புதுப்பேனா

நினைக்க நினைக்க ஆற்றாமையாயிருந்தது சிவராமனுக்கு. சாயங்காலம் பள்ளி விட்டு காப்பகத்துக்கு நடந்து வரும் வழியிலெல்லாம் அதே நினைவுதான். கேட்டால் பாஸ்டர் வாங்கித் தருவாரா? இல்லை அடுத்த மாதம் பார்ப்போமென்று சொல்லிவிட்டால்...?

நினைக்கும்போதே பகீரென்றது மனசு. தான் ஆசைப்பட்ட எதுதான் கிடைத்தது. இதுவும் கிடைக்க என தனக்குத்தானே ஆறுதலும் சொல்லிக் கொண்டான்.

வகுப்பில் தன்னுடன் படிக்கும் ராஜலிங்கம் மட்டும் என்னவெல்லாமோ கொண்டு வந்து பெருமை பீற்றிக் கொள்கிறான். பொம்மைகள், புத்தகங்கள், தின்பண்டங்கள் என்று விதவிதமாய் கொண்டு வருவான். போன வாரம் பளபளவென மின்னிய பெரியபெரிய பூப்போட்ட சிங்கப்பூர் சட்டை அணிந்துகொண்டு வந்து அவன் செய்த "அலப்பறை" கொஞ்சம்நஞ்சமல்ல.

"எங்க மாமா சிங்கப்பூர்ல இருந்து அனுப்பினது, என் பிறந்த நாளுக்காக" என யாரும் கேட்காமலே சொன்னான். அன்றைக்கு அவன்தான் வகுப்பில் ஹீரோ. சட்டையைத் தொட்டுப் பார்க்கக்கூட சிவராமனை அனுமதிக்கவில்லை. எல்லா பையன்களும் அவனைச் சூழ்ந்துகொள்ள ராஜலிங்கத்துக்கு மேலும் தலைகால் புரியவில்லை. "அந்தப் படத்துல சூப்பர் ஸ்டாரு இதே மாதிரிதான் சட்டைப்போட்டிருப்பாரு இல்லடா" என யாரோ சொல்லவும் ராஜலிங்கமும் இதுதான் சாக்கென்று தலையைச் சிலுப்பி ஸ்டைல் காட்டினான்.

"சட்டை நல்லாயிருக்காடா?" என்று எல்லோரிடமும் கேட்டவன் இவனிடம் கேட்கவில்லை. இவனே வலியச் சென்று சட்டையைத் தொட்டுப் பார்த்து "நல்லாயிருக்குடா" என்றபோதும் "உங்கிட்ட யாரு கேட்டது?" என வெடுக்கென கையைத் தட்டிவிட்டான் ராஜலிங்கம்.

அதே வேகத்தில் "வாங்கடா" என உடனிருந்தவர்களையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்.

கண்ணீர் பொங்கி வழிய ஆரம்பித்தது சிவராமனுக்கு. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்நேரம் அய்யா மட்டும் இருந்திருந்தால்... இந்தப் பயலிடம் இப்படிக் கெஞ்ச வேண்டியிருந்திருக்காதே.

கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுப்பாரே அய்யா, என் ராஜாவுக்கு என்ன வேணும் எனக் கேட்டு, தோளில் தூக்கி தட்டாமாலை சுற்றுவார். கன்னங்களில் முத்தமழை பொழிவார். அய்யா! ஏன் செத்துப்போனார், திடீரென்று? தேம்பித்தேம்பி அழத் தொடங்கினான் சிவராமன்.

நல்ல வேலைக்காரன் எனப் பெயரெடுத்தவன் சிவராமனின் அய்யா முத்துப்பாண்டி. கொத்தனாரு வேலை இவனைப்போல பார்க்க முடியுமா என அந்த ஊரில் பேசிக் கொள்வார்கள். கேரளத்தில் கொத்தனார் வேலைக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறதென்று போனவர் அங்கேயே தங்கி வேலைபார்க்க ஆரம்பித்தார். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு இவனையும், இவன் அம்மாவையும் பார்க்க வருவார். வரும்போதெல்லாம் பை நிறைய பண்டமும், விளையாட்டு சாமான்களும், முகம் நிறைய சிரிப்பும்தான்.

