உயர்ந்த இடம் வீடா அல்லது காடா

குயில் பாடும் சுதந்திரமாய்
தன் துணைக்காய்!
தடை கூறவில்லை
தடுத்தும் வைக்கவில்லை!

மாநாடு பல கூடும் சுதந்திரமாய்!
தன் இனத்துக்காய் காகம்!
தடையில்லை
தடியடியுமில்லை!

என் உரிமைக்காய் கூடி
என் இனத்துக்காய் பேச!
முடியவில்லை - பேசா
மடந்தையாய் நான் இங்கு!

பேசா விலங்கினங்கள்
பேசுகின்றன!
கூடிக் குழாவுகின்றன
குடும்பம் நடத்துகின்றன!

தனக்காய் ஒரு இடம்
வகுக்கவில்லை அவை!
சுதந்திரமாய் உலாவி வர
விரிந்த இடம் எங்கும்!

மனித குலம் உயர்ந்த குலம்!
வாய்ப்பேச்சில்.
ஏற்றத் தாழ்வு பல!
எம்மிலே பல ரகங்கள்!

இட ஒதுக்கீடு!
மனித குல சீர்கேடு!
முடியவில்லை சுதந்திரமாய்
எங்கும் சென்றுவர!

மொழிகள் பல பேசிடுவோம்
நாங்கள்!
புரியா மொழி பேசிடுவோர்
முரண்பாடு எமக்குள்!

மொழி அறியா விலங்கினங்கள்
பேசும் மொழி இனிய மொழி!
ஒரு மொழியாய் - தனி
மொழியாய் இனிமையாய்!

பண்பாடு கலாசாரம் என்றும் - பல
விழுமியங்கள்!
இவை அனைத்தும் வேசமாய்
நமக்குள்!

உயர்ந்த குலம் நம் குலமா? - இல்லை
உயர்வான விலங்கினமா?
உயர்ந்த இடம் வீடா? இல்லை
காடா?

எழுதியவர் : ஜவ்ஹர் (22-Feb-14, 8:03 am)
பார்வை : 95

மேலே