எமண்டா ஸ்டீவன் சார்லஸ்சாகிய நான்……

இப்படி நடக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. நானா... அதுவும் அவனுடான.... எனக்கு அவன் மேல் காதலா...? சிவ சிவா....! நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

எமேண்டா ஸ்டீவன் சார்லஸ் ஆகிய நான் என் எதிர்காலத்தை எண்ணி தீவிரமாக யோசித்துக் கொண்டு இருக்கிறேன். நான் எடுக்கப் போகும் முடிவில் தான் இருக்கிறது நான் எமேண்டா ஸ்டீவன் சார்லஸ்சாகவே இருக்கப் போகிறேனா அல்லது எமேண்டா சோனி ஜெரிக்கோ வலேண்டினோவாகப் போகிறேனா என்று.

சோனி ஜெரிக்கோ வலேண்டினோ.... இதுதான் என்னவனின் பெயர். அப்படிதான் நான் நினைத்துக் கொண்டு அவனை உரிமையோடு யார் அனுமதியுமின்றி என் நெஞ்சில் பத்திரமாய் தங்க வைத்துள்ளேன்.

அவனை எனக்கு கடந்த 2 வருடங்களாகத் தெரியும். நான் வெளிநாட்டுக்கு பணம் அனுப்பும் பிரபலமான நிறுவனம் ஒன்றில் அப்போதைக்குப் பணிபுரிந்து வந்தேன். அவனை அங்குதான் கண்டேன். அங்கு வருவோர் அனைவரிடத்திலும் புன்முறுவலோடும் இன்முகத்துடனும் நடந்துக் கொள்வது எனது வழக்கம். அதனாலேயே, எனக்கு அங்கு வாடிக்கையாளர்களை விட ரசிகர்களே அதிகம். பல இனத்தவர்களும் என்னுடன் பேசிப் பழக தயங்க மாட்டார்கள்.

வயதானவர்களை அப்பா, அம்மா என்றும் எனைப் போன்ற ஒத்த வயதுடையோரை அண்ணன், அக்கா எனவும் ஆங்கிலத்தில் அழைப்பது எனது பழக்கம். அது அவர்களுக்கும் மிகவும் பிடிக்கும்.

ஒருநாள் நான் வேலை முடிந்து வீடு திரும்பும் நேரம் பார்த்து கனத்த மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருந்தது. காற்றும் மழையும் ஒரு சேர என்னை தள்ளாட வைத்தது. நான் நிலை தடுமாறும் நேரத்தில் அங்கே மழையில் நனைந்தவாறே ஓடோடி வந்து என் குடைக்குள் புகுந்தான் சோனி.

‘ஹாய்... சோரி கேன் ஐ… ?’ என்றான் சிரித்துக் கொண்டே. நான் அவனைப் பார்த்து புன்னகை புரிந்தவாறே ‘யு ஆல்ரெடி இன்’ என்றேன்.

இருவரும் சேர்ந்தே சிரித்தோம். அவனது ‘மைவி’ ரக கார் சாலைக்கு அந்தப் பக்கம் இருப்பதாக சொன்னான். நான் அவனை அவனது ‘மைவி’ கார் இருக்கும் இடத்திற்கு குடையிலேயே பத்திரமாக அழைத்து சென்றேன். சோனி என்னை வீட்டில் இறக்கி விட்டு செல்வதாக சொன்னான். நான் கொஞ்சம் தயங்கி நின்றேன்.

இருந்தும் மனதில் ஒரு பக்கம் என்னத்தான் அப்படி நடந்து விடும் இவனுடன் சென்றால் இவனும் மனிதன் தானே. இவன் வேற்று இனத்தையும் நாட்டையும் சேர்ந்தவன் என்பதால் அவன் கெட்டவன் என்று பொருளில்லையே. என்னை என்ன குண்டு கட்டாக கட்டி விற்று விடவா போகிறான் ? அப்படி விற்பதற்கு நான் என்ன அழகிய ரதியா ? அதெல்லாம் ஒன்றுமே கிடையாது. நான் கருப்பாகத்தான் இருப்பேன் ஒல்லியாக சின்னதாய். அவ்வளவுதான்.

இப்படி யோசித்துக் கொண்டே நான் காருக்கு வெளியே குடையில் நின்றிருந்தேன். அவனோ காரின் ஹோனை வேகமாக அடித்து எனது சிந்தனையை கலைத்து சிரித்தான். நானும் காரினுள் ஏறி அமர்ந்துக் கொண்டேன்.