சிவராமன் "ஒத்தைக்கோர் பிள்ள" என்பதால் அவன் மீது அய்யாவின் பாசம் சொல்லி முடியாது. அய்யா ஊரிலிருந்து வந்துவிட்டால் சிவராமனுக்கு சிறகு முளைத்துவிடும். கையைப் பிடித்துக் கொண்டு ஊரைச் சுற்றுவான். கேரளத்தில் பார்த்ததையும், கேட்டதையும் அய்யா கதைகதையாய்ச் சொல்லுவார். வீட்டு முற்றத்தில் தென்னந்தட்டியில் படுத்துக் கொண்டே அய்யாவுடன் சேர்ந்து எத்தனையோ முறை நட்சத்திரங்களை எண்ணியிருக்கிறான் அவன். ஒரு தடவைகூட அவனால் முழுமையாக எண்ண முடிந்ததில்லை.

"என் ராசாக்குட்டி இப்போ ஒன்னாப்பு படிக்கிதாம். அது வளந்து அய்யா படிக்காத படிப்பையெல்லாம் சேர்த்து பெரிய படிப்பு படிச்சி அதுக்குப் பிறகு இதையெல்லாம் கரெக்டா எண்ணிச் சொல்லுமாம்" அவன் மேல் கையைப் போட்டு அணைத்துப் படுத்துக் கொள்வார் அய்யா.

அய்யாவின் மீசையைத் திருகிக் கொண்டே இவனும் சரி என்பான். அய்யா தங்கியிருக்கும் ஒரு வாரமும் சிவராமனுக்கு இப்படித்தான் பொழுது கழியும். அய்யாவும் கேரளத்துக்குத் திரும்ப மனதே இல்லாமல் புறப்படுவார்.

இப்படியே ஓராண்டு ஓடிப்போனது. அப்போது அவன் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். வழக்கம்போல கேரளத்திலிருந்து அய்யா வந்தார். ஆனால் இந்த முறை அய்யா வந்ததிலிருந்து ஏனோ அதிகமாக பேசவில்லை.

அவருக்கும் அம்மாவுக்கும் இரண்டு மூன்று நாளாய் சண்டைதான் நடந்தது. "ஊர்ல நான் இல்லாதப்ப அவன் எதுக்கு இங்க வாரான்?"

"அவன் எனக்கு அண்ணன் முறைதான்"

"என்ன அண்ணன் முறை? அதுதான் ஊரெல்லாம் சொல்லி சிரிப்பா சிரிச்சி மானம் போகுதே."

"நரம்பில்லா நாக்கு நாலும் சொல்லும், உங்ககிட்டே யாரோ இல்லாததும், பொல்லாததும் சொல்லியிருக்காங்க"

"நெருப்பில்லாம புகையுமா? போனது போகட்டும், இனிமேயாவது ஒழுங்கா இரு, கண்டிப்பா நாளைக்கு ஒரு முடிவு தெரியணும்" சொல்லிக் கொண்டே இறுகிய முகத்துடன் முற்றத்தில் வந்து படுத்துக்கொண்டார் அய்யா.

இவனும் அவர் அருகே சென்று படுத்தான். "அய்யா ஒரு கதை சொல்லுங்க" என்றான். "என்னத்த சொல்ல, என் கதையே பெரிய கதையா இருக்கு" அய்யா மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.

விடிகாலையில் குபீரென எழுந்த அழுகை சப்தம் கேட்டு பதறி எழுந்தவன் வீட்டைச் சுற்றி கூட்டமாய் இருந்ததைக் கண்டு புரியாமல் விழித்தான். "முத்துப்பாண்டி அவன் பொண்டாட்டியைக் கொன்னுட்டு, நாண்டுக்கிட்டுச் செத்துட்டான்" யாரோ பேசியது காதில் விழுந்தது. வீட்டுக்குள் அங்கங்கே ரத்தம் சிந்திக் கிடந்தது. யார் யாரோ வந்து என்னென்னவோ கேட்டார்கள். அய்யோ பாவம் என இவனைப் பார்த்து பரிதாபப்பட்டார்கள்.

