மெய் விடுத்து உயிர் பிரிந்தால்
மெய் விடுத்து உயிர் பிரிந்தால்
மெய்யே பொய்யாய் ஆகுமடா
சீவன் பிரிந்த பின்னே உடற்கு
பேர்கூட சொந்த மில்லையடா ....!!
நிலையா யாக்கை உணரா மனமும்
நான்தான் எனவே ஆடுமடா
சர்வம் அடங்கி ஒடுங்கிய பின்னே
சித்தம் சுத்தி அடையுமடா ....!!
எளியோர் வதைத்து ஏய்த்துப் பிழைக்கும்
ஏற்றம் நற்கதி தருமோடா
கணக்காய் சேர்த்த பொன்னும் பொருளும்
கடைவழித் துணைக்கு வருமோடா ....??
பாதகம் செய்யும் பாவியர் நெஞ்சில்
பதற்றம் சிறிதும் இல்லையடா
பேராசைப் பிடியுள் சிக்குண்டு நாளும்
பேரிடர் பட்டே உழலுமடா .....!!
மாயையின் ஈர்ப்பில் கவரப் பட்டு
மானுட மதியும் மயங்குதடா
மார்ச்சரியம் புகுந்த இதயம் இறுகி
மனிதம் மறைந்தே போனதடா ....!!
முதுமையில் தாய்தந்தை பேணாப் பிள்ளை
மண்ணில் பிறந்ததே பாவமடா
முத்தமிழ் உணரா தமிழன் நிலையும்
முகவரி தொலைத்த தேடலடா ...!!
அன்பெனும் வித்து விதைக்கப் பட்டால்
அகிலத்தில் அமைதி நிலைக்குமடா
அதிகார வர்க்கம் வேரோடு அழிந்து
அடிமை நிலையும் மாறுமடா ....!!
புதுமைப் பெண்கள் புலமையில் சிறக்க
புன்னகைப் பூக்கள் மலருமடா
புவனம் முழுதும் அன்பின் அலையால்
புனிதம் அடைய வேணுமடா ....!!!