ஏழையின் கனவு

சிவாவின் அண்ணன் அவனுக்கு ஒரு புத்தம் புதிய காரை பிறந்தநாள் பரிசாக அளித்திருந்தார். அன்று, சிவா அவனது அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது ஒரு சிறுவன் அவனது காரைச் சுற்றிச் சுற்றி வந்து ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ஏழ்மை யான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பது அவனது தோற்றத்திலேயே தெரிந்தது.
சிவாவை பார்த்ததும், “இது உங்கள் காரா அங்கிள்?” என்று கேட்டான் அந்தச் சிறுவன்.
“ஆமாம் ,என் அண்ணன் எனக்கு பிறந்தநாள் பரிசாக வாங்கித் தந்தது" என்று பெருமிதமாகக் கூறினான். சிறுவனின் கண்கள் விரிந்தன.
“உண்மையாகவா சொல்கிறீர்கள்? உங்களுக்கு பைசா கூடச் செலவில்லாமல் இந்த அழகான காரை உங்கள் அண்ணனே வாங்கித் தந்தாரா? இவரைப் போல ஒரு அண்ணன்...” என்று ஏதோ சொல்ல வாயெடுத்த சிறுவன் சற்றுத் தயங்கினான்.
‘இவரைப்போல ஒரு அண்ணன் எனக்கும் இருந்தால் நன்றாக இருக்குமேஎன்று அந்தச் சிறுவன் சொல்ல நினைக்கிறான் என்று யூகித்தான் சிவா. ஆனால், அந்தச் சிறுவன் தொடர்ந்துச் சொன்ன வார்த்தைகள் அவனை அப்படியே உலுக்கி விட்டது.
“இவரைப் போல ஒரு அண்ணனாக நான் இருந்தால் எப்படி இருக்கும்?” என்று அந்தச் சிறுவன் சொன்னதைக் கேட்டு வாயடைத்துப் போனான்.
“இந்தக் காரில் ஒரு ரவுண்டு போகலாம், வருகிறாயா?” என்றதும் சந்தோஷமாக ஏறிக் கொண்டான் அச் சிறுவன். சிறிது தூரம் போய்கொண்டிருந்தபோது
“அங்கிள், இந்தக் காரில் என் வீட்டிற்கு என்னை அழைத்துச் செல்ல முடியுமா?” என்று சற்றுத் தயக்கத்துடன் கேட்டான் அவன் .
"சின்னப் பையன் தானே. ஒரு புதிய காரில் தான் சவாரி செய்ததை தனது தெருத் தோழர்களிடம் பெருமை யாக காட்ட நினைக்கிறான் போலிருக்கிறது”,என்று நினைத்தவனாக “ஓ.. போகலாமே!” என்றான் சிவா....மீண்டும் அவனது எண்ணம் தவறாகிப் போனது.
“அதோ, அந்த வீட்டு வாசல் அருகில் காரை நிறுத்துங்கள் அங்கிள்” என்று சொன்ன அந்தச் சிறுவன்காரை விட்டிறங்கி அந்த வீட்டிற்குள் ஓடிப்போனான். முது கில் இன்னொரு சிறுவனை அவன் சுமந்து வந்தான். நடக்க இயலாத அந்தச் சிறுவனை வீட்டு வாசல் படியில் உட்கார வைத்த அவன்,
“தம்பி! இதோ பார்த்தாயா, நான் சொன்ன கார் இதுதான்! இந்த அங்கிளின் அண்ணன் அவருக்கு பரிசாக வாங்கித் தந்தாராம். நான் வளர்ந்து பெரியவனானவுடன் இதே போல ஒரு காரை உனக்கு வாங்கித் தருவேன். கடைத்தெருவில் நான் பார்த்ததாகச் சொல்வேனே, அந்த அழகான பொருள்களையெல்லாம் நீ அந்தக் காரில் போய் நேரிலேயே பார்க்கலாம்” என்று ஆவலாகச் சொன்னான்.
காரை விட்டிறங்கிய சிவா அந்தச் சிறுவனைத் தூக்கி காரின் முன் இருக்கையில் உட்கார வைத்தான். அவனது அண்ணனும் பின்னிருக்கையில் ஏறிக்கொள்ள, கண்கள் கலங்கியிருந்த அம்மூவரும் சந்தோஷமாக நகர்வலம் சென்றார்கள்.
*******************************************************************
இவர்கள் செல்வத்தில் ஏழைகளாக இருக்கலாம்,
ஆனால் பாசத்தில் செல்வந்தர்கள்!!