எந்தக் கடவுள்

கண்ணுக்கெட்டும் தூரம் வரை குப்பைகள். குப்பை மலைகள், மனிதர்களின் சாட்சியாய் சிதறிக் கிடந்தன....ஆங்காங்கே சில இடங்களில் புகையாய், நெருப்பாய், நாற்றமாய் தன்னை மாற்றிக் கொண்டு இருந்தன குப்பைகள். 2020ல் வல்லரசாக போகும் இந்தியாவின் இதயங்கள் ,ஆங்காங்கே குப்பை பொறுக்கிக் கொண்டிருந்தார்கள்.....தேடத் தேட ஏதாவது கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. குப்பை மேடானாலும் சரி, கோபுர கலசம் ஆனாலும் சரி.... தேடலைக் கொட்டிக் கொண்டே இருக்கின்றன....எத்தனை விதமான குப்பைகள். குட்டு குட்டாய் கிடக்கும் ஒவ்வொரு விதமான குப்பைகளிலும் ஒவ்வொரு குடும்பமும் குத்த வைத்து அமர்ந்திருப்பதாகவே ஒரு ஓவியம் விரிகிறது மனக் கண்ணில்....

நாய் ஒன்று செத்துக் கிடந்தது.. காகங்கள் வட்டமிட்டன.. முகவரியற்ற எத்தனையோ முகங்கள் குப்பைகளாகவே தங்களை உணர்ந்து கொண்டிருந்தார்கள்....எத்தனையோ தப்புகள் குப்பைகளாக தலை விரித்து கிடந்தன.... காலியான மது பாட்டில்கள் வாய் பிளந்து மயங்கி கிடந்தன.... குப்பைகளின் நெடி... கூட, கொசு கடி..... எவ்விதமான எதிர்வினையும் காட்டாமல் எத்தனையோ குப்பை பொறுக்கிகள், களை எடுத்துக் கொண்டிருந்தார்கள்....

போர்க்களத்தில் வாளோடு நிற்கும் வீரர்களைப் போல, குப்பை மேட்டில் முதுகில் சாக்கோடு கழுகின் பார்வையில் மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தார்கள் குப்பை பொறுக்கிகள்.....அவர்களை தூரத்தில் இருந்து பார்த்தால், முதுகில் உணவு சுமந்து செல்லும் எறும்புக் கூட்டமாக தெரிந்தார்கள்...

வேலனின் காதுகள் விடைத்தன ..... ஏதோ, யாரோ ஒருத்தனின் முனகல் சத்தம்....

அங்கும் இங்கும் காதாலேயே தேடி,,,,,

இன்னும், இப்போது அதிகமாக சத்தம் கேட்க, நெருங்கி விட்டான்....யாரோ ஒரு ஆள் அடிபட்டு, குப்பை கூளங்களுக்குள் முனங்கிக் கொண்டும் நடுங்கிக் கொண்டும் படுத்திருந்தான்....அவனே குப்பையோ என்று நினைக்கும் அளவுக்கு குப்பையோடு குப்பையாக கலந்துவிட்டிருந்தான்..... வேலன், தன் முதுகுப் பையை இறக்கி வைத்து விட்டு, அடிபட்டு விழுந்து கிடக்கும் அந்த ஆளை மெல்ல வெளியே இழுத்தான்...ஏதோ காந்தம் போல, சட்டென வேலனின் கையோடு ஒட்டிக் கொண்டே வெளியே வந்தான். அவன் படுத்திருந்த இடம், அவனின் அச்சை அங்கே வார்த்திருந்தது....எப்போது விழுந்தானோ தெரியவில்லை. ஆளே ஒரு மாதிரி வித்தியாசமாக இருந்தான். மொட்டை தலை, சின்ன கண்கள், அவ்வளவு குப்பையிலும் முகத்தில் ஒரு தெய்வீக கலை, மிருதுவான மேனி, செருப்பில்லாத பாதங்கள், உடல் முழுக்க அடி விழுந்திருந்தும் ரத்தமே வரவில்லை போல.....

அதற்கான சுவடுகளே இல்லை.. முகத்தின் ஒரு வித சாந்தம் பரவியிருந்தது....

"ஐயா ... ஐயா.... நீங்க யாரு, பேசறது கேக்குதா....? "

திடும்மென அடித்த காற்றில் கனமில்லாத குப்பைகள் காற்றோடு கதை பேசி பறந்தன...... கணமுள்ள குப்பைகள் கல் போல ஒரே இடத்தில் தேங்கி கிடந்தன.....

