புதிரைக் கடக்க

#புதிரைக் கடக்க...

பூட்டித்தான் வைக்கிறேன்
பொல்லாக் கோபம்
போட்டுத்தான் உடைகின்றார்
பொய்யால் நாளும்..!

நெற்றிக்கண் திறக்கின்றேன்
நீசர் கண்டால்
பற்றித்தான் எரிகின்றேன்
பாசாங்கு நீண்டால்..!

நேற்றைப்போல் இன்றுதான்
இல்லை யில்லை.
இற்றைப்போல் நாளைதான்
இருப்ப தில்லை..!

காலந்தான் மிரட்டுகிறக்
கடிய பொழுது
ஓலந்தான் மனதுக்குள்
ஒரு வழியேது..?

காசு பணம் துட்டு க்காய்
கயவர் எங்கும்
தூசாகிப் போனதன்றோ
தூயவன்பும்..!

அறிவுதனைத் திருடுகிற
அநியாயம் ஐயோ
குறிவைத்தத் திருடெல்லாம்
கொள்ளை யன்றோ..!

காருலகில் போர் முனைகள்
கண்களில் கானல்
வேரறுக்க வேண்டுகிறேன்
வீணர்.. கோணல்..!

எத்தனைதான் இன்னல்கள்
எதிர் நிற்பினும்
வித்தகம் தான் பழகிவிட்டேன்
வெற்றி கொண்டும்..!

எத்தனைதான் வயதாகி
இன்னல் கடந்தும்
எதிர்காலம் எல்லோர்க்கும்
இறப்பு வரைக்கும்..!

புதிர்க்காலம் ஆகாது
பூத்துக் குலுங்க
மதிவேண்டும் மயங்காது
மாண்புடன் விளங்க..!

சுற்றித்தான் தெய்வங்கள்
சூழ்ந்து கிடக்க
போற்றித்தான் வணங்குகிறேன்
புதிரைக் கடக்க..!

சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (15-Sep-25, 5:03 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 28

மேலே