உன் காதல் எனக்கு போதும்
சூரியன் மறைந்து நிலவு வரும் அறிகுறிகளும் வானில் நன்றாகவே தெரிந்தன.எனது 'ஹான்ட்ஸ் பிரியை' காதில் மாட்டிக் கொண்டு ஓமனுக்குச் செல்லும் விமானத்திற்காக விமான நிலையத்தில் காத்திருந்தேன்.
எட்டு மாதங்களுக்கு முன்பு எனக்குப் பழக்கமான கார்த்திக். பெயருக்கு ஏற்றாற் போலவே பால முருகனாய் பார்க்கவும் பழகவும் முதலில் இனிமையாகத்தான் இருந்தான்.
ஆனால், போகப் போகத்தான் தெரிந்தது அவன் முருகன் அல்ல மூர்க்கன் என்று. அன்பில் பஞ்சமில்லாதவன். இருந்தும் பலனில்லையே. வெறும் அன்பை வைத்து ஒன்றும் செய்ய இயலாது என்பதனை ஒன்றுக்குப் பலமுறை சொல்லிச் சொல்லிச் சலித்துப் போய் அமைதியாய் நான் இருந்த நாட்கள் பல.
நான் ஓர் அவசரப் புத்திக்காரி. ஏன் முட்டாள் என்று கூட சொல்லலாம். யோசித்து முடிவெடுக்கும் காலம் கடந்து இப்போது வருந்துவதில் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. இருந்தும் தெரிந்தே குட்டையில் விழ நான் விரும்பவில்லை.
இப்போதாவது உறைத்ததே என் மர மண்டைக்கு.
அவன் அன்புக்காய்க் காத்திருந்த தருணத்தில் கிடைத்த எனது நட்பு மனத்தால் என் முதல் காதலை இழந்திருந்த எனக்கும் ஆறுதலாய் இருந்தது. என்னை அவன் 'காதலிக்கிறேன்' என்ற நொடியிலிருந்து சரியாக ஒரு மாதத்திற்கு வேலை இல்லாமல் தான் இருந்தான். நானும் பூம்பூம் மாட்டைப் போல் ஆமாம் என்று அவனது காதலுக்கு பச்சைக்கொடி காட்டி விட்டேன்.
வேலையில்லாத அவனுடைய செலவுகளையும் நானே பார்க்க ஆரம்பித்தேன். அதன் பலன் எனது 21 வயது தங்கச் சங்கலியை அடமானம் வைத்தேன். நான் வைத்தேன் என்பதை விட எனக்காய் அவன் தான் அதைக் கொண்டு போய் அங்கே வைத்தான். அதிலும் மறுமாதமே எடுத்து விடலாம்.
கண்டிப்பாய் எடுத்துத் தந்து விடுவேன் என்றான்.
நானும் சரியென்று தலையாட்டினேன். எந்த நம்பிக்கையில் அவனை நம்பி எனது தங்கச் சங்கிலியை அவனிடம் தந்ததேனோ எனக்கே தெரியவில்லை. தூக்கிக் கொண்டு ஓடியிருந்தால் என்ன செய்திருப்பேன் ? அப்போதே தோன்ற வேண்டிய கேள்விகள் எல்லாம் இப்போது தோன்றுகின்றன எனக்கு.
பற்றாக்குறைக்கு என்னைக் கைப்பிடித்த நேரம் அவனுக்கு அவன் அன்னையின் மூலமாய் வந்தது பிரச்சனை. என்னால் அவனுக்கும் அவனது தாய்க்கும் பேச்சு வார்த்தை நின்று போனது. என்னை அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். ஒப்புக்குக் கூட அவன் தாய் என்னைப் பார்த்துச் சிரிக்கவில்லை. ஓடிச் சென்று அறையில் புகுந்து கதவைத் தாளிட்டுக் கொண்டார். கன்னத்தில் பளார் என்று விட்டது போல் இருந்தது எனக்கு.
அதை விடக் கொடுமை அன்னையர் தினத்தன்று ஆசையாய் அனிச்சல் வாங்கி எடுத்துக் கொண்டு போய் அவரை வெட்டச் சொன்னதுதான் ; கடைசிவரை வெட்டவே இல்லை. ஒரு புன்முறுவல் கூட இல்லை. நடந்து கொண்டிருக்கும் விஷயத்திற்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாததைப் போல் ஹாலில் அமர்ந்து அவர் கீரை ஆய்ந்து கொண்டிருந்தது எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது. இதனை நினைத்து நினைத்து நான் உள்ளம் வெம்பிப் போனதுதான் மிச்சம்.
