இரண்டு தொடைகளுக்கு நடுவில் இருப்பதுதான் கற்பா

‘தாலி கட்டாம எப்படி ஒரு பொண்ணு ஒருத்தன் கூட ஒண்ணா தங்க முடியும் ? என்ன கதை இது? கொஞ்சம் கூட எனக்கு பிடிக்கலை....!’ என்று தன் கையில் இருந்த சஞ்சிகையை விட்டெறிந்தாள் தாமினி. தன் தோழியின் செய்கை ஒன்றும் புதிதல்லவே, அதனால் அபிலாஷா அமைதியாகவே இருந்தாள்.
ஆனால், இந்த விஷயத்தை தாமினி விடுவதாய் இல்லை. காலையிலிருந்து இதே புலம்பல் தான். கதை எழுதியது யார்? யாராக இருந்தாலும் மறுப்பு தெரிவித்து கட்டாயம் ஒரு வாசகர் கடிதம் எழுதியே ஆக வேண்டும் என்ற குறிக்கோளோடு பேனாவும் கையுமாய் விடுதியில் அலைந்து கொண்டிருந்தாள்.
தாமினியைப் பார்க்கப் பார்க்க அபிலாஷாவுக்கு சிரிப்புதான் வந்தது. அது ஒரு கதை. அதை படித்தோமா பேசாமல் இருந்தோமா என்றில்லாமல் ஏன்தான் இப்படிப் போட்டு அலட்டிக் கொள்கிறாளோ இவள் என்றிருந்தது.
சொன்னாலும் கேட்கும் ரகம் இவளில்லை என்பதை நன்கு அறிந்தவள் அபிலாஷா. ஆதலால், எடுபடாத இடத்தில நம் பேச்சுக்கு என்ன மரியாதை கிடைத்து விடப் போகிறது என்ற போதிலும் தாமினி இவளையும் நிம்மதியாய் விடாமல் போட்டுக் குடைந்து கொண்டிருந்தது தான் அபிலாஷாவுக்கு சங்கடமாய் இருந்தது.
நள்ளிரவு பன்னிரெண்டைத் தாண்டியும் தாமினியின் எழுத்துணர்ச்சிக்கு அளவில்லாமல் போய் அபிலாஷாவின் தூக்கத்தில் சொருகிய கண்களைத் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தாள். வந்ததே அபிலாஷாவுக்கு கோபம்.
விருட்டென கட்டிலிலிருந்து எழுந்தவள் நேராய் குளியலறைக்குச் சென்று முகத்தைக் கழுவி விட்டு மீண்டும் கட்டிலை நோக்கி வந்தாள். கலைந்திருந்த தனது கூந்தலை அள்ளி எடுத்து பெரிய 'ஹேர் பின்' ஒன்றைப் போட்டுக் கட்டினாள்.
தாமினியின் அருகில் வந்தமர்ந்தவள், ‘இப்போ உனக்கு என்னடி பிரச்னை? கல்யாணம் பண்ணாமல் ஒரு பொண்ணு ஒரு பையன் கூட 'லிவிங் டுகெதர்' பண்றது தப்பு! அப்படிதானே? உனக்கு அந்த சிறுகதை பிடிக்கலை. அதுக்கான மறுப்பு கடிதம் எழுதியாச்சி. நாளைக்கி அதை அனுப்பினா போச்சு!
அவ்ளோதான்! அப்படியும் உன்னால பொறுக்க முடியாட்டி உன் 'பேஸ்புக்ல' இதப்பத்தி எழுது! சரியா? இதுக்காக என் தூக்கத்தை தயவு செஞ்சி கெடுக்காத! புரியுதா?’ என்று சொல்லி விட்டு அமைதியாக இருந்த தாமினியை ஒரு தரம் முறைத்துப் பார்த்தாள் அபிலாஷா.
தாமினி அவளைப் பார்த்து, ‘ஏண்டி, உனக்கு கோவம் வரலையா அந்த சிறுகதைய படிச்சா?? நம்ப பண்பாட்டையே குலைக்கற வகையிலே இருக்கற ஒரு கதை இந்த சமுதாயத்துக்குத் தேவையா? அதுனால என்ன பயன்? யாருக்கு என்ன நன்மை? யாருமே ஏன் அதை சிந்திக்க மாட்டேங்கிறீங்க?
