ஒற்றைச் சிறகாலும் உயரப் பறக்கலாம்
பொறிஇன்மை யார்க்கும் பழிஅன்[று];
அறி[வு]அறிந்[து]
ஆள்வினை இன்மை பழி.
ஆள்வினை உடைமை--062
திருக்குறள்--0618
*********************************************************
ஒற்றைச் சிறகாலும் உயரப் பறக்கலாம்
மற்றோர் சிறகும் அற்றுப் போயினும்
ஒற்றைச் சிறகால் உலகைச் சுற்றிடு--
பற்றிய குறிக்கோளை முற்றும் முடிக்கப்
பற்றும் உறுதியைப் பெற்றிடு இளைஞனே-!
எற்றும்; இடறும்; எத்தனையோ இடர்கள்
சுற்றும்; முற்றும்; குற்றும்; அடும்சுடும்--
முற்றுகை இட்டு வெற்றி பெற்றிடக்
கற்றுக் கொள்நீ கணினி அளவு--
புற்று நோய்போல் மற்றவர் வரினும்
இற்று விடாமல் எதிர்த்து நில்;செல்--
வெற்று வேட்டு, வழியை மறிக்கும்
சற்றும் சளைக்காது சந்தி; நீமுந்து--
குற்று யிராய்ச் சிற்றுயிராய்க் கிடக்காமல்
தொற்றும் நோய்களாய்த் தொடரும்; படரும்--
உற்றுநீ நோக்கு; தெற்றெனத் தெரியும்--
அற்றம் பெற்றிட எற்றி உதைத்திடு--
கற்றவ ராயினும், கற்றில ராயினும்
புற்றீசல் போலப் புறப்பட்டு வருவர்,
முற்றும் உன்னை முடித்து விடவே--
சிற்றனம் கண்டு சிதைந்து விடாதே-
குற்றம் குறுகா முற்றம் கண்டிடு--
செற்றம் அகற்று; கொற்றம் சேர்ந்திடு--
கற்றன வழியில் நிற்றல் செய்திடு--
ஒற்றி நின்றே உலகைக் கற்றிடு-
மாற்றம் ஏற்று வாழ்ந்திடு; வளர்ந்திடு--
ஏற்றம் பெற்றிடும் தோற்றம் ஏற்றிடு--
கூற்றினை எதிர்க்கும் ஆற்றல் பெற்றிடு--
ஊற்றென அதனைப் போற்றிக் காத்திடு--
நெற்றியில் வியர்வை வற்றாது பொலிக--
ஒற்றைப் பாதையிலும் ஓங்கி நடக்க--
விற்று விடாதே கொள்கைப் பற்றை--
கொற்றம் கிடக்கும் உன்னைச் சுற்றி--
***********************************************************