ஓர் எழுத்தாளனின் கதை-2

தொடர்கதை : இரா.சந்தோஷ் குமார்.
----------------------------------------------------------------------------
இரண்டு நாட்கள் கடந்து சென்று விட்டன.

அதிர்ச்சியில் இருந்து இயல்பு நிலைக்கு வந்த பிறகு
தினகரன் வழக்கம்போல பள்ளிக்கு சென்றாலும் யாரிடமும் பேசவில்லை. எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்கும் தினகரன் ,இன்று ஏனோ மெளனமாக இருக்கிறானே என்று நினைத்த அவனின் கணித ஆசிரியர்

”தினகரன் அடுத்த ப்ரீயெட் என்ன சப்ஜெக்ட் ? ”

எது கேட்டாலும் சுட்டித்தனமாக உடனடி பதில் கொடுக்கும் தினகரன் இன்று ஆசிரியர் கேட்ட கேள்விக்கு பதில் அளிப்பதை பார்த்து கணித ஆசிரியர் கண் கலங்கிவிட்டார்.
தினகரன் சொன்ன பதில் :

” த்த..... த்த... த்த... த்த... த்த... தமிழ் மிஸ் ! “

தமிழ் மொழியை நன்றாக உச்சரிக்க வேண்டும் என்று அவனின் தந்தை தன் மகன் மீது வைத்திருந்த நம்பிக்கை இப்போது திக்கு வாயில் சிக்கி திணறி சுக்குநூறாகிப்போனது.

”டேய் தினகரா..! ஏன்டா என்னடா ஆச்சு.?. ஏன் ?இப்படி திணற.. ரிலாக்ஸ் ! ரிலாக்ஸ்!! ம்மா. சரி நீ பேச வேண்டாம் “ என்று கணித ஆசிரியர் வெளியேறும் கண்ணீரை அடக்கிக்கொண்டு அவனை அமைதிப்படுத்தினார்.

திக்குவாய்..! கிட்டதட்ட பத்து சதவீதம் ஊமையாகிப்போன நிலைதான். மனதை கட்டுப்படுத்த தெரியாத விடலை பருவத்தில் இருக்கும் எல்லா திக்குவாய்க்காரர்களுக்கும் அது மோசமான அவமானமடைந்த பருவமாகத்தான் இருந்திருக்கும். இதில் தினகரன் மட்டும் விதிவிலக்கா என்ன..?

சக மாணவர்களால் அழைக்கப்பட்ட ”திக்குவாய் தினகரன்” பட்டப்பெயர், அவன் மனதை ஆழமாக கீறி அழுத்தமான தாழ்வு மனப்பான்மையை கொடுத்துவிட்டது.
பருவ வயதில் பாடாய்ப்படுத்தும் பெண்கள் மீதான ஈர்ப்பு இவனுக்கு வெறுப்பு.
பாடத்தில் வரும் சந்தேகங்களை ஆசிரியர்களிடம், வேறு யாரிடமும் கேட்கமாட்டான். இதுனால் இவனின் அறிவு நிலை மந்த நிலைக்கு சென்றுக்கொண்டிருந்தது.
எதிலும் நாட்டமில்லாமல் இருக்கும் தன் மகனை கண்டு வருந்திய தினகரனின் தந்தை, அவனுக்கு தன்னம்பிக்கை கொடுத்துக்கொண்டே வந்ததால் திக்குவாயிலிருந்து சற்று மீண்டுக்கொண்டான் தினகரன். இருந்த போதிலும் நெடில் ஒலியில் ஆரம்பிக்கும் வார்த்தைகளில் தடுமாறித்தான் பேசினான். இந்த மாற்றம் அவனை ஓரளவுக்காவது தேர்ச்சி பெற்று பள்ளி படிப்பை வெற்றிகரமாக முடித்து வைத்து கல்லூரியின் வசந்த வாசலில் அடியெடுத்து வைக்க உதவியது.


தினகரன்..........! பின்னாளில் ஒரு மிகப்பெரிய பிரபல கவிஞனாக, எழுத்தாளராக மாற்றுப்போகும் மிக முக்கியமான மூன்றாண்டு போர்களம்தான் இந்த கல்லூரி வாழ்க்கை.

கல்லூரியில் முதல் ஆண்டு முதலாம் நாள் :

உளவியியல் துறை தலைவர் தன்னை மாணவர்களிடம் அறிமுகம் செய்துவிட்டு, மாணவர்கள் தங்களை அறிமுக செய்துக்கொள்ள வேண்டினார்.
வரிசையாக ஆண் பெண் என எல்லோரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.

ஐ ம் தீப்தி ஃப்ர்ம் ஊட்டி..! ஐ விஷ் பிகேம் ஏ லாயர். பிகாஸ் மை ஃபாதர் ஆல்சோ லாயர்.

ஐ ம் சந்துரு ஃபர்ம் சேலம். ஐ ம் நாட் யெட் செட் மை கோல்.