இந்த மாதிரி கதையை படிக்கும் ஒரு ஆணும் பொண்ணும் கற்புங்கறது காக்கப்பட வேண்டிய ஒரு விஷயமில்லைன்னு தப்பான ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்திக்க மாட்டாங்களா? சொல்லு அபிலாஷா உனக்கே ஒரு மக இருந்து அவ வளர்ந்து கற்பாவது கிடக்குது அதுன்னு சொன்னா உன்னால ஏத்துக்க முடியுமா?’
தாமினியின் கேள்விகளும் அவள் உணர்ச்சியின் ஆவேசமும் அபிலாஷாவை ஒருகணம் தடுமாற வைத்தது. பின் சுதாரித்துக் கொண்டு ஒரு நிலைக்கு வந்தவளாய் தாமினியை சமாதானம் செய்தாள் அபிலாஷா. பின்பு மெல்லமாய் தன் பேச்சை ஆரம்பித்தாள் அபிலாஷா.
‘கற்பு... அப்படினா என்ன தாமினி ? அதுக்கு சரியான விளக்கம் உன்னால தர முடியுமா? அப்படி தர முடிஞ்சா நீ இப்படி உணர்ச்சி வசப்பட்டு பேசவே மாட்டே! கற்புங்கறது பெண்ணுக்கு மட்டுமில்ல ஆணுக்கும் இருக்கு. முதல்ல எல்லாரும் அதைப் புரிஞ்சிக்கணும். உன்னையும் சேர்த்துதான்!’
‘கற்பு நெறிங்கறது வெறும் காமத்துக்கு மட்டுமில்ல மனசுக்கும் இருக்கு. திருமணமாகாத ஒரு ஆணும் பெண்ணும் கூடும் போது மட்டும் கற்பு களங்கப்படறது இல்ல.... ரோட்ல நடந்து போகும் போது ஒரு அழகான ஆணையோ பெண்ணையோ பார்த்து அங்கேயே ஒரு அஞ்சு நிமிஷம், ஏன் அஞ்சு செகண்ட்ஸ் ஸ்தம்பிச்சு போயி அப்படியே நிக்கும் போது சஞ்சலப்படுதே மனசு, அந்த மனசு கூட களங்கப்பட்ட கற்புக்கு சமம்தான்.’
‘ஹனுமான் மாதிரி நெஞ்சைக் கிழிச்சி காமிக்க முடியாத பட்சத்துல நாமே நினைக்கறது மற்றவங்களுக்கு தெரியாத போது நம்மோட விரசமான எண்ணங்கள் அப்படியே மறைக்கப்படுது. அப்படி மறைக்க படற உண்மைகள் கற்பை களங்கப்படுத்தலையா?’
‘இல்லே நான் தெரியாமத்தான் கேட்கறேன்.... ரெண்டு தொடைகளுக்கு நடுவில் இருக்கறது மட்டும் தான் கற்பா?? அப்படினா நாமே எல்லாம் அங்கிருந்து தானே பிறந்தோம் அப்பறம் ஏன் அந்த இடத்துல கிடைக்கற அற்ப சுகத்துக்கே அலையறோம்?’
‘நாமே மட்டுமில்ல புழு, பூச்சி, நாய்னு இப்படி எல்லாமே அதுக்குத்தான் அடிமை பட்டு போய் கிடக்குது! ஒரு அம்மா தம் பிள்ளைக்கு ரத்தத்தை பாலாக்கி தர இடம்தான் மார்பு. ஆனா, அதே இடத்துல காம எண்ணத்தோடு கை வைக்கும் போது அது வேறே மாதிரியான உணர்வுகள தூண்டுது! அதுக்கும் இதுக்கும் வேறுபாடு இருக்குத்தானே? ஒரு பிள்ளைக்கு அம்மா பாலூட்டறத பார்க்கற ஆணோட கண்ணுல இருக்கு அவன் பார்வையும் எண்ணமும் கண்ணியமானதா இல்ல காமமானதானு!!’