அவனது தாயைப் பற்றி ஒன்றுமே சொல்லக் கூடாது. ஏன் அவர் பற்றிய பேச்சுக்கே அங்கே இடமில்லை. தொட்டாச் சிணுங்கியாய் இருந்த அவனது குணம் சற்றும் எனக்கு பிடிக்காதது. பலமுறை சென்னேன் பெண் நானே பெண்களுக்கே உரிய இக்குணத்தை இக்காலத்தில் நடைப் முறைப்படுதவில்லை ஆண் நீ ஏன் இப்படி ! என்று வந்த பதிலோ எதிர்மறையாய் இருந்தது.
கை ஓங்கப்பட்டது. அதையும் மீறி கொச்சை வார்த்தைகளின் வரிசையில் கேட்கச் சகிக்காத வாக்கியங்கள். கதவு எத்தி உதைக்கப்பட்டது. பொருட்கள் கண் மண் தெரியாமல் தூக்கி வீசப்பட்டன. தினமும் அழுகையும் வேதனையும் எனது சொந்தமானது.
பிரியத் துணிந்த போதெல்லாம் முதலில் நான் யோசித்தது அவனுக்குத் தேவையான ஒரு நல்ல மனநல மருத்துவர். காரணம் அவன் கெட்டவன் என்று கூறிட முடியாது. நல்ல திறமைசாலி. ஆனால், அதைப் பயன் படுத்தாத சோம்பேறி. நல்ல மனம் கொண்ட அன்பானவன்.இருந்தும் அவன் அன்பில் மட்டுமே ஆட்கொண்டு இருக்க வேண்டும் என்று நினைக்கும் குறுகிய எண்ணம் கொண்டவன். கோபத்தில் நிதானத்தை இழந்து மனத்தை ஒருநிலைப்படுத்தத் தவறிய இக்காலத்து இளைஞன்.
தற்காலிகப் பிரிவு என்ற ஒன்றைப் பற்றி நான் வாய் திறக்கும் போதெல்லாம் அவனது பதில் தற்கொலை. என்ன மடத்தனம் என்று கூட நான் ஆத்திரத்தில் சில நேரங்களில் அவனிடம் கேட்டிருக்கின்றேன். அதற்கு அவன் பதில் மீண்டும் முட்டாள் தனமாய்த் தான் ஒலிக்கும்.
எனது தங்கச் சங்கிலியை அடமானம் வைத்து அவனுக்கு சோறு போட்ட காலம் போய் 'லீவிங் டுகேதர்' என்ற மேற்கத்திய பாணியில் இருவரும் ஒன்றாய் இருக்க வீடு தேடி அலைந்தோம். அதையும் உருப்படியாய்ச் செய்யவில்லை அவன். அவனுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் சத்தியமாய் என்னுள் இருந்த காலங்கள் மறைந்து போனது அவன் என்னை திருமணத்திற்கு முன்பு தொட்டதால்.
என்னை பொறுத்த மட்டில் உண்மையான நேசம் கொண்ட எந்த ஓர் ஆண் மகனும் எப்பொழுதிலும் கண்ணியம் தவற மாட்டான். அதே சமயம் பெண்ணை பூவாய் மதித்து பூஜிக்காவிட்டாலும் அவளை மரியாதையாய் நடத்துவான்.ஆண் என்ற கர்வத்தை அடிப்பதிலும் உதைப்பதிலும் காட்டாமல் இருப்பான்.
இவனோ அதற்கு எதிர்மறையாய் இருந்தது எனக்குப் பெருத்த வருத்தைதை அளித்து. அமர வைத்து கிளிப் பிள்ளையாய்ச் சொன்ன பிறகும் முரண்டு பிடித்தால் என்னதான் செய்ய முடியும் என்னால் ?
வீடு தேடி அலைந்த மிக முக்கியக் காரணம் அவன் தாயார் அவனை வீட்டை விட்டு வெளியேறச் சொன்னதால்தான். அது மட்டுமின்றி, அவன் அம்மா அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் இவன் கண்ட வேலை செய்வதாகவும் புலம்புவது அவன் நண்பனின் தாயாரின் மூலமாய் என் செவிகளில் விழ கொதித்துப் போன நான் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டதன் காரணம் அவன் அம்மாவிற்கும் என் அம்மாவின் வயதுதான்.
