விதியே உன் விலாசம் என்ன

இதுவும் விதிதான்
என்று தெரிந்தும் தேடுகிறேன்......

கதை....
திரைக்கதை.....
வசனம்
எழுதி,
விமர்சனத்திற்கு விலாசம்
கொடுத்து செல்லும்
உன் பெயர்தான் விதியோ......?

உன்னை வெல்வான் வெல்லட்டும்
ஆனால்,கொல்வான் நான் தான் என்று
உறுதி கூறி,
உயிர் எடுப்பான் நீதானா........?

மாற்றங்கள் மட்டுமே மாறுவதில்லை,
உன் ஆயுட்காலம் என்றும் நீளுவதில்லை என்பதுதான் உன் வசனமோ.......?

விதியே........
உன் சதி.... சரித்திரமாகவும் இருந்திருக்கலாம் சாதனையாகவும் இருந்திருக்கலாம்.......
ஆனால்......
இத்தனை உயிர்களின் சாவாகவும்
இருந்திருக்கலாமா......?

மண்ணில் தண்ணீரும்.....
பெண்ணில் கண்ணீரும் ....
வைத்து எதுகை
அமைப்பை உருவாக்கினாயே....
அது........ இலக்கண பிழையா.....
இல்லை......
இருக்கவேண்டிய பிழையா........?

தண்ணீரோடு ஒட்டாத
தாமரையின் வாழ்க்கை
தண்ணீரில்லாமல் தொடராது.........!

கண்ணீர் சிந்தாத
பெண்ணின் வாழ்க்கை
கண்ணீரில்லாமல் கரை ஏறாது......!

எண்ண தெரியாதவனுக்கு
பணம் வருவதும்,
எழுதத்தெரியாதவனுக்கு
கவிதை வருவதும்,
தவறு என்றால்....
உணர்வே இல்லா உனக்கு
உயிர் இருப்பது மட்டும் சரியா......?

கொலைவெறிக் கொடியேற்றி
உன் குதிரைக்கு
கொள்ளும் தண்ணீரும் கொடுத்து
கொலை செய்ய ,
படைஎடுத்து வந்தாயே........

உன்னால்.....
எத்தனை குடும்பங்கள்
எள்ளும் தண்ணீரும்
இறைத்துவிட்டு பட்டினிகிடக்கிறது
தெரியுமா......?

உயிரை எடுத்து
சொர்கத்திற்கு அனுப்பிவிட்டாய்......
உயிரோடு நரகத்தில் இருக்கும்
உயிர்களை.......
என்ன செய்யபோகிறாய்....?

எந்த மொழியில் எழுதினாய்
என் தலைஎழுத்தை ......அன்று....
தமிழில் தலைப்புசெய்தியாய்
வாசிக்கின்றனரே....... இன்று.....

இதமான தென்றல்.....
இரைச்சலான புயலாவது என்று.....?

ஆர்ப்பரிக்கும் கடல்
அழ வைப்பது என்று......?

பொறுத்துக்கொள்ளும் நிலம்
பொங்கி எழுவது என்று.....?

அறிவார் எவரோ.......?

அறியாதவர் உண்டோ........?
காரணம் நீதான் என்று........!

ஏய் விதியே .......
உன் விலாசம் தான் என்ன...........?



********************விதியின் விலாசம்
தேடி******************

எழுதியவர் : vidhya....... (19-Feb-14, 8:15 pm)
பார்வை : 158

மேலே