மனைவிக்காக

மனைவியைக் குஷிப்படுத்துவது எப்படி?
அலுவலகம், நண்பர்கள் என ஆண்கள் பொழுதுபோக்க எத்தனையோ வழிகள் உள்ளன. இல்லத்தை வழிநடத்தும் பெண்களுக்கு வீடு, கணவர், குழந்தைகள்தான் எல்லாமே. குடும்பமே உலகம் என்று இருக்கும் பெண்களை மகிழ்ச்சியடைச்செய்ய சில வழிமுறைகளை மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒருநாள் வீட்டுவேலை

எத்தனை நாள்தான் வீட்டுவேலைகளை பெண்களே செய்வது. விடுமுறை நாளன்று நண்பர்களை பார்க்கப் போகிறேன் என்று டேக்கா குடுக்காமல் சின்ன வேலைகளில் உதவினால் பெண்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஏதாவது ஒருபொருளை விரும்பி கேட்டால் உடனே மறுக்காமல் பார்க்கலாம் என்று சொன்னாலே போதும் பெண்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விடுவார்கள்.

பேசுவதை கேளுங்கள்

நான் என்ன சொன்னாலும் என் கணவர் கேட்டுக்குவார் என்று பெருமையாகக் கூறுவதைத்தான் பெண்கள் விரும்புகின்றனர். மாத சம்பள பணத்தை அப்படியே கொண்டு வந்து, மனைவி கையில் கொடுத்துவிட்டு ஒவ்வொரு நாளும் செலவுக்கு அவர்களிடம் கேட்க வேண்டுமாம். கேட்ட உடன் தராமல் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு தரும்போது மனைவியின் மனதிற்குள் மகிழ்ச்சி பொங்குமாம்.

சிரித்த முகம்

அலுவலகத்தில் இருந்து வரும்போதே டென்சனை சுமந்து கொண்டு வராமல் சிரித்த முகத்தோடு கணவர் வரவேண்டும் என்பதைத்தான் அநேகம் பெண்கள் விரும்புகின்றனர். மலர்ந்த முகத்துடன் வீட்டுக்கு வரும் கணவரை மகிழ்ச்சி பொங்க வரவேற்க பெண்களும் ரெடியாகத்தான் இருக்கின்றனர்.

எங்காவது வெளியில் சென்றால் அழகாக உடை அணிந்து செல்வதைப்போல வீட்டிற்குள் இருக்கும் போதும் கணவர் ரசனையாக உடை அணியவேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனர்.

சமையல் எப்படி இருந்தாலும் `நல்லாயிருக்கு என்று கூறினால் மகிழ்வார்களாம். நன்றாக சமைக்கத் தெரிந்தால்கூட சும்மா ஒரு பேச்சுக்கு `என் அம்மா என்னை சமையல் அறை பக்கம் எட்டிப்பார்க்கவே விடவில்லை’ என்று பந்தாவாக சொல்லி மகிழ்வார்களாம்.

பர்சேஸ் செல்வது முக்கியம்

கடையில் சென்று என்ன பொருள் வாங்கினாலும் மனைவியை அழைத்துச்செல்லுங்கள் ஏனென்றால் ஒரு கைக்குட்டை வாங்க வேண்டுமென்றால் கூட என்னைக் கேட்காமல் என் கணவர் வாங்கமாட்டார் என்று பெண்கள் பெருமையாக பேசுவதற்கு அது உதவும்.

கணவரோடு புடவைகடைக்குச் சென்று சும்மாவாவது அவரை காத்திருக்க வைத்துவிட்டு எட்டு மணிநேரம் கழித்து வெளியே வந்து, `எந்த புடவையும் எனக்கு பிடிக்கலைங்கன்னு’ சொல்லிட்டு, முகத்தை அப்பாவித்தனமாய் வைத்துக்கொண்டு `பக்கத்து கடைக்கு போகலாமாங்க?’ என்று கேட்கும்போது கணவர் மறுக்காமல் சரி என்று சொன்னால் மகிழ்ச்சியில் மனைவியின் உச்சி குளிர்ந்து போகுமாம்.

மனைவிதானே சொல்றாங்க, கேட்டுக்குவோம்!

எழுதியவர் : முரளிதரன் (20-Jan-14, 9:00 am)
Tanglish : manaivikaaka
பார்வை : 285

மேலே