பாதியில் இறங்கிவிட்டாள்

கடைக்கு சென்று மாவு வாங்கி வந்தேன்
இரண்டு வாரம் சேர்ந்தாற்போல் அரைத்தால்தான் என்ன

சட்னி அரைக்க தக்காளியும் பச்சை மிளகாயும் ஃபிரிட்ஜில் கிடைத்தது
வெங்காயத்தை எங்கே வைத்தாளோ

மஞ்சள் படிந்த ரூபாய் தாள்கள் அஞ்சறை பெட்டியில்
காசுக்காக எத்தனை நாடகம் ஆடியிருப்பாள்

அடியே என்ற நான்காவது முழக்கத்துக்கே காப்பியை நீட்டுவாள்
நல்ல வேளை இன்று வழியும்முன் இறக்கிவிட்டேன்

இப்போ மட்டும் நான் கழட்டி வைத்த துண்டு அங்கேயே இருக்கிறது
எங்கே போனது இதுநாள் வரை

பட்டிணத்திலிருந்து கூப்பிடும் மகன் அழைப்பிற்கு அலறி கொண்டே இருக்குமே
எங்கே அவள் செல்போன்

தோசைக்கல்லில் மாவை ஊற்றி எடுப்பதற்குள் பசியே போய்விட்டது
அவள் சாப்பிடும் அரை தோசையின் இரகசியம் இதுதானோ

மதியம் போடும் மாத்திரைகள் தீர்ந்து போயிருக்கிறது காலை மாத்திரைகள் அப்படியே உள்ளன
காலாவதி ஆகாமல் - என்ன மறதியோ

வேலைக்காரி துவைத்த துணிகள் காய்ந்து கொண்டிருந்த கயிற்றில் ஈரமடைந்த தலையணை உரையையும் சேர்த்து போட்டேன்

பேச துணையில்லாமல் வாடும் பக்கத்து வீட்டு ராணியிடம் கொஞ்சம் பூக்கட்டி கொடுக்க சொன்னேன்
அவள் படத்திற்கு மாட்ட

ஆம் இன்றோடு அவள் இறந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது

எழுதியவர் : (11-Oct-25, 9:07 pm)
பார்வை : 68

மேலே