வீழ்வேன் என நினைத்தாயோ
வாழ்வே..
வீழ்வேன் என நினைத்தாயோ?
வீழ்த்திடலாம் என கொக்கரித்தாயோ?
விழமாட்டேன்..
வீழ்ந்தாலும் வீறுகொண்டு
எழுவேன். எழுந்து நிற்ப்பேன்.
இந்த அக்கினிக் குஞ்சின்
சிறகுகளை ஒடித்தாலும்
சீறிக்கொண்டு விண்ணில் பறப்பேன்.
என் அடையாளங்களை
எத்தனைமுறை அடைத்து வைத்தாலும்
எத்தனைமுறை அவமதித்து
அலைக்கழித்தாலும்
அத்தனை முறையும் தலைசிலிர்த்து
மார்நிமிர்த்தி எழுவேன்.
தஞ்சாவூர் பொம்மையென
எனை நினைத்தாயோ?
நினைத்தபடி ஆட்டுவிக்கலாமென
என கணித்தாயோ?
தலை ஆட்டவும் தெரியும்.
தலைமை ஏற்கவும் தெரியும்.
வலிக்காத ஊசியாய் - வாழ்வை
கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லும் நஞ்சாய்
வஞ்சக வார்த்தைகளால் - என்
தன்மானத்தை கொத்தி கொத்தி
என்னை மாமன்றங்களில்
தலை குனியவைத்து
நிலை தடுமாற செய்து
வீழ்த்தி விடலாமென நினைத்தாயோ
விழித்து கொண்டேன்.
நேர்கொண்ட பார்வையும்
நிமிர்ந்த நன்னடையும்
நேர்வழி பாதையில் நற்பயணமும்
வீழ்வதற்கு இனி சாத்தியமில்லை
வீழ்ந்து விட்டால் அது வாழ்க்கையுமில்லை
வெட்ட வெட்ட முளைக்கும் வாழையென
வெட்ட வெட்ட முளைப்பேன் - நான்
குட்ட குட்ட நிமிர்வேன் - தடைகள்
முட்ட முட்ட வளர்வேன்.
வாழ்வே ..
வீழ்வேன் என்று நினைத்தாயோ?
வீழ்த்தி விடலாமென என்று கணித்தாயோ?