இப்படிக்கு எமன்கள்

ஒரு யாருமற்ற
ஆழ்நீர்ப் பரப்பில்
காற்றுக்குமிழ் உடைத்து
இன்னும்
சுவாசங்களோடிருப்பதாய்
சொல்ல வருகிறது
அடிநிலத்துப் பாசிகள்...!!

எவ்விடம் கக்கிவிடலாமென
மானுட வாசமில்லா
முகடுகள் தேடி
ஆரூடம் பார்த்து
ஓடித் திரிகிறது
எரிமலை நதிகள்.....!!!

இழுத்துவிட்டு மூச்சு
புகட்டுவோமென
எதிர்பார்த்திருந்த
புதைநகரத் திணறல்கள்
முனகிக் கொண்டே
நகர்ந்து போகிறது
நாகரீகச் சுமைகளேற்றி......!!!

எப்படியும் இன்றுன்னை
விழுங்கிடுவேன் என
வளர்ந்து திளைக்கிறது
தினசரி சிதைவுகளுக்குப்
பழகிய
கனிம விருட்சங்கள்....

நெடுஞ் சமுத்திரப்
பயணங்கள் கடந்து
பவளப் பாறைகளில்
தேனிலவு கொண்டாடித்
திரும்பியிருக்கிறது
தேசங்கள் தெரியா
மீன்கள்...

ஓரறிவோ... ஒருசெல்லோ...
உமிழ்ந்ததுவோ.... உதிர்ந்ததுவோ
எதுவாயினும்
சுய அடையாளம் பகர்கிறது
இப்படியுமாய்
பாதகங்கள்
தவிர்த்துக் கொண்டே....

என்ன செய்யும் ஆறறிவு...?
படைப்பின் உச்சமென
மார்தட்டிக் கூவ
வேண்டியிருக்கிறதே.....

எழுதியவர் : சரவணா (19-Feb-14, 8:00 pm)
பார்வை : 137

மேலே