அவனே பேச்சை ஆரம்பித்தான். அவனது பெயர் சோனி ஜெரிக்கோ வலேண்டினோ. அவனது பூர்விகம் கீனி கொனாக்கிரி. வளர்ந்தது படித்து எல்லாம் இத்தாலியில் தான். அவன் இங்கு மலேசியாவிற்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. அவன் தலைநகரின் பிரபலமான தனியார் கல்லூரி ஒன்றில் ‘சைக்கலோஜி’ படிக்கின்றான்.

நான் தான் அவன் ஒவ்வொரு முறையும் பணம் அனுப்பும் போது கொண்டு வரும் அவனது பாஸ்போர்ட்டை பார்கிறேனே. தெரியாத பின்னே இவனைப் பற்றி. அவன் என்னை எப்போதுமே பணம் அனுப்ப வரும் போது கிண்டல் செய்வான். சில வேளைகளில் எனக்கு ஆத்திரமாக வந்தாலும் பல வேளைகளில் வெட்கம்தான் வரும். காரணம் அவன் செய்வது சேட்டைகள் மட்டுமல்ல சில ‘பிளேக் மேஜிக்’குகளும்தான். பாவி பையன் எங்கு தான் இதுப் போன்ற வித்தைகலையெல்லாம் கற்றுக் கொண்டானோ தெரியவில்லை.

பேசிக்கொண்டே இருக்கும் சாக்கில் திடிரென்று கையில் ரோஜா மலரை வர வைப்பான். அழகழகான வாழ்த்து அட்டைகள் பல மிட்டாய்கள் என இப்படி கொஞ்சமா நஞ்சமா அவனது ‘பிளேக் மேஜிக்’கின் அட்டகாசம்.

இப்படியேத்தான் அவன் என்னை கவர்ந்து விட்டானோ என்னவோ.அவன் என்னை என் வீட்டில் இறக்கி விட்டு சென்று விட்டன். இருந்தும் எங்களது பேச்சு நிக்கவில்லை. இருவரும் கைப்பேசியில் பேச ஆரம்பித்தோம்.

இதற்கிடையில் நான் பணிப்புரிந்த இடத்தில் ஏற்பட்ட சில மனஸ்தாபங்களால் நான் அந்த வேலையை ராஜினாமா செய்தேன். புதிய வேலையை தேடித் திரியும் நேரத்தில் எனக்கும் சோனிக்கும் நெருக்கம் கொஞ்சம் அதிகமானது. இருவரும் நெருங்கிய நண்பர்களாகவே ஆகிப் போனோம். அடிக்கடி அங்கே இங்கே என ஊர் சுற்றித் திரிந்தோம். அப்போதுதான் நான் அவனை பற்றி இன்னும் ஆழமாய் தெரிந்துக் கொண்டேன்.

சோனிக்கு கலையில் ஆர்வம் கொஞ்சம் அதிகம். அதுவும் படங்கள் வரைவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவன் என்பதை அவனது ஓவிய புத்தகங்களைப் பார்த்த பின்புதான் தெரிந்துக் கொண்டேன். அவனுக்கு நமது இந்திய கலாச்சாரத்திலும் ஈடுப்பாடு இருந்தது. அவனுக்கு மருதாணி கூட கைகளில் அழகழகாய் வரைய தெரிந்திருந்தது ஆச்சரியமே. அவனுக்கு நம்பவர்களின் ரசம் என்றால் உயிர். எனக்கே தெரியாதே பல நல்ல ருசியான வாழை இலை மற்றும் சைவ அசைவ உணவகங்களுக்கும் அழைத்து சென்று கேட்டு கேட்டு வாங்கி குடித்தான் ரசத்தையும் மோரையும்.

சில நேரங்களில் நான் ஸ்தம்பித்துப் போய் கூட இருக்கின்றேன். அப்படி என்ன ருசியைத்தான் கண்டானோ நம்பவர்களின் உணவில். கேட்டால் அறுஞ்சுவை உணவு உடலுக்கு நல்லது உலகில் எங்கு சென்றாலும் இது கிடைக்காது அவன் நாடு உட்பட என்று எனக்கே சொல்லி தருகிறான்.