மணி ஒலித்தது. சாப்பாட்டு நேரம் முடிந்து மதிய வகுப்புகள் தொடங்கின. அழுத தடம் தெரியாமல் கண்களை நன்றாகத் துடைத்துக் கொண்டே வந்து அமர்ந்தான். பாடம் மனதில் பதியவேயில்லை. மனது முழுக்க பக்கத்தில் அமர்ந்திருந்த ராஜலிங்கம் மீதே பதிந்திருந்தது. கேட்க ஆளில்லை என்பதால்தானே அவன் தன்னை அடித்துவிட்டான் என தன் மீதே பரிதாபப்பட்டான் சிவராமன்.

அய்யாவும், அம்மாவும் இறந்துபோனதற்குப் பிறகு, இருவர் வழியிலேயும் சொந்தபந்தம் யாரும் இல்லாததால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிவராமனை டவுனில் உள்ள ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்துவிட்டனர். நான்கு வருடங்கள் ஓடிப்போனது.

ஊரைவிட்டு சற்று தள்ளியிருந்த அந்தக் காப்பகத்தில் இவனைப்போல எண்பது பிள்ளைகள். காப்பகத்தின் வாசலில் நேற்று யாரோ விட்டுச் சென்ற மேரிகுட்டியிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் சம்சுதீன் அண்ணன் வரைக்கும் அனைவரையும் பாஸ்டர் சார்தான் பிரியத்துடன் முகம் கோணாமல் வளர்க்கிறார். அவர் ஒன்றும் பெரிய பணக்காரர் இல்லை. சின்ன வயசுதான்.

காப்பாற்ற ஆளில்லாத குழந்தைகளை எடுத்து வளர்ப்பதையே வாழ்க்கையாக ஆக்கிக் கொண்டாராம். காப்பகம் நடத்தும் இடம்கூட யாரோ ஒரு பெரிய மனிதர் கொடுத்ததுதான். அதிலிருந்த இரண்டு, மூன்று அறைகளில்தான் அவர்கள் அத்தனை பேரும் தங்கியிருந்தனர். உணவு, உடைகள் என அனைத்துமே பிறரது உதவியினால்தான்.

மதியம் இடைவேளைக்கு மணி அடித்தது. ராஜலிங்கம், ரமேஷுடன் பேசிக்கொண்டிருந்தான். "புதன்கிழமை வரும்போது நான் ஒரு சூப்பர் ஹீரோ பேனா கொண்டு வருவேன்டா. நம்ம கிளாஸ்லேயே மொதமொத ஹீரோ பேனா கொண்டு வர்றது நானாத்தான் இருக்கும்"என பெருமையடித்துக் கொண்டது சிவராமனின் காதில் விழுந்தது.

தன்னால் சிங்கப்பூர் சட்டையோ, வண்ணப்படங்கள் நிறைந்த புத்தகமோதான் கொண்டுவர முடியாது. குறைந்தது இந்த ஹீரோ பேனாவாவது சாரிடம் கேட்டு வாங்கி வரலாமே என்று மனதுக்குள் ஓர் எண்ணம் துளிர்விட்டது. மெல்லமெல்ல அதைப் பற்றியே நினைக்க ஆரம்பித்தான் சிவராமன்.

"இன்றைக்கு வெள்ளிக்கிழமை. சனி, ஞாயிறு விடுமுறை. திங்கள்கிழமை வரும்போது எப்படியும் ஹீரோ பேனா கொண்டு வரணும். பார்த்தியாடா உனக்கு முன்னாலேயே நான் கொண்டு வந்திட்டேன்டான்னு ராஜலிங்கத்துக்கிட்ட காட்டணும். அவன் கேட்டா, பரவாயில்ல இந்தா எழுதிப் பார்த்துட்டு தாடான்னு பெருமையோட குடுக்கணும்" மனசுக்குள் முடிவு செய்தான் சிவராமன்.

தங்கக் கலரில் மூடியும், கறுப்புக் கலரில் பேனாவும்... ஹீரோ பேனா அவன் கண்முன் விஸ்வரூபம் எடுத்தது. இந்த வகுப்பிலேயே ஹீரோ பேனா வைத்து எழுதப்போகும் முதல் ஆள் சிவராமனாக இருக்கப்போகிறான். அவன் வகுப்பு ஆசிரியர் ஹீரோ பேனா வைத்துத்தான் மதிப்பெண்கள், கையெழுத்துப் போடுவது எல்லாம். அவர் அதனை பாக்கெட்டிலிருந்து எடுத்து லேசாகத் துடைத்து மெதுவாக மூடியைக் கழற்றி பேனாவைப் பிடிப்பதைப் பார்க்கும்போதே சிவராமனுக்கு மிகவும் சுகமாயிருக்கும். அதைத் திறந்த வாய் மூடாமல் பார்ப்பான்.

