ஓர் ஆதிப்பாதை நீட்சி

ஒத்தையா ஒழச்ச மாடு
ஓடிக்களச்சி விழுந்து நீட்டி
நாக்கிழுத்துச் செத்துப்போக ...

உண்மையா ஒழச்ச சாமி - ஒங்
ஒறவ நீட்டிக்கிற ...
உரிச்செடுத்தேம் ஒந்தோல...!!

உருட்டிக்கட்டி நிமிந்தெழுந்தா
எங் கையிக்குள்ள கம்பீரமா
கலந்து பெருகுது பறையிசையா...!!!

ஆதிவாத்திய வரலாறித
சாதிவாதிய சாக்குச் சொல்லி
பாதிவழில வீசியெறிஞ்சி
மீதித்தூரம் போறவுகளே.....!!

குளிருகாயக் கொஞ்சம்
நெருப்பு.. பொறவு
அடிக்குச்சி அதிர்ந்தாட
சிம்புக்குச்சி சேர்ந்தாட
பெருகிப் பரவுமுங்க - இங்க
நாட்டுப்புறச் சங்கீதம்..!!

திருவிழாக்கு ஒருஅடின்னா
தீமிதிக்க வேத்துஅடி...
திருடனோட்ட மாத்துஅடி....!!

மொத்த அடி கொத்துக் கொத்தா
ரத்தமேறும் வேளையில
சாராயம் தேவையில்ல...சாமங்கியும்
வேணாம் புள்ள..!!

வெறிபுடிச்ச திசுக்களெல்லாம்
வீதியிழுக்கும் எறங்கியாட....!!

சாவுக்குப் பறையடிச்சா - இது
சாத்தானோட வாத்தியமில்ல..
சாவுக்குத்துல அதிராத் தேகம்
தேடிப்போச்சி எமலோகமின்னு
உறுதிப்படுத்தும் உசிருயெசை....!!!

"அரிப்பறை மேகலை" ன்னு
சிந்தாமணி பாடிவச்சா..
ஆறேறிப்பறையின்னு
சிலப்பதிகாரம் போட்டிபோட...
காப்பியப் பாட்டெல்லாம்
நெறஞ்சிகெடக்கு
பறைத்தமிழும் பண்பாடும்..!!!

இதெல்லாம் போதாதுன்னு
சங்குப்பறை இசைகேட்டு
சங்கரஞ் சாமி தலையாட்டும்
தேவாரப் பாட்டுக்குள்ள...!

ஏழுசுரக்கட்டுக்குள்ள
அடங்காத எம்பறைய
சாதிக்கட்டு போட்டுவிட்டு
சங்கறுக்கப் பாப்பீயளோ..??

தோல்வாத்தியச் சத்தமெல்லாம்
சாமிகளுக்கு ஆகாதுன்னா
மிருதங்கம் எந்தமரம்...?
தபேலாவுல எந்தத் தழ....?

சங்கறுக்கும் கூட்டத்துக்கு
சேதியொண்ணு சொல்லிக்கிரெம்..
கடலு காத்து நீரு கூட
கலந்து பொறந்த ஆதிப்பறை
அடங்கியடிச்சா இசை..
அதிர்ந்து வெடிச்சா இடி....!!!

எழுதியவர் : சரவணா (1-Feb-14, 4:57 pm)
பார்வை : 153

மேலே