பாவம் என் அம்மாவும் அப்பாவும். அவர்களைப் பொறுத்த மட்டில் நான் இன்னும் உலகம் தெரியா சின்னப் பிள்ளை. ஆனால், இங்கு நானோ வேலை இல்லாதவனையே உட்கார வைத்து சோறு போட்டு இருக்கின்றேன். நான் கூட பெரிய மனுஷிதான். இப்படிச் சொல்லி என் மனத்தை நானே தேற்றிக் கொண்ட நாட்கள் பல.
கையிலிருந்த பணம் வரவுக்கும் செலவுக்கும் சரியாய் இருந்த நேரத்தில் வீடு வேறு பார்க்க வேண்டிய சூழ்நிலையில்.வேறு வழியில்லாமல் போய் நின்றோம் இருவரும் வட்டி முதலைகளிடம். முதன் முறையாக அங்கே போகும் போதே கண்ணில் கண்ணீரோடும் மனத்தில் பாரத்தோடும் தான் சென்றேன்.
எனது சம்பளம் இருக்கும் வங்கி அட்டை, எனது அலுவலக முகவரி, எனது அடையாள அட்டையின் நகல் எடுத்து வைத்துக் கொண்டார்கள். சுலையாக 2500 ரிங்கிட்டை வாங்கிக் கொண்டு அவர்கள் சொன்ன வட்டிக் கணக்கை கவனித்தேன். ஒன்றும் மண்டையில் ஏரிய பாடில்லை. கார்த்திக் எல்லா விவரங்களையும் நன்றாய்க் கேட்டுக் கொண்டான். அதான் முன்னமே சொன்னேனே அவன் திறமைசாலி என்று. அவர்கள் சொன்ன கணக்கை கற்பூரமாய்ப் பிடித்துக் கொண்டான்.
இப்போது மாதாம் மாதம் அசல் மற்றும் வட்டி என்று மொத்தத் தொகையாய் ரிங்கிட் 500 என் சம்பளத்திலிருந்து வெட்டப்படுகின்றது. இருந்தும், மனம் தாளவில்லை எனக்கு. காரணம் அன்று வீட்டிற்காக மட்டும் பணம் வட்டிக்கு எடுக்கப்படவில்லை அவனது தற்போதைய போக்குவரத்துக்கு உதவியாய் ஒரு மோட்டாரை வாங்குவதற்கும் சேர்த்துதான் அன்று கடன் வாங்கப்பட்டது.
படித்துப் படித்து சொன்னேன் அவனிடம். கையில் அவ்வளவு தொகை வைத்திருந்தால் கை அரிக்கத் தான் செய்யும்,முடிவெடுத்த காரியத்தில் சரியாக செயல் பட இயலாது. அதனைக் கொண்டு போய் வங்கியில் பத்திரமாய்ப் போடு என்று. பத்தாக் குறைக்கு எனது இன்னொரு வங்கி அட்டையை அவனிடத்தில் கொடுத்து அதில் போடு என்று ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் பத்து முறையாவது சொல்லிருப்பேன்.
பாவி இறுதிவரை அதை வங்கியில் போடவே இல்லை. நாளாக நாளாகக் கையில் இருந்த பணம் முழுதுமாய்க் கரைந்தே போனது. ஐயோ ! கடவுளே என்று நான் அவன் முன் அழுத போது அவனோ ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்கு போனான். அதனால், தான் என்னவோ குளியலைறை எனது குமுறல்களின் இடமாய் மாறிப் போனது.
தண்டமாய்க் கட்டிக் கொண்டு இருக்கிறேன் கடன் வாங்கிய பணத்தைக் கடன்காரியான நான்.
எனது ஆபிஸின் முன்புறம் வந்து மோட்டாரை முறுக்குவதும் அதைச் சத்தமாய் ஓட்டுவதும் அவனது வாடிக்கை. எனது வேலை இடத்தில் உனக்கு வேலை இல்லை என்பதை நாசுக்காக சொல்லியும் பலனில்லை. அங்கே வந்து அமர்ந்து கொண்டு பாதுகாவலாளியுடன் அவன் அடிக்கும் அரட்டை எனக்குப் பிடிக்காதது. காரணம் நான் வேலை செய்த இடம் இந்தியர்கள் புடை சூழ இருக்கும் இடம்.
