வண்ணங்கள் என்றால்

அடையாறு செயின்ட் லூயிஸ் பள்ளி வளாகத்தில் நுழையும் பொழுதே என்னையறியாமல் எனக்குள் உற்சாகம் தொற்றிக் கொள்ளும்!

விடுதியில் தங்கிப் படிக்கும் பார்வைத் திறனில்லாத மாணவர்களுக்கு வாசிப்பாளராகச் சென்று கொண்டிருக்கிறேன். அங்கு மாலை ஐந்து மணிக்கு உள்ளே நுழையும் பொழுதே, என் காலடி ஓசையைக் கேட்டு "குட் ஈவினிங் ஆன்ட்டி.." என்ற குரல் எங்கிருந்தோ கேட்கும்.

"ஓ... இவன் தீபன்!" - அவனுக்குப் பதில் வணக்கம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே "நல்லா இருக்கீங்களா... ஆன்ட்டீ..." சங்கிலி வாய் நிறையக் கேட்பான்.

மாலைக் குளியலை முடித்துக்கொண்டு இரண்டு மூன்று பேராக ஒருத்தர் தோளை ஒருத்தர் பிடித்துக் கொண்டு வரிசை வரிசையாக வகுப்பறைக்கு வந்து அவசர அவசரமாக முகத்திற்குப் பவுடர் பூசி தலைவாரித் தங்களை அலங்கரித்துக் கொள்ளும் அழகை ரசித்துக் கொண்டிருப்பேன்.

திட்டுத் திட்டாகப் பவுடரை அப்பிக்கொண்டு வரும் மாணவனிடம் "என்ன, தங்கராஜ், ரொம்ப கமகமன்னு இருக்கியே! டப்பாவுல பவுடர் நெறைய இருக்கா?" நான் அவனைக் கேட்கும் பொழுதே ஏதோ நிறைய பவுடரை அப்பிக் கொண்டதாக எண்ணி முகத்தை வேகவேகமாகத் துடைத்துக் கொள்வான்.

"இரு, இரு, முகத்தைத் துடைக்காதே. சரியா அளவாகத்தான் பூசியிருக்கே, வாசனை அதிகம் இருக்கேன்னுதான் கேட்டேன்..." நான் சொல்லும் போது, தான் ஒழுங்காகத்தான் பவுடர் பூசியிருப்பதாக அவனுக்குள் எழும் பெருமிதம் அவன் முகத்தில் கம்பீரமாகத் தெரியும்.

"படிக்க யார் வருகிறீர்கள்?" என்று நான் கேட்டதும் "நான் வருகிறேன்.." என்று ஒரே சமயம் மூன்று குரல்கள் கேட்கும். அடுத்த நொடி, "ஆன்ட்டி, நீங்கள் சரணுக்கே சொல்லிக் கொடுங்கள் அவனை, நாளைக்கு இரண்டாவது கட்டுரையை ஒப்புவிக்கும்படி மாஸ்டர் சொல்லியிருக்கிறார். நாங்கள் பிறகு படித்துக் கொள்கிறோம்..."

"தங்களுக்குள் எத்தனை புரிதலோடு நடந்து கொள்கிறார்கள்!" நான் வியந்து போனேன்.

அந்த மாணவர்களின் செயல்பாடுகள், அணுகுமுறை, அவர்களின் தன்னம்பிக்கை, எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களிடையே காணக்கூடிய அன்யோன்யம், ஒருத்தருக்கொருத்தர் உதவிக் கொள்ளும் நேர்த்தி இவற்றையெல்லாம் அருகிலிருந்து பார்க்கும் பொழுது அவர்களைப் பற்றிய வியப்பு என்னுள் மேலோங்கி எழும்.

ஒருநாள் மாணவர்களுக்குப் பொருளியல் பாடத்தைப் படித்துக் காட்டிக் கொண்டிருக்கும் பொழுது, சராசரி செலவு வளைகோட்டின் வரைபடங்களை ஒவ்வொருவர் உள்ளங் கையிலும் வரைந்து அவர்களை உணர வைத்தேன். தொடு உணர்வால் அவர்கள் மனதில் அதைப் பதிய வைத்துக் கொண்டிருக்கும் பொழுது, திடீரெனச் சரண் கேட்டான், "ஆன்ட்டி, வண்ணங்கள் பலவிதம் என்கிறார்களே! கருப்பு, சிவப்பு, பச்சை, மஞ்சள் என்பதெல்லாம் எப்படி இருக்கும்?"

