570 விழுமமே தோற்றுவிப்போம்
**********விழுமமே தோற்று விப்போம்!***************
[சிறப்புகளைத் தூய்மைகளைத் தோற்றுவிப்போம்!]
+++++++++எசேக்கியல் காளியப்பன்++++++++
=========அறுசீர் விருத்தப் பாக்கள்========
பிறருடைய நல்ல கவிதை வரிகள் நம்முள் எழுதிப் பார்க்க ஒரு உந்துதலை ஏற்படுத்துவன என்பதற்கு ஒரு சாட்சியாக இருக்கும் இனி வரும் இந்தக் கவிதை:
நடையது மாறு மென்றால்
==நடைமுறை மாறு மன்றோ?
படையுடல் பற்றி னாற்போல்
==பழக்கமும் மாறிப் போனால்
உடலினில் கேடு சூழ்ந்த
==உணர்வுமே கொள்வ தேபோல்
நடைமுறைச் சீர்கேட் டிற்கு
==நல்லதோர் மாற்றம் காணோம்!
[மனிதரது வாழ்க்கை முறை மாறும் என்றால் பழக்க வழக்கங்களும் மாறுவது இயற்கைதானே! மனிதரது பழக்க வழக்கங்கள், படைசொறி போன்ற தொற்று உடலின் மேல் பற்றிக்கொள்வதுபோல். அவற்றால்,மாற்றம் ஏற்படும்பொழுது , உடலைக் கேடு சூழ்ந்ததாக எண்ணும் மக்கள், தங்கள் பழக்க வழக்கங்களையும், சீர்கெடவிடாமல் ஏன் நல்லதொரு மாற்றத்தைம் நோக்கி மாறியமைத்துக் கொள்ளுதல் கூடாது?]
கனவுபோல் வாழ்க்கை என்றால்
==காழ்ப்புகள் அதிலேன்? வாழும்
நினைவினில் தோன்றும் வஞ்சம்
==நெருக்கடி குரோதம் எல்லாம்
கனவிலும் இழப்பைக் கூட்டிக்
==கதறிட வைக்கு தம்மா!
அனைவரும் கூடி வாழ
==ஆதிக்க உணர்வும் ஏனோ?
[வாழ்க்கை கனவைப் போல் என்றால்,அது இலகுவாகவும், எளியதாகவும்தானே இருக்க வேண்டும்; மாறாக மனவயிராக்கியமும் இறுக்கமும் அதில் ஏன்? நனவுலக வாழ்க்கையில் உள்ள பொய் முதலிய சிறுமைகளும், அதனால் ஏற்படும் கோபமும் விரோதமும், நெருக்கடிகளும்,
கனவிலும் வந்து வாழ்க்கையையே இழந்து போவதுபோல் காட்டிக்கொள்ளுவது ஏன்? அதற்காக நமது மனம் அழும்படிச் செய்வது ஏன்? எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்று நினைப்போமானால் அதற்கு ஆதிக்கம் செலுத்தும் மனப்பாங்கு தேவைதானா?]
மொழிகளும் சாதி யும்தாம்
==முன்பல இடங்க ளுக்குள்
தொழிலுடன் வாழ்ந்தோ ருக்குள்
==தோன்றிய பிரிவாய் நின்று,
வழிவழி யாக வந்து,
==வாழ்ந்தவர் ஆதிக் கத்தின்
குழிபறித் திட்ட போதே,
==குறை,நிறை காட்டல் ஆச்சோ?
[மொழி , சாதி என்பவை, மனிதர்கள் முற்காலத்தில்
பல இடங்களில், பலவகைப்பட்ட தொழில் முறையுடன் கூடிய வாழ்க்கையை மேற்கொண்ட குழுக்களாக இருந்த பொழுது ஏற்பட்ட பாகுபாடுகளே! அது அப்படியே வழிவழியாக வந்து, தாம் வாழ வேண்டுமென்ற நோக்கில் மற்றவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்த முற்பட்தவர்கள் வெட்டிய குழிகளே இக்குழுக்களுக்குள், மேல், கீழ், உயர்வு, தாழ்வு என்று காட்டிய முறைமைமைகளோ !]
பொருள்வழி வாழ்க்கைப் பாதை
==போனபின், ஏற்றத் தாழ்வு
நெறிகளை மாற்றிப் போட்டு,
==நினைவினில் அறங்கள் மாய,
அருள்,நிறை வாழ்வு மாறி,
==ஆசைகள் மண்டிப் போக,
இருள்,நிறை நெஞ்சில் வந்த
==இறுக்கமே பயமாய்ப் போச்சோ?