ஆபத்திற்கு வயதான தாத்தாவிற்கு உதவி செய்தால் கூட அதை உதவி என்று நினைக்காமல் நாக் கூசாமல் கொச்சைப் படுத்துவதில் என்னுடன் வேலைப் பார்ப்பவர்கள் வல்லவர்கள்.தினமும் ஒரு கிசு கிசு காதைக் கிள்ளும். இந்தப் பொழப்பே வேண்டாம் என்ற பாணியிலே நான் அனைவரிடத்திலும் ஒரு அடி தள்ளியே நிற்பேன். அப்படிப்பட்ட என்னுடைய காதலனும் அப்படியே இருக்க வேண்டும் என்று நான் நினைத்தது மிகப் பெரிய முட்டாள் தனம் என்பது இப்போது எனக்குப் புரிகிறது.
புத்தகம் ஒரு சிறந்த நண்பன். அதனால் நமக்குத் தீங்கேதும் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், கார்த்திக் மட்டும் புத்தகங்களை எமனாகப் பார்ப்பான். அவனும் படிக்க மாட்டான் என்னையும் படிக்க விட மாட்டான். அதற்காக கூட பல முறை எங்களுக்குள் சண்டை வந்திருக்கிறது. அவனுக்கு அவ்வளவு
படிப்பறிவு இல்லை என்ற உண்மையை மறைக்க முடியாது. மற்றவர்களின் முன்னிலையில் தவறாய் எந்த ஒரு வார்த்தையும் பேசியோ அல்லது மற்றவர்கள் பேசுவது புரியாமலோ அவன் சங்கடப் பட்டு தலை குனியக் கூடாது என்று அவனை கொஞ்சம் ஆங்கிலம் படிக்கச் சொன்னது பெரும் தவறாய்ப் போயிற்று.
என்ன படித்த மோகத்தில் ஆடுகிறாயா ?! திமிர் உனக்கு எல்லாம் தெரியும் என்று. அவன் கத்தி ஆர்ப்பாட்டம் செய்த இரவுகள் பல.
நல்லதைச் சொன்னால் கேட்க நாதியில்லை என்பது எவ்வளவு பெரிய உண்மை. அப்படித்தான் ஒருநாள் ஒரு தோழியை காணச் சென்றேன். இருவரும் ஆங்கிலத்தில் உறவாட இவன் பார்த்துக் கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில் என் தோழி என்னவோ சொல்லே அவன் இடையில் புகுந்து தவறாய்ச் சொல்ல எனக்கு மிகவும் அவமானமாய்ப் போனது. இருந்தும் என்ன பண்ணுவது. எல்லாம் என் தலை எழுத்து. காரணம் நான் என்ன சொன்னாலும் அவனைப் பொரறுத்த மட்டில் நான் திமிரில் பேசுகிறேன் என்றே அர்த்தம்.
தமிழ் என்றால் உயிராய் இருக்கும் எனக்கு இலக்கியத்தின் பால் சற்று ஆர்வம் தூக்கலாகவே இருந்தது. அதற்கும் அவன் தான் எனக்கு முட்டுகட்டையாய் இருந்தான். மொத்தத்தில் அன்பு என்ற வேலியைப் பயன்படுத்தி என்னை அவன் கட்டுக்குள் கொண்டு வருவதே அவனுடையே தலையாய நோக்கமாய் இருந்தது.
இதையெல்லாம் இனியும் பொறுத்துக் கொள்ள நான் தயாராய் இல்லை. அவனை பிரிந்து செல்ல முடிவெடுத்த பட்சத்தில் நான் இன்று அவனை பிரிந்து செல்கிறேன் ஓமனுக்கு. என் பிரிவாவது அவனைக் கொஞ்சம் யோசிக்க வைக்கும் என்ற எண்ணத்தில்.
நீ இனி எனக்குத் தேவை இல்லை... எனது கடைசி வார்த்தையை எழுதி முடித்து அதை வழக்கமாக நானும் அவனும் கைபேசி வைக்கும் மேஜை மேல் வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி ஏறக்குறைய அரைமணி நேரம் ஆகிறது.
அன்பு என்ற ஒன்றைக் கொண்டு மற்றவர்களைச் சந்தோஷப்படுத்த வேண்டுமே தவிர கஷ்டப் படுத்தக்கூடாது என்பதனை என்று அவன் உணர்கிறானோ அன்றே நான் அவனிடம் வந்து சேர்வேன். இதுவும் அலாதியான அன்பின் நம்பிக்கையே.