பெயரளவில் போலும் பேத்தி இல்லை நான்
ஏரோட்டும் உழவனுடன் வாழ்க்கை
தேரோட்ட வந்தவள் அவள்
நீரோட்டம் போல் வாழ்வை
நீந்திக் கடந்தவள்
எட்டு பிள்ளை பெற்ற பின்னும்
கட்டுக் குலையா மேனி அழகு
கண்டாங்கி சேலைக்குள்ளே
கள்ளமில்லா உள்ளம் அழகு
ஊதி ஊதி எரியா அடுப்பிலும்-மனம்
எரியாத அமைதி அழகு
இல்லாதவைகளே இருந்த போதும்
முற்றம் நிறைந்த சுற்றம் அழகு
வெற்றிலை அரைத்த வாயில
வெறுப்புகள் அசைந்ததில்லை
பசி என்று வந்தவரை அவள்
விட்டு விட்டு உண்டதில்லை
அலுத்து சலித்ததில்லை
அடிமை என்று நினைத்ததில்லை
உழைத்துக் களைத்ததாய்
ஒரு போதும் உரைத்ததில்லை
புள்ளி வைத்த கோலத்திலும்
தாயக்கட்டை ஆட்டத்திலும் அவள்
நேர்த்தி என்னை வியக்க வைக்கும்
நாளும் கேட்டிருந்த நல்லதங்காள்
கதையினிலே கண்ணீராய் கரைந்தது
அவள் கவலை என புரியும்
ஆடு மாடு காடு கழனி அடுப்படி
இத்தனையே அவள் உலகம் ஆன போதும்
போதும் என்ற மனமிருக்கும்
நிறை காண வழியில்லா வாழ்விலும்
"என்ன குறை எனக்கு மகாராணி
மாதிரில்லா வச்சிருக்காரு மகராசன்"
என்ற நிறைவான மொழி இருக்கும்
பெயரளவில் போலும் அவள் பேத்தி இல்லை நான் !!!