இரகசியத்தைக் கூறுங்கள்

உழைத்தக் களைப்பே இல்லாமல்
உறங்கச்செல்லும் வேளையிலும்
புன்னகையோடு செக்கச் சிவந்து
பூரித்துக் கொண்டு மறைகின்ற ,
அந்திமாலைப் பொழுதே நில்
அடுத்தநாள் புலர்வேனென்று மறையும்
அசாத்திய நம்பிக்கையின் இரகசியத்தை
சற்று உணர்த்திவிட்டுச் செல் (...)
காவென்று கரைந்து காரிருளை
அகற்றிவிட்டு கதிரவனின்
உறக்கத்தை கலைத்துவிட்டு
சிறகைவிரிக்கும் காகமே !
கொஞ்சம் நில். நாளெல்லாம்
தேடியும் சிதறிக் கிடக்கும்
தானியத்தை காணாதபோதும்
மனம் பதறாமல் கூடுதிரும்பி
முதல் நாள் நம்பிக்கையோடு
சிறகை விரிக்கும் இரகசியத்தை
சற்று உணர்த்திவிட்டுச் செல் (...)
மண்ணுக்குள் மூடி மறைத்தாலும்
விண்ணவரும் வியக்கும் வண்ணம்
வளர்கின்ற சின்னஞ்சிறு விதையே
கொஞ்சம் நில்...
சிறுவிதைத் தானே நாமென்ற
எண்ணமில்லாமல் மண்ணைமுட்டிக்
கொண்டு வானைத்தொடும் இரகசியத்தை
சற்று உணர்த்திவிட்டுச் செல் (...)
ஒற்றைக்கால் தவமிருந்து
உறுமீனைக் கொத்திக்கொண்டு
உயரப்பறக்கும் கொக்கே
கொஞ்சம் நில் ...
வாய்க்காலில் ஓராயிரம் மீன்களோட
உறுமீன் வரும்வரை காத்திருக்கும்
பொறுமையின் இரகசியத்தை
சற்று உணர்த்திவிட்டுச் செல்( ...)