பெண்ணே என்னே உன் அழகு

வட்ட நிலா உன் முகத்தின்
வனப்பு கண்டது
வெட்கப் பட்டு தன்முகத்தை
மறைத்துக் கொண்டது.
தொட்டுப் பார்த்த பட்டுப்பூச்சி
நொந்து கொண்டது
எட்டுக்காலு பூச்சிவலையில்
விழுந்து மாண்டது,
வெண்டைகாயும் உன்விரல்கள்
கண்ட பின்புதான்
அந்தப் பெயரைத் தனக்குத்தானே
சூட்டி மகிழ்ந்தது,
உந்தன் குரலைக் கேட்ட குயில்கள்
பறந்து வந்தன
இரவல் கேட்டு குரலைக் கொஞ்சம்
வாங்கிச் சென்றன.
வரண்டு கிடந்த பூமி பார்த்து
மேகம் துணிந்தது
திரண்ட கூந்தல் கருமை கொஞ்சம்
வாங்க விரைந்தது.
இதழ்கள் விரித்து சிரித்தபோது
முத்து பார்த்தது
இந்த வெண்மை இல்லை என்று
கடலில் மறைந்தது
வழுக்கும் கழுத்தை சங்கு நின்று
எட்டிப் பார்த்தது
இனியும் வாழப் பிடிக்கவில்லை
கடலில் விழ்ந்தது
வழுவழுத்த வாழைத்தண்டும்
கால்கள் பார்த்தது
வெலவெலத்து நடுநடுங்க
வீணாய் போனது
வானவில்லும் வனிதை உந்தன்
சேலை கண்டது
அந்த வண்ணம் இல்லையென்று
அழிந்து போனது
வளைந்து கிடந்த புருவம் தன்னை
வில்லும் கண்டது
வாழும் எண்ணம் தனைவிடுத்து
எரிந்து போனது
சொல்லச் சொல்ல இனிக்கும் அழகு
சொக்க வைக்குது
மெல்ல மெல்ல இதயம் தன்னை
உருக வைக்குது.

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (10-Feb-14, 5:28 pm)
Tanglish : penne enne un alagu
பார்வை : 348

மேலே