புலரும் காலை

வாய் திறக்க கூசும் சிறு நாணல்கள்
வந்தமர்ந்து பேசும் பனித் தூறல்கள்
புதிய காலை
புலரும் வேளை
புள்ளினங்கள் தூவும் இசைச் சாரல்கள்


காற்றில் கலந்து வரும் அலையோசை
கவலை மறக்க வைக்கும் குயிலோசை
நகரும் இருட் சோலை
ஒளி நுகரும் அதிகாலை
நல்ல சேதி தரும் ஆலயத்தின் மணியோசை.


மலையில் நடை பயிலும் புது அருவி
மரக் கிளையில் கடை விரிக்கும் சிறு குருவி
இறைவனின் படைப்பதில்
இயங்கிடும் மனிதன் நீ
இயற்கை தேர்ந்தெடுத்த பெரும் கருவி


முடிந்தது மறைந்ததெல்லாம் நேற்று
விடிந்தது இனி விதியை மாற்று
நம்பிக்கை விதை விதை
நிதம் வெற்றியே அறுவடை
நாளை துயரம் பறந்தோடும் தோற்று!

எழுதியவர் : சிவநாதன் (12-Feb-14, 9:41 am)
Tanglish : pularum kaalai
பார்வை : 906

மேலே