[பொருளீட்டுதலே வாழ்வில் மிக முக்கியமான தேவை என்ற உணர்வு தோன்ற, அதனடிப்படையில் தோற்றுவிக்கப்படும் ஏற்றத் தாழ்வுகள், வாழ்க்கைக்கென்று அதுவரைக் கடைப்பிடிக்கப்பட்ட நல்ல நெறிமுறைகளை(பழக்கங்களை) திருத்திப் போட்டுவிட, நம் நினைப்புகளில் நன்னெறி முறைகள் பற்றிய எண்ணங்கள் அழிந்துவிட, அன்பும் அதில் மேலூறிய அருள் நோக்கும் கொண்ட பார்வை மாறி, ஆசைகளே மனத்துள் நெருங்கி வளர்ந்து நமது சிந்தனைகளை மூடிவிட, மனத்துள் இருள்கவிந்து, கூடவே மன அழுத்தமும், நெருக்கமும் முடிவாக எழும் பயமும் ஆக்கிரமித்துக்கொண்டனவோ?]
அன்பிலே விசுவா சத்தை,
==அரசிலே சேவை நோக்கை,
நண்பிலே உண்மை வாக்கை,
==நடப்பிலே நேர்மை தன்னைப்
பண்பிலே இனிமை தன்னைப்
==பழகிடும் நோக்கம் தன்னை
மண்படி நீர்போல் இன்று
==மாசுற வாடல் என்ன?....
(மாசுற, வாடல், மாசு, உறவாடல்)
[அன்பிற்குள்ளே அதற்குத் தேவையான நம்பிக்கையையும், அரசியலுக்குள்ளே அதன் அடிப்படையான சேவை மனப்பாங்கினையும், நட்புக்குத் தேவையான செல்வாக்கான உண்மையினையும், நடவடிக்கை என்னும் பழக்க வழக்கங்களில் கற்புடைய ஒழுக்கத்தினையும், பழகுவதிலே இனிமையான செயல்பாடுகளையும், அவ்வாறான பழக்கத்திற்குக் கற்பிக்கப்படும் காரணங்களையும், நீரானது அது படிகின்ற நிலத்தினைப் பொறுத்து மாறுபட்டுத் திரிவதைப் போல மாசு படும்படியான உறவாடல் -கலப்பு- ஏன் ஏற்பட்டது? அப்படிப்பட்ட திரிந்த நிலை கண்டு மனம் வாடும் நிலை ஏன் ஏற்பட்டது?]
மாசுறக் கண்டு நெஞ்சம்
==மறுகிடத் தேவை தானோ?
ஆசறத் தேவை யான,
==அறிந்திடும் முயற்சி செய்வோம்!
தூசெனத் தடைகள் தம்மைத்
==தூக்கியே எறிந்து விட்டு
வீசிடும் காற்றாய்ச் செல்லும்
==விழுமமே தோற்று விப்போம்!
(ஆசு-குற்றம்)
[அழுக்கு, குற்றம், விபரீதங்கள் என்பவைகளைக் கண்டு நம் மனத்திற்குள்ளே கலக்கமுறுவது தேவைதானா? இவ்வழுக்கு முதலானவற்றை அழித்துப் போடத் தேவையானவற்றைப் பற்றி அறிந்துகொள்வதற்கான முயற்சியை மேற்கொள்வோம்!. எவ்வாறு காற்றானது தூசிகளைத் தூக்கிப் பின்னே வீசி எறிந்து விட்டுத் தொடர்ந்து தன் வழியில் முன்னேறுமோ, அது போன்று எதிர்வரும் தடைகளை எல்லாம் எதிர்த்தடித்து வீசிவிட்டு முன்னேறுகின்ற சிறப்புகளைத் தூய்மைகளைத் தோற்றுவிப்போம்!]
==++== ++===++
-175178--என்ற எண்ணின் கீழ் ஒரு கவிதை எழுதி இந்த உந்துதலை எனக்குள் ஏற்ப்படுத்திய -ரோஷன் ஏ ஜிஃப்ரி-- அவர்களுக்கு எனது பாராட்டுகளை மட்டுமல்ல நன்றியினையும் சமர்ப்பிக்கின்றேன்.
==== ======