பள்ளிக்கூடம் விட்டு காப்பகத்துக்கு வந்து விளையாடும்போதும் படிக்கும்போதும் அதே ஞாபகமாகவே இருந்தது. மனது முழுவதும் ஹீரோ பேனாவிலேயே நிலைத்திருந்தது. "இப்ப என்ன சிவா, ஹீரோ பேனா? நீ பெரிய கிளாஸ் படிக்கும்போது கேக்காமலேயே சார் வாங்கித் தர்றேன்" என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது?

இரவு மணி எட்டானது. எல்லோரும் கை, கால், முகம் கழுவிக்கொண்டு சாப்பிடப் போனார்கள். திங்கள்கிழமை பேனா கிடைக்குமோ, கிடைக்காதோ என்று நினைத்து நினைத்தே காய்ச்சல் அடிக்கிற மாதிரி ஆகிப்போனது உடம்பு. கண்ணெல்லாம் ஜிவ்வென்றிருந்தது. பசியே எடுக்கவில்லை. எல்லோரும் வரிசையாக ஆளுக்கொரு தட்டும், தம்ளரும் எடுத்துக் கொண்டு அமர்ந்தார்கள். இவனும் உட்கார்ந்தான்.

சமையல்காரர் சாப்பாடு போடத் தொடங்கினார். பாஸ்டர் தன் சிறிய அறைக்குள் சென்றுவிட்டார். வழக்கமாக இப்படித்தான். நாளைக்குத் தேவையான பொருள்கள் இருக்கிறதா என்று இப்போது சரிபார்ப்பார்.

எல்லோரும் சாப்பிடத் தொடங்க, இவன் மட்டும் சோற்றை சும்மா அளைந்துகொண்டேயிருந்தான்.

"என்ன சிவா, சாப்பிடலியா?" கேட்ட சமையல்காரருக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாதவனாக விழித்தான். ஒன்றிரண்டு முறை கேட்டு, எரிச்சலடைந்த அவர், சார் என கூப்பிட்டுக் கொண்டே பாஸ்டர் அறைக்குள் நுழைந்தார்.

வழக்கமான தனது புன்னகை மாறாத முகத்துடன் வந்தார் பாஸ்டர். "என்ன சிவா சாப்பிடலியா, கண்ணெல்லாம் சிவந்திருக்கு, உடம்பு சரியில்லையா" எனக் கேட்டபடி அவனைத் தொட்டுப் பார்த்தார். "உடம்பு லேசா சுடுற மாதிரி இருக்கு. என்ன செய்யுது, வாந்தி வர்ற மாதிரி இருக்கா?" என்று கேட்க, இவன் உம்மென்று நின்றிருந்தான்.

"சொல்லு சிவா, உன்னை இன்னைக்கு யாரும் எதுவும் சொன்னாங்களா, என்ன விஷயம் சார்கிட்டே சொல்லு?" என்று திரும்பத் திரும்பக் கேட்டும் அவன் ஒன்றும் சொல்லாமல் திருதிருவென விழித்தபடியிருந்தான்.

சற்றே கோபப்பட்டவராக, பாஸ்டர் "இவ்வளவு தூரம் கேக்குறேன். நீ என்ன பச்சப் பிள்ளையா, விவரமான பையன்தானே, சொல்லு என்ன விஷயம்?" என்று அதட்டினார். கோபப்படாத பாஸ்டர் கோபப்பட்டு விட்டாரே என்பதையும், செத்துப்போன அய்யாவையும், நெஞ்சுக்குள்ளேயே நிற்கும் ஹீரோ பேனாவையும் நினைத்துக் கொண்டு "ஓ"வென பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தான் சிவராமன்.

எழுதியவர் : கணேஷ் கா (2-Feb-14, 12:59 am)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 317

மேலே