வேலனுக்கு உடல் நடுங்கியது...
"பாவிங்க, எவன் அடிச்சுப் போட்டான்னு தெரில... உலகமே குப்பை மேடா ஆனாக் கூட சில பாவிங்க திருந்த மாட்டானுங்க" என்று முணங்கினான்.........

வேலன்களுக்கு முணங்குவது தவிர வேறென்ன தெரியும்......?

" இனி தான் ஆகணுமா" என்று ஈனஸ்வரத்தில் ஒரு அசரீரி போல பேசினான் விழுந்து கிடந்தவன்.....

அட, உயிர் இருக்கு என்று, கண்கள் பிரகாசமானான் வேலன்.....

இனி பேசி நேரத்தை வீண் பண்ணக் கூடாது என்று சட்டென, கீழே கிடந்தவனை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு குப்பை மேட்டை விட்டு வெளியேறி மருத்துவமனை நோக்கி நடந்தான்....

" ஐயா, நீங்க யாரு... பேர் என்ன... இந்த ஊர்தானா.... எப்பிடி இங்க வந்தீங்க...."

ம்ஹூம்...... எதற்கும் பதில் இல்லை.... சாலையில் நடப்பவர், பார்ப்பவர், எல்லாம் ஒரு வித பரிதவிப்போடு பார்த்தார்கள்....

ஆனால் முகத்தை சுழிப்பது, மூக்கை தெரியாமல் பொத்துவது, சிலர் மூச்சை உள் வாங்கி வெளியே விடாமல் அவர்கள் சற்று அந்தப் பக்கம் போனதும் விடுவதும், என்னாச்சு... என்னாச்சு என்று அவரவர் , அவரவருக்குள் கேட்டு.... ஒரு வழியாக, ஒரு தனியார் மருத்துவமனையை அடைந்து விட்டான் வேலன்....

திரும்பவும், என்னாச்சு என்ற அதே கேள்வி....

" தெரியலீங்க,,,,, குப்பை மேட்டுல கிடந்தாரு"

வேலனை ஒருவரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை....

கொஞ்சம் தள்ளி ஓரமா நில்லுங்க என்ற நர்ஸ், வேலனை முகம் சுளித்துக் கொண்டே பார்த்தாள்.... பின் அங்கிருந்த சேரில் சாய்த்து வைக்கப் பட்டிருந்த அந்த அடிபட்ட ஆளை, கன்னத்தில் தட்டி எழுப்பினாள்...

" இங்க பாருங்க...... பேர் என்ன..... உடம்புக்கு என்ன? எப்பிடி அடி பட்டுச்சு? முகம் இப்பிடி வீங்கியிருக்கு.... யாராது அடிச்சாங்களா ....?"

பேர்.... பேர்....... சொல்லுங்க என்று கொஞ்சம் முகத்தருகே சென்று கேட்டாள்.... நர்ஸ்....

க ட வு ள்....... என்று மெல்லிய குரலில் முனங்குவது போல் கூறினான் அந்த அடிபட்ட ஆள்....

"பேர் சொல்லுங்க சார்....." திரும்பவும் உரக்க கேட்டாள்....

அந்த அடிபட்ட ஆள், கண்களை நன்றாக விரித்து, அந்த நர்சை உற்றுப் பார்த்து, என் பேர் கடவுள் என்றான்......

ஒ.... ஏதோ, தலைல அடிபட்டு கலங்கிட்டாரு போல என்று முனங்கியபடியே , சரி கடவுளே.. நீங்க எந்த கடவுள் என்று நக்கலாக கேட்டாள் நர்ஸ்....

ஏன், எந்த கடவுள்னு சொன்னாதான் சிகிச்சை குடுப்பீங்களா.... என்று கேட்டார் கடவுள்....

" பின்ன.... வேற மதத்து கடவுளுக்கு ட்ரீட்மென்ட் தரதுக்கா எங்க கடவுள் இந்த ஹாஸ்பிடல கட்டிக் குடுத்தருக்கார்"...... என்றாள் நர்ஸ், வெடுக்கென்று.....

" சரி, உங்க மதத்து கடவுள் யாரு' என்றார், சிகிச்சைக்கு வந்திருந்த கடவுள்....

- நர்ஸ் சொன்னாள்----

"அட, அவன் என் நண்பன் தான்.. வேணும்னா கூப்ட்டு கேட்டுட்டு எனக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிங்க....." கிட்டத்தட்ட கெஞ்சவே தொடக்கி விட்டார் ...

