குற்றம் சொல்லாதே

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பைனான்ஸ் மானேஜர் ஒருவர் நடந்து போய்க் கொண்டிருந்தபோது திறந்திருந்த டிரெயினேஜ் பள்ளத்துக்குள் விழுந்துவிட்டார். குடலைப் புரட்டி எடுக்கும் சாக்கடை நீரில் கழுத்துவரை மூழ்கிய நிலையில் அவர் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பக்கமாக அவரது அலுவலகத்தில் பணிபுரியும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் வந்தார்.

‘பைனான்ஸ் மானேஜர்னா கணக்கைத் தவிர வேற எந்த விஷயமும் தெரியாதுனு சொல்வாங்க. அதுக்காகக் கண்ணுகூடவா தெரியாது? ‘என்று மானேஜர் மீதிருந்த தனது காழ்ப்பு உணர்ச்சியைக் கொட்டிவிட்டு, நடையைக் கட்டினார் அவர்.


அடுத்ததாக மானேஜரின் பக்கத்து வீட்டுக்காரர் வந்தார். என்ன சார்… இந்தப்பள்ளத்துக்கு முன்னால கொட்டையா சிவப்பு எழுத்தில் ‘ஜாக்கிரதைனு’பலகை வெச்சிருக்கே! அதைப் பார்க்கலையா? ஹும்… நீங்கள்லாம் மானேஜர் உத்தியோகம் பார்த்து என்னத்தைப் பெரிசா கிழிக்கப் போறீங்களோ? என்று சலித்துக்கொண்டே ஒரு கையால் தன் மூக்கை மூடிக்கொண்டு, இன்னொரு கையை சாக்கடைப்பள்ளத்தில் கிடக்கும் மானேஜரை நோக்கி நீட்டினார்.ஆனால், மானேஜரைத் தொட முடியாத அளவுக்கு அந்தப் பள்ளம் மிகவும் ஆழமாக இருந்தது. வேறு வழியின்றி அவரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார்.

அடுத்ததாக, அந்தப் பக்கம் மானேஜரின் நெடுநாளைய நண்பர் வந்தார். கழிவுநீர்ப்பள்ளத்தில் மானேஜர் விழுந்து கிடப்பதைப் பார்த்து பதைபதைத்த அவர், தனது சட்டையைக்கூடக் கழற்றாமல் அந்தச் சாக்கடைக்குள் குதித்தார். இந்தா, என் தோள்மீது ஏறி, முதலில் நீ வெளியே போ! என்று மானேஜரை அந்தச்சாக்கடையிலிருந்து வெளியேற்றினார்.

இந்தக் கதையில் வரும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் மாதிரியோ அல்லது பக்கத்து வீட்டுக்காரர் மாதிரியோ, அடுத்தவர்களிடம் குறை காணும் நபர்களாகத்தான் நம்மில் பலர் இருக்கிறோம் என்பது கசப்பான உண்மை.

**********************************************************************
எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் குணம் நம்மில் பலருக்கு இருக்கிறது. அடுத்தவர் செய்யும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் அப்படியொரு அலாதியான சந்தோஷம். இப்படிக் குற்றம் கண்டுபிடிப்பதையே வழக்கமாக வைத்துக்கொண்டிருந்தால் நாளடைவில் அது போதை மாதிரி ஆகி, நமது அறிவுப்பார்வையை குறுகலாக்கிவிடும்.
**********************************************************************

எழுதியவர் : சௌம்யா தினேஷ் (2-Feb-14, 3:43 pm)
Tanglish : kutram sollathe
பார்வை : 255

மேலே