‘கற்பும் அப்படிதான்! கழுத்துல மஞ்சத் தாலி இல்லாமல் ஒரு ஆணுக்கு காலை திறக்கற பொண்ணு எல்லாம் கற்பில்லாதவங்க பண்பில்லாதவங்கன்னா...இந்த உலகத்துல விபச்சாரியே இருக்க மாட்டாளே! எந்தப் பொண்ணும் எவனுக்கும் ரெண்டாந்தாரமா போயிருக்க மாட்டாளே! ஏன் எவளும் கள்ளக் காதலியாக் கூட இருந்திருக்க வாய்ப்பில்லையே ! எல்லாரும் ஒருத்தனுக்கு ஒருத்தியாத்தானே வாழ்ந்திருக்கனும்!’
‘கற்புங்கறது மனசுல இருக்கு. நம்ம செயல்ல இருக்கு. நம்ப பேசற வார்த்தையில இருக்கு. எந்த கெட்ட பழக்க வழக்கமும் இல்லாத ஒரு மனுஷன் வாயத் திறந்தாலே காமமான கொச்சை வார்த்தையை அள்ளி வீசுனா அது கூட கற்பை அவமதிக்கறதுதான்!’
‘செத்து மடிஞ்சா மண்ணுக்கு போகற இந்த ஆறடி ஒடம்பு. அதுல இருக்கறதுக்கு பேருதான் கற்புன்னா.... இந்த உலகத்துல எவனுமே ஒழுக்கமா இருக்க மாட்டான்!’
‘பிரசவத்துக்கு கணவனை பிரிஞ்சு ஒரு பொண்ணு தாய் வீட்டுக்கு போகும் போது அவ திரும்பி வர வரைக்கும் அவ இடத்துல வேறே ஒருத்திய படுக்க இல்ல; நினைக்க கூட மனம் கூசற ஆம்பிளையும், அலுவலுகத்துல தம் புருஷனை விட அழகான வசதியான ஆணப் பார்த்தாலும் தம் புருஷனோடு நம்பிக்கையைக் குலைக்காம மனசுல எந்த தவறான எண்ணத்தையும் படர விடாம இருக்காளே, இவுங்க ரெண்டு பேரும் கற்பானவுங்கத்தான்!’
‘காரணம் கற்புங்கறது பெண்ணுறுப்பும் ஆணுறுப்பும் சேர்றது மட்டுமில்ல, ஒருத்தர் இன்னொருத்தர் மேலே வைக்கற நம்பிக்கையையும் ஆழமான அன்பும் தான் !’
‘அதுக்காக கல்யாணம் பண்ணாம ஆணும் பொண்ணும் ஒன்னா இருக்கறதும் அவுங்க கற்ப கட்டிக் காக்கறதும் பெரிய விஷயமில்லை. அது இப்படியும் எடுத்துக் கொள்ளலாம்.
அதாவது, ஒண்ணா இருக்கறதுனால அவுங்க ரெண்டு பேரும் நிச்சயம் தாம்பத்திய உறவுல ஈடுபடுவாங்கனும் ஈடுபட மாட்டாங்கனும் சொல்ல முடியாது காரணம் அது அவங்களோட தனிப்பட்ட விஷயம். ஆனா, அவுங்களோடு அந்த தனிப்பட்ட விஷயம் மற்றவர்களையும் சாரும் போது அவுங்க மட்டுமில்ல நாம எல்லாரும் கொஞ்சம் நிதானமா யோசிக்க வேண்டிய விஷயமா இது மாறிப் போகுது….’
‘கற்புங்கறது அது பாட்டுக்கு அது ஒரு இடத்துல இருக்கு. ஆனா, அந்த விஷயத்துல எப்படி நாம நம்பளையே சரியா வெச்சிக்க போறோம். அதுதான் இப்போ இங்க பிரச்சனையே. பொம்பளப் பிள்ளைங்க ஒரு ஆணோடு நெருங்கிப் பழகும் போது அவுங்க பெற்றோர்கள் அவுங்க மேலே வைச்சிருக்கற நம்பிக்கையைக் கொஞ்சம் நினச்சு பார்க்கணும், அவுங்க வருங்காலத்தையும் கொஞ்சம் கருத்துல வெச்சிக்கணும்! இப்படி யோசிச்சாலே போதும் எந்தப் பொண்ணும் கழுத்துல தாலிய தொங்க விடறத்துக்கு பதில் கயத்துல தொங்க மாட்டா….’
