கல்லணைக்கோர் பயணம்25
கல்லணைக்கோர் பயணம்..25
(இடையாற்றுமங்கலதிலிருந்து..1990களில் )
விடுமுறை நாட்களில்
வாடகை மிதிவண்டி
கிடைப்பது அரிது
பலத்த போட்டி
அன்றாடம் நிகழும்
காத்திருப்போம் வரிசையில்
இடையாற்று மங்கலத்தில்..
போதாகுறைக்கு அவரவர்
வீட்டு உறவினர்களும்
வந்து குவிவர்
வார விடுமுறைக்கு..
வீட்டில் பைசா
அடிக்கடி தராதசூழலில்
"நமக்கு நாமே திட்டம் "
நண்பர்களுக்குள் செயல்படும்
ஒருமணி நேரவாடகை
ஒருரூபாய் அந்நாட்களில்
கையில் கிடைக்கும்
ஐந்தையோ பத்தையோ
அவரவர் போட்டு
அணிதிரள்வோம் ஆசையுடன்
முறையான பயிற்சி
எடுக்க முயன்றும்
தனியாக ஓட்டும்
தணியாத ஆர்வத்தாலும்
மாமா வீட்டிற்கு
விரைந்தேன் மேலவாளடிக்கு
அம்மாதாத்தா வைத்திருந்தார்
வாடகை மிதிவண்டி நிலையம்
இலவசமாக மிதிவண்டியும்
கூடவே பயிற்சியளிக்க
மாமாப்பையன் டேவிட்டும்
ஏகப்பட்ட மகிழ்ச்சி
இலவச திட்டத்தால்
வீட்டின் எதிர்புறமிருந்த
புகழ்பெற்ற ஜெயப்ரியா
சினிமா கொட்டகையின்
பாதை பயிற்சிக்களமாகியது
ஆசையுடன் அமர்ந்தேன்
எட்டியும் எட்டாத
கால்களுடன் கவலையின்றி
அதன்பின்தான் தெரிந்தது
இலவச திட்டங்களோடு
மேலும் மேலும் இலவசமாய்
குனிந்தால் அடி
வளைந்தால் அடி
நேராக பார்க்கவில்லை,
காலை ஊன்றினால் அடி
மேலவாளடியில் வாங்கிய
அடிமேல் அடியால்
அரைகுறை பயிற்சியுடன்
அவசரமாய் திரும்பினேன்
இடையாற்று மங்கலதிற்க்கே..
வீடுவந்தும் விடவில்லை
அடங்காத ஆசை
அப்பாவின் மிதிவண்டியை
திட்டதிட்ட எடுத்து
குரங்கு பெடல்போட்டு
சிங்கமுட்டி பாலம்வரை
தைரியமாய் செல்வேன்
துணையின்றி தனியாளாய்
செல்லும் வழியில்
சிலர் வம்பிழுப்பர்
"வீல் சுத்துது சுத்துது"
என்று வேடிக்கையாய்
பயந்துபோன நான்
பதட்டத்துடன் காலூன்றி
சக்கரத்தைப் பார்த்து
பேந்தபேந்த விழித்தது
பசுமையாய் நெஞ்சினுள்..
(பயணிப்போம்..25)