விழிகளுக்கிமைகள் துணையாகும்

விழிகள் மூடும் விழி நீர்ப் பெருகும்
இமையே எனை நீ பிரியாதே!
துயரின் இரவு துளியாய்க் கரையும்
துணையே எனை நீ மறவாதே!
துடிக்கின்ற இதயம் அடங்கிடும் நாள்வரை
துன்பங்களுண்டு மறவாதே!
நிலவின் வாழ்விலும் தேய்தலுமுண்டு
புதிதாய் பிறந்து ஒளிர்கிறதே!

அழுதிடும் விழிகள் துடைத்திட வேண்டாம்
அழுகையுமெனக்கு அழகாகும்!
அமைதியின் சிகரம் அன்பின் வடிவம்
அருளைத் தருவார் துவளாதே!
தாங்குதலின்றி கொடிதனும் வீழும்
படர்ந்திட அதற்கு வழியேது?
சாய்ந்திட தோள்கள் தேடிடும் பொழுது
தலைவா தந்திட மறவாதே!

இதயத்தின் ஓசை மனதிற்கு கேட்கும்
மறைக்கின்ற வலிகளும் புரியாதா?
விரலதுவறுந்தால் விழிகளுமழுமே
துடைத்திட நீயே கரமானாய்!
தென்றலின் தழுவல் மலருக்குப் புரியும்
உதிர்ந்திடுமிதழும் துடிக்காதா?
சிற்பிகள் குடைய சிற்பமுமிளிரும்
வலிகளுமதற்கு வரமாகும்!

தேய்கின்ற நிலவும் தேனொளி வீசும்
தேய்பிறையதற்கும் அழகாகும்!
புதைகின்ற விதைகள் முளைப்பது போலே
புதிதாய்ப் பிறப்பாய் தயங்காதே!
தேனினிமை நெல்லியின் கசப்பும்
சேர்ந்திடும் சுவையும் தனிதானே!
சோர்ந்த உன் விழிகள் அழுதிடலாமோ?
விழிகளுக்கிமைகள் துணையாகும்!

..........................சஹானா தாஸ்!

எழுதியவர் : சஹானா தாஸ் (15-Feb-14, 9:46 am)
பார்வை : 365

மேலே