நாட் ரீச்சபில்ல இருக்காரம்மா.....

ரீச்சபில்ல இருக்கறவனுக்கு ஒரு ஊசி கூட போட மாட்டேங்கறீங்க என்று முணங்கிய படியே ..... வேலா...... வேற ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போ..... டைம் ஆகுது என்றார் கடவுள்....

அடுத்த மருத்துவமனையிலும் விஷயம் தெரிந்து, கெஞ்சி, கூத்தாடி, அட அந்த கடவுளும் எனக்கு நண்பன் தான், வேணும்னா பேசிப்பாருங்க என்றார் கடவுள்....

என்னவாமா.......?

ரொட்டி செய்யறதுக்கு ஏதோ மலை பிரதேசத்துக்கு போயிருக்காராமா....
மொபைல்ல சார்ஜ் இல்ல போல... லைன் கட்டாய்ட்டே இருக்கு....

கடவுளே, ஒன்னும் கவலைப் படாதீங்க என்று முடிவெடுத்தவனாய், கடவுளை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு, வேலன் அரசு மருத்துவமனை நோக்கி நடந்தான்.....

" பேரு என்ன கடவுளா.... இனிசியல் இல்லையா..... சரி, ஒண்ணும் பிரச்சனை இல்ல... பக்கத்துல இருக்கற போலிஸ் டேசன் போய் ஒரு எப் ஐ ஆர் போட்டுட்டு வந்துருங்க.. அடிதடி கேஸ் பாருங்க.. அதான்.........ம்ம்ம்ம் ..... இல்லன்னா ஒண்ணு பண்ணுங்க" என்று வேலனின் காதுக்குள் ஏதோ ரகசியம் கூறினான் வரவேற்பரை போல இருக்கும் அறையில் அமர்ந்திருக்கும் ஒருவன்....

ஐயோ, அவ்வளோ பணம் என்கிட்டே இல்லங்க.... !

கடவுள்ட்ட இருக்கான்னு கேளு....?

அதற்கு மேல் அவர்களை பேச விடாமல், கை அமர்த்திய கடவுள் வேலா... என்னை உன் வீட்டுக்கு கொண்டு போ.. என்றார் மெல்ல.....

வேலன், தன் மனைவியிடம் கடவுளை அறிமுகப்படுத்தினான்....

கும்படறேங்க கடவுளே..... என்றாள் வேலனின் மனைவி.... இரு கைகளையும் கூப்பியபடி....

பார்த்துட்டே இருந்தா எப்பிடி..... கஞ்சிய கரை.... என்று சொல்லிவிட்டு, கடவுளை சுற்றி கொசுவலையை விரித்து விட்டான் வேலன்....

அது ஒண்ணுமில்ல கடவுளே..... முன்னால சாக்கடை ஓடுதில்ல..... அதான் கொசு தொந்தரவு அதிகம்....

படுத்தவாக்கிலேயே, மெல்ல புன்னகைத்த கடவுளின் கண்களில் அந்த சேரியை ஒட்டிய ஒரு பெரிய கட்டிடம் தெரிந்தது...

அதை கண்டு கொண்ட வேலன், ஐயா, அங்கயும் கொசு இருக்கும்.... ஆனா அது வேற கொசு........ அவுங்களுக்கு கொசுவும் வேற.. கடவுளும் வேற...... நீங்க கண்டதையும் போட்டு குழப்பிக்காதீங்க.. இந்தாங்க இந்த கஞ்சிய கண்ண மூடிகிட்டு குடிச்சிடுங்க.. உடம்புல கொஞ்சத் தெம்பு வரும் .... என்றபடி கைத்தாங்கலாக சாய்த்துக் கொண்டு கஞ்சியை வாயில் ஊற்றினான்....

வேலனின் 5 வயது குழந்தை, "உனக்கு காக்கா வடை தூக்கிட்டு போன கதை வேணுமா......இல்ல, பாட்டி வடையை ஒளிச்சுகிட்ட கதை வேணுமா....இல்ல, நரி, காக்காயையே கவ்விகிட்டு போன கதை வேணுமா...? எனக்கு மூணு கதையுமே தெரியும்... எது வேணும் சொல்லு .... கடவுளே" என்றது.....

கடவுள் சிரித்தபடியே கண்கள் மூடினார்..... காஞ்சி வாய்க்குள் போகாமல் வழியத் துவங்கியது.....

எழுதியவர் : கவிஜி (10-Feb-14, 2:40 pm)
Tanglish : entha kadavul
பார்வை : 553

மேலே