வாய்க்கு நீ போட்டுவிடு பூட்டு

வாய்க்கு நீ போட்டுவிடு பூட்டு..!
15 / 09 / 2025

வாய்க்கு நீ போட்டுவிடு பூட்டு
தோழன் நான் சொல்லுறத கேட்டு

வாழ்வினில் நீ முதுமை எய்துவிட்டால்
கழுதையாய் கத்தினாலும்
உன்சொல் அம்பலம் ஏறாது.
ஏறினாலும் நடைமுறைக்கு வாராது.
அதனால்
வாய்க்கு நீ போட்டுவிடு பூட்டு
தோழன் நான் சொல்லுறத கேட்டு

கையிலே காசு இருந்தால்தான்
கைகட்டி உன்பின்னே சுற்றும்
காக்கைகள் கூட்டம்
தம்படி கொஞ்சம் குறைந்தாலும் உனக்கு
தர்மஅடி கொடுத்து தூர ஒதுக்கும்.
அதனால்
வாய்க்கு நீ போட்டுவிடு பூட்டு
தோழன் நான் சொல்லுறத கேட்டு

நீதி நேர்மை தர்ம நியாயம் எல்லாம்
கைதியாகி கம்பிக்குள் கிடைக்கும்
விதியும் மதியும் கொக்கரித்து உன்னை
வெச்சு செய்யும்
அதனால்
வாய்க்கு நீ போட்டுவிடு பூட்டு
தோழன் நான் சொல்லுறத கேட்டு

மரியாதை தேய்ந்து உன்னை
'ஏ'யென்று அழைத்துவிட்டால்
குறையாது செய்திருந்தாலும்
உன் கண்முன்னே எல்லாம்
குப்பையாய் நாறிப்போகும்
அதனால்
வாய்க்கு நீ போட்டுவிடு பூட்டு
தோழன் நான் சொல்லுறத கேட்டு

மதியாதார் வாசல் மிதியாதே
அன்றய வாழ்வின் நிலை
உன் வீட்டிலேயே உன்
மதிப்பிழந்து மானமிழந்து
அகதியாய் அடிமையாய்
வாழ்வது இன்றைய
முதுமையின் நிலை
அதனால்
வாய்க்கு நீ போட்டுவிடு பூட்டு
தோழன் நான் சொல்லுறத கேட்டு

வரும் தொல்லைகள் எல்லாம்
நம் வாயால் வரும் வினைகள்தான்
இனி அந்த கிரீடமும் வேண்டாம்
அந்த சிம்மாசனமும் வேண்டாம்
புன்னகையே சிறந்த மருத்துவம்
மௌனமே உயர்ந்த 'மா'தவம்
அதனால்
வாய்க்கு நீ போட்டுவிடு பூட்டு
தோழன் நான் சொல்லுறத கேட்டு

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (15-Sep-25, 2:17 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 35

மேலே