பெற்றவளுடன் வாழ்வதே இருப்பிடம்

தேய்ந்திட்ட தேகமும் சொல்லுது
தோய்ந்திட்ட கவலையை காட்டுது !
காய்ந்திடும் வயிறும் நனைந்திடவே
காய்கறிகள் விற்பனை தொழிலானது !

பசுமை நிறைந்த காய்கறிகள்
பதிந்திட்ட நினைவுகள் போல !
விதைத்து பயிரிட்டேன் அன்று
விற்றிடவே வாங்கினேன் இன்று ​!

​கட்டியவனும் பறந்தான் எனைவிட்டு
காலன் கையில் சிக்கி மடிந்திட்டான் !
காலத்தை எண்ணுகின்றேன் நானும்
கணவனுடன் இணைந்திடவே நானும் !

வாழ்ந்திட்ட வாழ்க்கையை சொல்வதா
வாழ்கின்ற வாழ்வைத்தான் சொல்வதா !
உழைத்தே தேய்கிறேன் இன்றுவரை
பிழைத்திட வழியும் இல்லைஎனக்கு !

பிள்ளைகளும் உள்ளனர் பெயரளவில்
பிடிசோறு போடவும் மனமில்லாமல் !
வளர்த்து ஆளாக்கினேன் கடமையென
வதைப்படும் நிலையோ வாரிசுகளால் !

அம்மா என்றுகூட அழைப்பதில்லை
அவமானமாம் அவர்களுக்கு நான் !
கிழவிஎன கூப்பிட்டு மகிழ்கிறார்கள்
கிஞ்சிற்றும் பாசமில்லா கிள்ளைகள் !

இருக்கும்போதே மறந்திட்ட அவர்கள்
இறந்ததும் வந்திடுமா எந்தன் நினவு !
இப்படியும் உள்ளார்கள் இரக்கமின்றி
இதைதான் உரைக்கிறேன் உங்களுக்கு !

என்னிலை வேண்டாம் எத்தாயக்கும்
ஏங்கிடும் நிலையும் வரவேண்டாம் !
அள்ளிஅள்ளித் தந்தாலும் பாசத்தை
கிள்ளி எறிகின்றனர் உணர்வின்றி !

தாயுள்ள பிள்ளைகளே செவிமடுப்பீர்
தானாக பிறக்கவில்லை எவருமே !
பெற்றவள் கருவறையே நம் பிறப்பிடம்
பெற்றவளுடன் வாழ்வதே இருப்பிடம் !

பிள்ளைகளை பெற்றெடுத்த தாய்களே
சிந்தியுங்கள் சிறிதேனும் என்நிலையை !
தனித்து வாழ்ந்திட பழகிடுங்கள் இனியேனும்
தளிர்கள் உங்களை தனித்து விடுமுன்னே !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (8-Feb-14, 7:45 am)
பார்வை : 541

மேலே