"ஆமாம் ஆன்ட்டி நாங்களும் அதத் தெரிஞ்சுக்கணும்" - தீபன், தங்கராஜ் இருவரும் சரணோடு சேர்ந்து கொண்டார்கள்.

இயல்பாக அவர்கள் கேட்டுவிட்டார்கள். கடவுளே! பிறந்ததிலிருந்தே முழுவதுமாகப் பார்வை இல்லாத இவர்களுக்குத் தங்கள் குறையை குறையாக உணராமல் இதை எப்படி புரிய வைப்பேன் எதைக்கொண்டு விளக்குவேன் ஒரு நொடி நான் வெலவெலத்துப் போனேன்.

"நீங்கள் குளிர்ந்த நீரை முகத்தில் கொட்டும் பொழுதும், மழைக்காலத்தில் இரவு நேரம் மைதானத்தில் நிற்கும் பொழுதும் உங்கள் கண்களில் சில்லென்ற காற்று வீசும் பொழுதும் எப்படி உணர்வீர்கள்? அம்மாதிரியான சில்லென்ற குளிர்ந்த உணர்வை ஏற்படுத்துவதைத்தான் பசுமை, மஞ்சள் என்று வர்ணிக்கிறார்கள்."

நல்ல வெயிலிலோ, எரிகின்ற தணலுக்கு அருகிலோ நீங்கள் அமர்ந்திருக்கும்பொழுது உங்களுக்கு ஏற்படும் வெம்மை உணர்வுதான் சிவப்பாகச் சித்தரிக்கப்படுகிறது.

வெம்மையும் குளிர்ச்சியும், இருட்டையும் வெளிச்சத்தையும் மனதில் நினைத்து நினைத்து உங்கள் உணர்வுப்பூர்வமாக நீங்கள் உணரலாம்..."

சொல்லத் தெரியாதப் பதிலை ஒருவழியாகச் சொல்லி நானும் குழம்பி அவர்களையும் குழப்பிவிட்டதுதான் மிச்சம். என்னால் அவர்களுக்குத் தெளிவாக விளக்கமுடியவில்லை என்பதை அவர்களும் புரிந்து கொண்டு அத்துடன் விஷயத்தை முடித்து கொண்டார்கள்.

அடுத்து தீபனுக்கு ஒரு சந்தேகம் முளைத்தது, "அப்ப எங்களப் பார்த்து நீ வெள்ளையா இருக்கே, அவன் கருப்பா இருக்கான்னு சொல்றாங்களே! மனிதர்களுக்குள்ளார நிறம் வேறுபடுமா ஆன்ட்டீ?"

"புறத்தோலின் நிறவேறுபாடு பெரிய விஷயமில்லை, நீங்கள் பள்ளிப் படிப்பு முடித்து வெளியுலகத்தில் சராசரி மனிதர்களோடு பழகும் போதுதான் மனித மனத்தின் நிறவேறுபாட்டை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.." விரக்தியாக நான் கூறிய வார்த்தைகள் அவர்களுக்குப் புரிந்திருக்காது.

வண்ணங்களை விளக்குவது குறித்த சிந்தனையோடு பேருந்தில் அமர்ந்திருந்தேன். சைதாப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இருபது வயது பெண் பேருந்தின் வாயிற்படியில் நின்று கொண்டு வேகமாகக் குரல் கொடுத்தாள்.

"டிரைவர் கொஞ்சம் நில்லுங்க, வண்டிய எடுத்திடாதீங்க.." என்று படபடத்தவள், "தாத்தா வாங்க..." என்று வேகமாகத் திரும்பி அழைத்தாள்.

அங்கு எண்பது வயதிற்கு மேலான கிழவர் எழுந்திருக்கவே முடியாமல் உட்கார்ந்த நிலையிலேயே வேகவேகமாகப் புட்டத்தால் தரையைத் தேய்த்துக் கொண்டு நகர்ந்து... இல்லையில்லை.. ஊர்ந்து ஊர்ந்து வருகிறார். படிக்கு அருகில் வந்தப் பெரியவரை அந்தப் பெண் தூக்கி ஏற்ற முயற்சிக்கிறாள். முடியவில்லை.