இது எல்லாவற்றையும் விட நான் ஆச்சரியத்தில் மூழ்கி அதிர்ந்து போன விஷியங்களும் இருக்கின்றன. அவற்றில் ஒன்று அவனது காரில் நான் பார்த்த 'செத்தே போனேன்டி' பாடல் சீடி. யாருடையது என்று கேட்டப் போது,

ஆயிரம் பேர் வந்தாக் கூட நீதான் என் செல்லம்...
அண்ணன் தம்பி எத்தனப் பேறு சொல்லிவிட்டு போ போ...
எல்லாருமே மச்சான்தானே சொந்தமாகினோ...
நான் காதுல கடுக்கான் போட்டு உன்னை மயக்கிட வந்தவனோ...
தினம் கனவுல கனவுல பார்த்து உன்னை ரசிக்கறேன் நான் இப்போ....

அவனது இந்த பதிலை கேட்டு எனக்கு மயக்கம் வராததுதான் மிச்சம். இப்போதுதான் தெரிகிறது இவன் காரில் ஏன் இந்த சீடி என்று. தினமும் கேட்டு கேட்டு மனதில் பதித்து விட்டதால் மிகவும் சுலபமாய் பாடலாய் வாயில் வந்து விட்டதாம். அதன் விளக்கத்தையும் பாவி மிகச் சரியாக சொல்கிறானே. பரவாயில்லை ‘கேஷ் வில்லனுக்கும் ஓஜி தாஸ்சுக்கும்’ வெளிநாட்டுகாரன் கூட விசிறியை இருக்கிறானே. செத்தே போனேன்டி பாடலை பாடி நான் சாகமால் இருந்ததுப் போக இன்னொரு சங்கதியும் தெரிய வர நான் துண்டை காணாமல் துணியக் காணமால் எங்காவது ஓடி விடலாம் என்றுதான் நினைத்தேன்.

அன்றொருநாள் அழைத்து சென்றான் காராக்குக்கு. எங்கடா போகிறோம் என்ற போது நிறுத்தினான் காரை ஒரு கருப்பு சுவாமியின் கோவில் முன்னுக்கு. இவன் ஏன் இங்கு காரை நிறுத்தினான் என்று கேட்டப் போதுதான் தெரிந்தது.

‘கருப்பா ரொம்ப நல்லவரு.... நெறைய பண்ணுவாரு நல்லது... அவருக்கு சிகார் பிடிக்கும்... ஐ நோ... நீ பிரெய் பண்ணு...!’

அவனது இந்தக் கூற்றை கேட்டதும் சத்தியமாய் எனக்கு பேச்சே வரவில்லை. தமிழன் அல்ல.அதுவும் வேறு நாட்டுக்காரன்; கறுப்பினத்தவன். அவன் நம் காவல் தெய்வம் கருப்பு சுவாமியை வணங்க வந்திருப்பது ஆச்சரியத்திலே ஆச்சரியம் தானே. நான் அவனை பெருமை பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் பட்டென வந்து நின்றான் கண் முன் வேட்டியில்.ஆடிப் போய் விட்டேன். இவனது செயல் ஒவ்வொன்றும் புதிதாகவும் வியப்பாகவும் இருந்தது எனக்கு.

ஒரு வேலை இது எல்லாம் வெறும் நடிப்பாக இருப்பதற்கும் வாய்ப்பிருப்பதை நான் அறியாமல் இல்லை. அதை முதலில் ஆராய வேண்டும். அப்படி இவன் நடிக்கிறான் என்றறிந்தால் நிச்சயம் அவனது முகத்திரையை கிழித்தேறிவேன் என்ற வேட்கையோடு அவனது நண்பர்களைக் கொஞ்சம் நோட்டமிட அவர்களோடு என் பொன்னான நேரத்தை வெட்டியாய் செலவழித்தேன்.

நான் நினைத்ததைப் போல் அல்ல சோனி. அவன் முற்றிலும் வித்தியாசமானவன் என்பது நிருபனமானது. அவனது இச்செயல்கள் எல்லாம் என்னை பார்த்து பழகும் முன்பே இருந்து வந்திருகின்றது என்பதை அவன் இனம் மட்டுமல்லாது மற்ற இன மாணவர்களின் மூலமாகவும் தெரிந்துக் கொண்ட பிறகு அவனை தவறாய் நினைத்த அந்த ஒரு நொடி பொழுதை எண்ணி மிகவும் வருந்தினேன் மனதார.