‘அப்படியே ஒண்ணா இருந்து ஒண்ணுமே பண்ணலை அப்படினா, கண்டிப்பா அந்த பையனுக்கு மனசுல நம்ப அக்கா தங்கச்சியை நாமே இந்தப் பொண்ணப் பன்றதைப் போலவே எவனாச்சம் செய்வான்னு தோணும்! இல்லே அந்தப் பொண்ணுக்கு சின்ன பயம் இருக்கும். நம்ப வீட்டுல தெரிஞ்சா தோலை உரிச்சிடுவாங்கனு…’
‘ஆனா, இதுலாம் நடக்கற காரியமில்ல காரணம் உன்னையும் என்னையும் கூட பாரேன் நாமே ‘பப்க்கு’ போறோம் வரோம் ஆனா, இதுவரைக்கும் ஏதாவது எக்கு தப்பா நடந்துருக்கா? இல்ல…. அதுக்கு காரணம் நமக்கு நம்ப மேலே இருக்கற நம்பிக்கை. நம்ப நம்பிக்கைதான் நமக்கு கற்பு.’
‘மண்ணுல மக்கிப் போகப் போற இந்த உடம்புக்கும் அதுல இருக்கற கற்புக்கும் ஏன்தான் எல்லாரும் இப்படி அடிச்சிக்கிறீங்களோ எனக்கும் தெரியல! அப்படி என்னாதான் இருக்கு? காதல் அப்படின்னு ஒருத்தன நம்பி நம்ப பிறப்பிடத்தை அவன தொட விடறது அது தப்புன்னு சொல்றோம்.’
‘அது உண்மையா தப்புதான். காரணம் நம்ப கலாச்சாரப்படி திருமணத்திற்கு பின்பு ஐயர் குறிச்சு கொடுத்த நேரத்துல நடக்கற தாம்பத்தியம் தான் வழக்கம். ஆனா, அதே சமயம் அப்பா அம்மா ஒரு மாப்பிளையை பார்க்கறாங்க முன் பின் பழக்கமில்லாத ஒருவன கட்டி வைக்கறாங்க.... சின்னக் குழந்தையிலிருந்தே ஒழுக்கம்னா இப்படிதான் இதுதான்னு வழக்கபடற நாமே எப்படி முன் பின் பழக்கமில்லாத ஒருவனை கட்டிக் கிட்டு அவன் கிட்ட நம்ப கற்பை குடுக்கறோம்....?’
‘நம்பிக்கை அப்படிங்கற அடிப்படையிலதான்.... தாலி கட்டி கல்யாணம் நடந்துருச்சு அப்படின்னு ஒரு காரணம் அப்படியும் சொல்லலாம். அவனுக்கு என்ன பிரச்சனை இருக்கோ இல்லையோ ஏன் நமக்கே ஏதாவது சரி வர இல்லன்னாக் கூட கல்யாணம் அப்படிங்கற ஒன்னு நடந்தப் பிறகுதானே தெரியுது....’
‘ஆனா, அதுக்காக நாம என்ன நமக்கு பிரச்சனை இருக்கா இல்லையானு பார்க்கிறவன் கூடலாமா தாம்பத்தியம் வெச்சிக்க முடியும்... முடியாதே...ஏன் முடியாது? நமக்குன்னு ஒரு வரம்பு முறை இருக்கு ! கலாச்சாரம் இருக்கு... ! இதை எல்லாததையும் விட மனச்சாட்சிங்கற ஒன்னு எல்லார்கிட்டையும் இருக்கு.... ! கண்டவன்கிட்டயும் போனா நாமளும் ஒரு விதத்துல விபச்சாரம் செய்றதாதானே அர்த்தமாகிடும்...’
‘உண்மையான கணவன் மனைவி இல்லே காதலர்கள் அவர்களோட துணையை வேறே ஆளோடு சேர்த்துப் பார்க்க விரும்ப மாட்டாங்க....அப்படியே இப்படி ஒன்னு நடந்தா சிரிச்சிக்கிட்டும் இருக்க மாட்டாங்க.... இது ரெண்டு பேருக்குமே பொருந்தும்...’
‘தனக்கு பிடிச்சமான ஒரு பொருளா இருக்கட்டும் அல்லது உயிருள்ள ஒரு மனித உடலா இருக்கட்டும் அளவுக்கு அதிகமான ஆசை அது தனக்கு மட்டுமே சொந்தம்னு நினைக்க தோணும்!’
