சந்தேகநெருப்பு சுடுசொல்
சந்தேகநெருப்பு சுடுசொல்...
வெளியில் சென்று
ஐந்து நிமிடம் தாமதித்து வந்தாலும்
சந்தேகபாவம் காட்டி
வெளிப்பூச்சாய் புன்னகை பூட்டும்
உன் முகம்அகம் என் வாழ்வாதாரமென
காத்திடலாம் பொறுமை....
மனதில் சூழ்ந்த
சந்தேகப்பேயை விரட்டாமல்
சாதாரணமாக நான் பேசும்
சிறு சிறு வார்த்தைகளிலும்
குற்றமிருப்பது போல் எரிந்து விழும்
உன் செயலாக்கம் மாற்றிடத்தக்கதென
காத்திடலாம் பொறுமை...
பல வருடம் முயற்சித்தும்
வாய்க்காத குழந்தைப் பேறு கிட்ட
மருத்துவ நவீனம் செயற்கைக்கருவூட்டல்
கைகொண்டு முயல உரைத்ததும்
காசுக்காக மருத்துவர்
வேற்று நபரின் விந்தணுவை
கலந்திடுவரென சந்தேகம் கொண்டே..
மன ஆவலை கிள்ளி எறிந்தபொழுது
தவறிழைக்காத மருத்துவர்கள் உண்டென
உணரும் மனம் பெறுவாயென
காத்திடலாம் பொறுமை...
நல்ல மருத்துவமனையும்
உண்மை மருத்துவர்களும் உண்டென
நம்பிக்கையோடு செயலில் இறங்க
உறுதுணையாவாயமென மீண்டும் அழைத்தநொடியில்
'தேவடியா முண்ட' அப்டி புள்ள கேட்குதோவென
ஆத்திர நெருப்பள்ளிக் கொட்டிய பின்னும்
உன் விருப்பத்திற்கே முதலிடம் கொடுத்து
பேறாம் குழந்தை பெறும் ஆவலை அடக்கி
குடும்பஅமைப்புச் சிதறாதிருக்க நீயே கதியென
காத்திடலாம் பொறுமை..
மற்றவர்கள் மேலுள்ள சந்தேகமோ
உயிரணுவே உன்மேலுள்ள அவநம்பிக்கையோ
ஆணிவேர் 'சந்தேக நெருப்பு' ஏந்தி
ஆத்திரத்தில் சுடுசொல் தீ அள்ளிக்கொட்டலாமோ
பல்லே நாக்கை வெட்டலாமோ
மன்னித்துவிடு எனும் ஒற்றைச்சொல் உதிர்த்து
பாவமன்னிப்பு பெறத் துடிக்கும்
மனிதப் பண்பாளனென் கணவனென்றே
காத்திடலாம் பொறுமை...
பொறுத்தார் பூமி ஆள்வார்களாமே
சந்தேகஆத்திரத்தில் கொட்டிய சுடுசொல்
பிளவுறா குடும்ப சமூக அந்தஸ்தெனும்
பிசகாத மனிதப்புவியை நிலைநிறுத்தும்
ஒழுக்கப்பொறுமைப் பெண்ணின்
மனக்கண்ணை உறுத்தும் துரும்பு
உயிர்எலும்பை உருக்கும் நெருப்பு ஆம் தானே...!!
... நாகினி