அவன் மீது நாள் பட நாள் பட நம்பிக்கை அதிகமாயிற்று. எனக்கு ஆண்கள் கடுக்கன் அணிந்தால் பிடிக்கும் என்றேன். காலையில் சொன்னோன் மாலையில் வந்து நிற்கிறான் காதில் கடுக்கனுடன். இந்த ஷம்பாஷ லீலைகலில் எனக்கு புது வேலை தேட வேண்டும் என்ற நினைப்பே இல்லாமல் போனது.

அப்படி போய் கொண்டிருந்தது என் வாழ்க்கை சோனியுடன். அன்று வெள்ளிகிழமை. நான் கோவிலுக்கு செல்வது வழக்கம். சிவனை பக்தி பரவசத்தோடு கைகள் கூப்பி வணங்கி கொண்டிருந்த வேளையில் என் தொலைப்பேசி தொல்லைப்பேசியானது.

எரிச்சலோடு வந்த அழைப்பை எடுத்தேன். மறுமுனையில் சோனி. மிகவும் பதற்றத்துடன் அவன் அவனது சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் எனவும் அவனது தாயாரின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் சொன்னான். போகும் முன் கட்டாயம் என்னை பார்க்க வேண்டும் என்றான். இருவரும் திட்டமிட்ட படி அன்றைய இரவே சந்தித்தோம்.

இதுவரை வேலை இல்லையே என்றக் கவலை இல்லாமல் இருந்ததன் காரணம் என்னுடன் சுற்ற ஓர் ஆள் இருந்ததால். ஆனால், சோனி இப்படி திடிரென்று ஊருக்கு கிளம்புவது என் நிலைமையை திக்கு முக்காட வைத்து. அவனை போ என்றும் போகாதே என்றும் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்த என் நிலையை புரிந்துக் கொண்டவனாய் என்னையும் அவனுடன் வர அழைத்தான்.

நான் அப்படியே அதிர்ச்சி அடைந்தவளாய் வேண்டுமென்றே என்னைக் காட்டிக் கொண்டேன். ஆனால், உள்ளுக்குள் மிகவும் கொண்டாட்டமாய் இருந்தது. இருப்பினும், இது ஒன்னும் விளையாட்டு விஷயமில்லையே. கோலாலும்புரிலிருந்து ஜோகூருக்கு பயணம் செய்ய அழைப்பதைப் போல் அல்லவா அழைக்கிறான் இவன். ஹ்ம்ம்... எண்ணப் பண்ணுவது எனக்கும் போக வேண்டுமென்ற ஆசைத்தான் இருந்தும் போக முடியாதே அவனை நம்பி அவ்வளவு தூரம். வேண்டாம் நான் வரவில்லை என்றுச் சொல்லி விட்டேன் அவனிடம்.

இப்படி சொல்லி விட்டேன் என்றுத்தான் பெயர் ஆனால், போகலாமே என்ற ஒரு எண்ணம் வேறு மண்டையைக் குடைந்துக் கொண்டிருந்தது. இறுதியாக அவனுடன் செல்ல ஆயோத்தமானேன்.

முதல் விமானப் பயணம் எனக்கு சுமுகமாகவே அமைந்தது. இத்தாலியில் வெனிஸ் நகரத்தில் சென்று இறங்கியதும் எங்களை வீட்டிற்கு அழைத்து செல்ல சோனியின் அக்காவும் அவரது இரண்டு பிள்ளைகளும் வந்திருந்தனர். அக்காவும் தம்பியும் மிக சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தனர். நானோ அமைதியாய் மட்டுமே இருந்தேன். பிள்ளைகள் இருவரும் என்னை பார்த்து அவர்களது மொழியில் பேச முற்பட்ட போது சோனி எனக்கு ஆங்கிலம் மட்டுமே புரியும் என்றான்.

அந்தப் பிள்ளைகள் இருவருக்கும் ஏறக்குறைய எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும். அவர்கள் இருவரும் அவர்களை கிறிஸ்டியானோ சேர்ஜியோ மற்றும் பேலா இசபேல் என அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

மாளிகைப் போன்ற அவர்களது வீட்டைக் கண்ட எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. படத்தில் வருவதுப் போல கதவு திறக்க ஒரு ஆள், பயணப் பையை தூக்க ஒரு ஆள் என இதுவெல்லாம் புதிய அனுபவமாகவே இருந்தது எனக்கு.