‘அப்படி நினைக்கும் போது ஒரு உயிருள்ள பொண்ணோ ஆணோ முழுதாய் அவுங்கள விரும்பறவுங்களுக்கு சொந்தமாகிப் போறாங்க. உடல், பொருள், ஆவினு இப்படி மொத்தமும் கலந்து ஒன்னாவே ஜீவிக்கறாங்க.... அங்கே கற்பும் இல்லே கர்மாந்தரமும் இல்லே... உண்மையான அன்பும் அளவுக்கு அதிகமான நம்பிக்கையும்தான் இருக்கு....’
‘நான் திரும்பவும் சொல்றேன் கற்புங்கறது ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும்.
கன்னித்தன்மையை இழந்தப் பெண்ணோ ஆணோ தற்கொலை பண்றது இல்ல.... மனசு இழந்து போனவங்க மட்டும்தான் தற்கொலைப் பண்றாங்க, வாழ்க்கையையே தொலைச்சிட்டு நிக்கறாங்க....’
‘இங்கப் பாரு தாமினி.... சேர்ந்து இருக்கறது இல்லாதது.... அப்படில்லாம் ஒன்னும் இல்லே... எங்க இருந்தாலும் எப்படி இருந்தாலும்... நம் எண்ணங்கள், செயல்கள் நம்ப பேச்சு வார்த்தை, நம்ப நட்பு கூட்டம், நாமே படிக்கும் புத்தகங்கள் இப்படி எல்லாமே உண்மையா நெறியா இருக்கற பட்சத்துல நாம நம்ப கற்பை சிறப்பாவே கட்டிக் காக்கலாம்..’
‘இழுத்து போர்த்திகிட்டு ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி இருக்கற பொண்ணும் சரி…. நெத்தியில பட்டையும் கழுத்துல கொட்டையையும் போட்டுருக்கற ஆம்பளையும் சரி…. குட்டப் பாவடை போட்டுருக்கற பொண்ணா இருந்தாலும் சரி… நிறைய பொண்ணுங்க கூட சிரிச்சி பேசுற ஆணா இருந்தாலும் சரி… நம் வாழ்க்கை நம் கையில் என்கிற மாதிரி அவுங்க கற்பு அவுங்க கையில….!’
‘சோ... த மாரல் ஆப் த ஸ்டோரி இஸ் கற்பு அப்படிங்கறது நம்ப உடம்புல மட்டுமில்ல மனசு, எண்ணம், செயல், பேச்சு இப்படி எல்லாத்துலயும் இருக்கு.....புரிஞ்சதா தாமினி....?!’
பேச்சை முடித்த தன் தோழி அபிலாஷாவை வைத்தக் கண் வாங்காமல் ஆச்சரியமாய் பார்த்த தாமினிக் கேட்டாள்,
‘ஏய்... உனக்கு இவ்வளவு விஷயம் தெரிஞ்சிருக்கு.... நான் எதிர்பார்க்கவே இல்ல! அபி.... ‘யு ஆர் சீரியஸ்லி கிரேட் !’ இப்போ நான் ரொம்ப தெளிவா இருக்கேன் அபி.... கற்பு ரெண்டு தொடைகளுக்கு நடுவுல மட்டுமில்ல நம்ப மனசுலையும் எண்ணத்திலையும் கூட இருக்குதுன்னு நல்லாப் புரிஞ்சிக்கிட்டேன்....! ‘ஐ லவ் யு சோ மச்.... தேங்க்ஸ் அ லாட்.... ஃபீல் பீஸ் நவ்....குட் நைட்...’ !
என்று சொல்லி அபிலாஷாவைக் கட்டிப் பிடித்து கன்னத்தில் ஒரு இச்சு வைத்து படுக்கையில் விழுந்தாள்.
அடக் கடவுளே எப்போதுமே என்ன சொன்னாலும் மல்லுக்கட்டிக் கொண்டு சண்டைக்கு நிற்பவள் இன்று அதிசயமாய் தான் சொன்னதை முழு மனதாய் ஏற்றுக் கொண்டு பச்சைக் கொடி காட்டிவிட்டுப் படுத்து விட்டாளே என்று அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியோடு அபிலாஷாவும் படுக்கையில் விழுந்தாள்.