யாராவது கொஞ்சம் கைகொடுங்களேன் என்று கூறிக்கொண்டே மீண்டும் அவளே தூக்க யத்தனிக்கிறாள். கீழே நின்றிருந்தவர்கள் அவளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மீண்டும் அவள் தன்னால் தூக்க முடியாமல் பெரியவரை பலம் கொண்ட மட்டும் படிநோக்கி இழுக்க, பேருந்திலிருந்த இரு இளைஞர்கள் கீழிறங்கி அப்பெரியவரை அலாக்காகத் தூக்கி பேருந்தினுள்ளே போடுகிறார்கள்.

பெரியவரை ஏற்றி விட்டபின் அந்தப் பெண் கீழே இருந்த அந்தப் பெரியவரின் பையைத் தன் கைகளால் துளாவி எடுத்துக் கொண்டு கைப்பிடியைப் பிடித்து ஏறும்பொழுதுதான் தெரிகிறது அவருக்குப் பார்வை இல்லை என்பது.

நடத்துனர் அவள் அருகில் வர, "எனக்கு வானவில் ஒன்று கொடுங்க" என்கிறாள். "அப்ப அந்தப் பெரியவருக்கு..." நடத்துனர் இழுத்தார்.

"எனக்குத் தெரியாதுங்க, கீழே நின்னுக்கிட்டிருந்தப்ப அந்தப் பெரியவர் யாராவது அயனாவரம் போற பஸ்ல என்ன ஏத்திவுடுங்களேன்னு கேட்டுக்கிட்டே இருந்தார். அரைமணி நேரமா யாராவது அவருக்கு உதவி செய்ய வருவாங்களான்னு பக்கத்திலேயே காத்துக்கிட்டு இருந்தேன். யாருமே வராததாலே நானாவது உதவலாமேன்னு அயனாவரம் போற பஸ்சுல அவரோட ஏறினேன்..."

அந்தப் பெண்ணின் பேச்சைக் கேட்ட எனக்கு என் இதயத்தை யாரோ இழுத்து வெளியில் எறிவது போல உணர்ந்து உடல் ஆடிப்போனேன்.

"நீ பாட்டுக்கு ஏத்திவுட்டுட்டே. அவர யாரு எறக்குவாங்க? அவரு இறங்குற இடத்திலே அவர இறக்கி விட்டுட்டு அப்புறம் நீ எங்கே போகணுமோ போய்க்கோ..."

- நடத்துனரின் இரக்கமற்ற பேச்சு, அதுவும் அந்தப் பார்வையற்ற பெண்ணிடம்.... ச்சே, என்ன ஜன்மம் இவன். என் மனம் கனன்றது.

"அந்தப் பெரியவர் கடைசி நிறுத்தத்திலேதானே இறங்கப் போறார். உதவிக்கு யாராவது ரெண்டு பேர் இல்லாமலா போய்விடுவார்கள்?" என்னிடமிருந்து வந்த சூடான வார்த்தையினால் நடத்துனர் மேலே பேசாமல் மௌனமாக அங்கிருந்து நகர்ந்தார்.

அனைவரின் பார்வையும் தன்மீது விழுவதை உணராமல் அந்தப் பெண் எனக்கு முன் சீட்டில் அமர்ந்தாள்.

ஐம்புலன்களையும் தீர்க்கமறப் பெற்றவர்களின் உள்ளம் முழுவதும் கருமையே கவ்விக் கொண்டிருக்கும் பொழுது வண்ணங்ளை அறியாத உங்களின் உள்ளங்கள் எல்லாம் ஒளி வண்ணமாக அல்லவா மிளிர்கிறது!

ஒரு புலன் இல்லையென்றாலும் உங்களுக்கெல்லாம் மாற்றுப் புலன்திறன் அதிகமாக இருக்கும் என்பதாலேயே உங்களை மாற்றுத் திறனாளிகள் என்றார்கள். அந்த மாற்றுத் திறன் மனித நேயமாக, அன்பெனும் ஊற்றாகவே உருக்கொண்ட உருவமாகவல்லவா இருக்கிறீர்கள்!" - அந்தப் பெண்ணைப் பார்த்து பார்த்து மானசீகமாக என் தலை வணங்கிக் கொண்டிருந்தது.

எழுதியவர் : கணேஷ் கா (2-Feb-14, 1:03 am)
சேர்த்தது : கா. கணேஷ்
Tanglish : vannangal endraal
பார்வை : 245

மேலே