சோனி வீட்டில் உள்ள அனைவரையும் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். அதன் பிறகு அவனது தாயாரைக் காண அழைத்து சென்றான். கட்டிலிலிருந்த அவர் என்னைப் பார்த்ததும் புன்னகை புரிந்தார். என்னுடன் சகஜமாக உரையாட ஆரம்பித்தார்.

நானும் இதுதான் சமயம் என எண்ணி என் கைப்பையில் இருந்த அன்னை காளிகாம்பாளின் குங்குமத்தையும் முருகனின் திருநீரையும் ஒன்றாய் சேர்த்து அவரது நெற்றியில் வைத்து விட்டேன். அது அவருக்கு மிகவும் பிடித்து போய் விட்டது. சாமியில் என்ன வேறுபாடு இருக்கிறது என்று நினைத்து விட்டார் போலும்.

சோனியின் தாயாருக்கு என்னை மிகவும் பிடித்து விட்டது. என்னுடன் நிறைய சுவாரசியமான கதைகளைப் பேசினார். எனக்கும் அவர் சொல்லும் கதைகளைக் கேட்க மிகவும் ஆர்வமாக இருந்தது. எல்லாம் சோனியின் சின்ன வயது குரும்புத்தனத்தின் கதை தான்.

எப்படித்தான் அவர்களோடு பழக போகிறேனோ என்றிருந்த எனது மனக்குறை அப்படியே தீர்ந்துப் போனது. சில வேளைகளில் நானே சமையலும் செய்தேன். இதற்கிடையில் ஒருநாள் சோனியின் தாயார் என்னிடம் சோனியை திருமணம் செய்துக் கொள்ள சம்மதமா எனக் கேட்டார். அதுவரை எனக்கில்லாத இவ்வெண்ணம் அப்போதுதான் ஊற்றெடுக்க ஆரம்பித்தது.

அவனைக் கட்டிக் கொள்ளலாமே ? அதிலென்ன தவறு ? ஏன் அவன் மனிதனில்லையா ? இனம் தானே வேறு. அதுவும் அவன் என்னை விட கொஞ்சம் கலர் அதிகம்தான். நன்றாக படித்திருப்பவன். படிப்பு முடிந்து மீண்டும் இத்தாலிக்கே திரும்பி விடுவான். நல்ல வசதியான குடும்பம். அவன் அப்பா அரசாங உத்யோகத்தில் இருப்பவர். அக்காவும் மாமாவும் கூட கல்லூரி விரிவுரையாளர்கள். பார்த்த மாத்திரத்தில் என்னுடன் ஒட்டிக் கொண்ட பாசமான குடும்ப உறவுகள். இதை விட இன்னும் என்ன வேண்டும் ஒரு பெண்ணுக்கு ?

இப்படியே நான் யோசிக்கையில் எனக்கும் குடும்பம் இருக்கிறது என்று அப்போதுதான் என் மரமண்டைக்கு உரைத்து. அதுவும் என் குடும்பமா ஐயோ ! சத்தியமாய் நான் சோனிக்கு டாட்டா.... காட்ட வேண்டியதுதான். என் குடும்பம் மிகவும் கட்டுக் கோப்பான வாழ்க்கை முறையை பின்பற்றும் ஹிட்லர் குடும்பம் எனலாம். நான் மட்டும் எப்படியோ தப்பித்து வேலையைக் காரணம் காட்டி கோலாலும்பூருக்கு வந்து சேர்ந்து விட்டேன். அதற்காக நன் ஒன்றும் இங்கு தலைக் கால் புரியாமல் யாருடனும் சேர்ந்து கொட்டம் அடிக்கவில்லை. பக்குவப்பட்ட எனக்கு எல்லாம் ஒரு அளவாகவே உள்ளது.

இன்று நான்காவது நாள். இத்தாலிக்கும் சோனியின் குடும்பத்தினருக்கும் விடைக் கொடுக்கும் நாள். அனைவரது முகத்திலும் சோகம் கவ்விக் கொண்டது. எனக்கும் அப்படிதான். ஏதோ ஒரு வழியாய் விடைப் பெற்று மலேசியா வந்தாயிற்று. சோனி என்னை காதலிப்பதாய் விமானத்தில் வரும் போது சொன்னான். நான் கொஞ்சம் திடுக்கிட்டேன். நீ இருந்தால் என் வாழ்க்கை சிறப்பாய் இருக்கும் என்றான். அதைத் தவிர வேறெதுவும் சொல்லவில்லை. என் குடும்ப பின்னனியை நினைத்து எதுவும் சொல்ல தோன்றவில்லையோ என்னவோ.

