் சரி நானா இருந்தாலும் சரி இதுக்கு அப்பறம் இந்தக் கோவில்ல சுத்தம் சைவமாத்தான் படையலா இருக்கணும்...! எனக்கு இந்த மதுபானம் சுருட்டுக் கூட வைக்கக் கூடாது.... இனி இந்த கோவில்ல யாரும் காவக் கொடுக்க கூடாது டா.... ! இது இந்த ஐயனோடே வாக்கு டா.... ! இதை யாரவது மீறனீங்க இருக்கு டா அவனுக்கு இந்த அய்யன் கிட்ட…..! நான் கிளம்பறன் டா... வந்த வேளை முடிஞ்சது.... நான் கிளம்பறேன் டா..... !’

என்றுச் சொல்லி பட்டென சாய்ந்து விழுந்த லிஸ்வாவின் அப்பாவை அங்கிருந்தவர்கள் தூக்கி முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினர்.

ஒரு வழியாய், அனைவரும் மீண்டும் ஒன்றாக நின்று சாமி கும்பிட்டு இனி அந்தக் கோவிலில் கிடா வெட்டப்படாது என்றும் படைக்கப்படும் உணவுகளும் சைவமாகவே படைக்கப்படும் என்றும் உறுதி மொழி எடுத்து அன்றைய வாக்கு கூட்டம் கலைந்தது.

காட்டுக் காளி தன் மனதின் எண்ணத்தை ஈடேற்றி விட்டாள் என்ற நிம்மதி பெருமூச்சோடு கண்களை மூடித் தூங்கினாள் லிஸ்வா. தம் மகள் அழகாய் கண்கள் மூடித் தூங்குவதைப் பார்த்த லிஸ்வாவின் அப்பா தாம் போட்ட ஒரு சின்ன 'ஐயா' நாடகம் பலரை மூட நம்பிக்கையிலிருந்து காப்பாற்றி விட்டதையும் தம் மகளின் உண்மையான கருத்தை ஏதோ ஒரளவுக்கு தம் மக்களிடத்தில் வெற்றிகரமாய் சேர்த்து விட்டதையும் எண்ணி அவரும் சாதித்த பெருமூச்சு விட்டு நிம்மதியாய் உறங்க சென்றார்.

எழுதியவர் : தீப்சந்தினி (20-Jan-14, 11:14 am)
பார்வை : 167

மேலே