ஆங்கில நெடியில் தமிழ் துளிர்க்க விரும்பவில்லை என்ற சூழ்நிலை அங்கு நிலவியது

தினகரனின் வரிசை வந்தது.
ஆங்கிலத்தில் திறமையான மொழி ஆளுமை இருந்தாலும் அவன் தமிழில் பேசவே விரும்பினான்.

” sir can i speak in tamil . is it offense here? “ சரளமான ஆங்கில உச்சரிப்பில் கேள்வி கேட்ட தினகரனை நோக்கி.. துறைத்தலைவர்.

“ நோ நீ தமிழ்ல பேசலாம். ஆனா இங்க பலமொழி பேசும் மாணவர்களும் இருக்காங்கப்பா. அதுக்குத்தான் இங்கிலீஷ்ல பேசுகிறோம். சரி நீ சொல்லு “

கல்லூரியில் அவனுக்கான முதல் அவமானம் ஆரம்பித்தது.


”என் பேரு தி தி தி தினகரன்.” திக்கி திக்கி வந்த அவன் உச்சரிப்பை கேட்டு அந்த வகுப்பறையில் இருக்கும் சக மாணவிகளில் சிலர் வாய் பொத்திக்கொண்டு சிரித்ததை கவனித்த துறைத் தலைவர்.

” கேர்ள்ஸ்..! இப்படி பேசுபவர்களை பார்த்து இதுப்போல சிரிப்பது எனக்கு பிடிக்காது. .தினகரன் நீ ரிலாக்ஸ் பண்ணிட்டு பேசுப்பா. இங்க எல்லாரும் உன் ப்ரெண்ட்ஸ்தான். நானும் கூட .. ம் தென் உன்னோட இலட்சியம் என்ன ?”

” தேங்க்ஸ் சார்..! நான் எப்படி என்னாவாக போகிறேன் ? தெரியலை சார். காலேஜ் பைனல் இயர்ல முடிவெடுத்துக்கிறேன். பட் நான் கிரேட் லெஜண்ட் முத்துமாணிக்கம் ஐயாவை போல கம்பீரமா தமிழ்ல பேசி ,இந்த உலகமே என்னை திரும்பி பார்க்க வைக்கணும் “ என்று திக்கியும் சில சமயம் சரளமாகவும் பேசிய தினகரனை பார்த்து “ யெஸ் உன்னால முடியும் தினகரா..! “ என்று தன்னம்பிக்கை கொடுத்து பாராட்டினார் அந்த உளவியல் துறைத் தலைவர்.

முதல் நாள் சில நண்பர்களின் அறிமுகத்தால் கொஞ்சம் மகிழ்ந்தாலும் வகுப்பறையில் சிரித்த அந்த சில பெண்களின் மேல் இவனின் கோபம் தீரவில்லை.

அந்த கல்லூரியில் முழுக்க முழுக்க ஆங்கிலத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் இருந்தது. அங்கு இளங்கலை , முதுகலை பட்டப்படிப்புக்காக நல்ல வேளையாக தமிழ் துறை இருந்திருக்கிறது. தினகரனுக்கு இது கல்லூரியின்
முதல் ஆண்டு என்பதால் தமிழ் பாடமும் அவனின் பாடத்திட்டத்தில் இருந்தது. அதில் இருக்கும் சில இலக்கியங்களை ரசித்து படித்து தமிழ் பேராசிரியரிடம் விளக்கம் கேட்பான். இவனின் தமிழ் ஆர்வத்தை கண்டு தினகரனுக்கு கவிதை எழுத ஆர்வத்தை தூண்டினார்.

கவிதை எழுத முதன் முறையாக பேனா பிடிக்கும் கன்னி கவிஞர்களுக்கு -காதல்- அல்லது --நிலா-- இதுதான் கருப்பொருளாக இருக்கும். தினகரனுக்கும் நிலா தான் கவிதை எழுத மையப்பொருளாக இருந்தது.

வணக்கம் நிலவே !
அங்கே
எங்கள் பழமொழி
பாட்டி நலமா?.
உன்னை சுற்றி
நட்சத்திரங்களாக
வானில் சிந்தியிருப்பது
பாட்டி சுட்டுப்போட்ட
வடைகள் தானோ..!


முதன் முறையாக அவன் எழுதிய கவிதையில் ஒரு தனித்துவத்தை உணர்ந்த தமிழ் பேராசிரியர் அவனை உற்சாகப்படுத்திகொண்டே இருந்தார்.

தமிழ் துறை -இலக்கிய பேரவை சார்பாக கவியரங்க போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் தினகரனை பங்கேற்க வைக்க வேண்டும் என்று தமிழ் பேராசிரியர் விரும்பினார்.


கவியரங்கத்தில் தினகரனால் திக்காமல் பேச முடியாது என்றாலும் அவனுக்கு ஒரு தன்னம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக அந்த பேராசிரியர் எடுத்த முயற்சி தினகரனுக்கு பெரும் அவமானத்தை கொடுக்கலாம் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

அவனின் எழுதும் ஆர்வம் சீர்குலைக்கும் அந்த கவியரங்க போட்டி நடக்கும் நாள் வந்தது.


--(தொடரும்)

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார். (21-Feb-14, 2:03 am)
பார்வை : 264

மேலே