சும்மா இருந்த என்னை அவன் அம்மாவும் இப்போது அவனின் காதலும் சேர்ந்து அதிகம் சிந்திக்க வைத்தது. அவனை நான் நேசிக்கின்றேனா என்பதே எனக்கு இன்னும் சரியாய் தெரியவில்லை, இந்த லட்சணத்தில் நான் எப்படி மற்ற விஷயங்களை சரி செய்ய இயலும்.

தேர்வு காரணமாக சோனி என்னை சந்திப்பது கொஞ்சம் குறைந்தது. இருந்தும் என்னால் அதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. என்னை அறியாமல் கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென கொட்டியது. அவனது அந்த கொஞ்ச நாள் பிரிவு என் வாழ்க்கையையே சுழற்றி போட்டு விட்டது.

அவன் மீது எனக்கு காதல். அது உறுதியாகி விட்டது. ஆனால், இனி வரும் தடைகளை எப்படி சமாளிக்க போகிறேன் அதுதான் தெரியவில்லை. நிச்சயம் என் வீட்டில் பெரிய பிரளயமே வெடிக்கப் போகிறது காரணம் அவன் கருப்பினத்தை சேர்ந்தவன். அவனது பூர்விகம் மட்டும் தானே. இதை சொன்னால் யார் கேட்க போகிறார்கள். 'நெக்ரோ'காரனையா கட்டிக்கப் போறே.... இப்படியல்லாவா கேட்பார்கள். மிகவும் அசிங்கமாகி விடுமே.

இதையெல்லாம் விட நான் என்னையே கேட்டுக் கொண்ட சில கேள்விகள். காதலுக்கு கண்ணில்லைத் தானே. இதை எழுதியதும் தமிழன்தானே. பிறகு ஏன் சோனியுடனான என் காதலை தவறாக கருத வேண்டும். அவனைப் போல் சிலர் இங்கு படிக்க வருவதாய் சொல்லி தவறான தொழில் செய்வது மட்டுமின்றி நம் நாட்டு இந்திய பெண்களையும் அவர்கள் வலைக்குள் விழ வைத்து தப்பான செயல்களுக்கு பயன்படுத்தி கொள்கிறார்கள்.

நான் அதை மறுக்கவில்லையே.

ஆனால், என் சோனி அப்படியில்லையே. அவன் குடும்பத்தை நான் பார்த்து பழகி விட்டேன். அவனையும் இந்த 2 வருடங்களில் நன்றாய் ஓராளவுக்கு புரிந்துக் கொண்டேன்.

இப்படி இருக்கும் சமயத்தில் நான் ஏன் தயங்க வேண்டும் ? என் காதலை யாரவது கிண்டல் செய்தால் நான் ஏன் வெட்கி தலைக் குனிய வேண்டும் ? அவர்களது அறியாமைக்கு நான் பொறுப்பாக முடியுமா ? அவர்களுக்கு என் உண்மை நிலையை விளக்கி சொல்ல தான் வேண்டுமா ?

சோனியைக் கட்டிக் கொண்டு வாழப் போவது நான். ஊர் உலகத்தை பற்றி எனக்கென்ன கவலை. ஊர் ஆயிரம் பேசும். அதையெல்லாம் பார்த்தால் நாம் நிம்மதியாய் வாழ முடியுமா ?

என் சோனி ஜெரிக்கோ வலேண்டினோ ஒரு கருப்பினத்தை சேர்ந்தவன். அதை அறிந்தேதான் என்னை அறியமால் அவன் மீது காதல் கொண்டேன். அவனும் என்னை விரும்புவதால் எங்கள் இருமனமும் திருமணம் எனும் பந்தத்தில் இணைவதை மற்றவர்கள் விரும்பாவிடில் அது எங்கள் பிரச்சனையல்ல என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். என் பெற்றோருடன் கலந்து பேசி ஒரு நல்ல முடிவுக்கு வர முயற்சிப்பேன்.

அப்படி ஒருக் கால், என் முயற்சி தோல்வியை தழுவினால் மீண்டும் முயசிட்டு வெற்றி பெறுவேன் எமண்டா ஸ்டீவன் சார்லஸ்சாகிய நான் எமண்டா ஜெரிக்கோ வலேண்டினோவாக ஆகா.

எழுதியவர் : தீப்சந்தினி (22-Jan-14, 11:08 am)
பார்வை : 283

மேலே